டிசம்பர் 2023
நெல்மணி காத்த மாமணி ஐயா.நெல்.செயராமன்
“விதைகளே நம் பேராயுதம்” என்பதை அண்மைக் காலத்தில் உணர்ந்த மேலைநாட்டவர்கள், உலகம் முழுமைக்கும் அலைந்து தன் அகங்கார அலகையைக் கொண்டு விதைகளைச் சேமிக்க துவங்கியுள்ளனர். இதனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த ஆதித்தமிழனின் விவசாய முறையும், விதை சேமிப்பு முறையும் வியக்கத்தக்கது.
“பசுமைப் புரட்சி” எனும் போர்வையில் நிலத்திற்கும் மண்ணிற்கும் செய்யப்பட்ட வன்முறையிலிருந்து தன்னைப் பாதுகாக்க அரும்பாடுபட்ட நாடுகளும், அதில் வாழும் ஒரு சில இனக்குழுக்களும் செய்த பணிகள் அளப்பரியன. அங்ஙனம் தமிழர்களிடையே பசுமைப் புரட்சியின் தாக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவரான ஐயா.கோ.நம்மாழ்வார் அவர்கள் காட்டிய பாதையில் வாழ்ந்து மறைந்தவர் தான், ஐயா.நெல்.செயராமன் அவர்கள்.
“நமது நெல்லைக் காப்போம்””என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், நம்மாழ்வாரின் தீவிர கொள்கைச் செயற்பாட்டாளர் ‘நெல்’ செயராமன் அவர்கள் திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு கிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு திருத்துறைப்பூண்டியில் அச்சகத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் பேச்சைக் கேட்டு அச்சக வேலையைத் துறந்துவிட்டு, அவர் மீண்டும் உழவுக்குத் திரும்பினார்.
2003 ஆம் ஆண்டு ஐயா நம்மாழ்வார் அவர்கள் ஏற்பாடு செய்த “நஞ்சில்லா உணவு” குறித்த ஒரு மாத விழிப்புணர்வுப் பரப்புரையில் அவர் பங்கேற்றபோது, சில கிராமங்களில் விவசாயிகள் காட்டுயாணம் உட்பட ஏழு பாரம்பரிய நாட்டு நெல் வகைகளின் விதைகளை வழங்கினர். ஐயா நம்மாழ்வார் அந்த விதைகளைக் கொடுத்து, அவற்றைப் பயிரிட்டு விதைகளைப் பாதுகாக்கும்படி செயராமனிடம் கூறினார். இதுவே அவர் நாட்டு நெல் வகைகளைத் தேடுவதற்கு உந்துதலாக அமைந்து, நெல் செயராமன் என்ற புனைப்பெயரையும் பெற்றுத்தந்தது.
2006 ஆம் ஆண்டில், அவர் நெல் விதைத் திருவிழாவை நடத்தி, அதில் ஒவ்வொரு விவசாயிக்கும் இரண்டு கிலோ நாட்டு நெல் இரக விதைகளை இலவசமாக கொடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் விவசாயி நான்கு கிலோ விதைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து அனுப்பினார். அந்த வகையில் நாட்டு நெல் வகையான மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகு சம்பா, குண்டுகார், சேலம் சம்பா, சிகப்பு குருவிகார், கல்லிமடையான், சம்பா மோசனம், வாடன் சம்பா, பிச்சவாரி, நவர மற்றும் நீலன் சம்பா உள்ளிட்ட 169 நாட்டு பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் அவர்.
இயற்கை விவசாயத்திற்குத் திரும்ப விரும்பும் விவசாயிகளுக்கு வழிகாட்டும் வண்ணம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் கிராமத்தில் நாட்டு நெல் வகைகள் மற்றும் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையத்தையும் அவர் நிறுவியுள்ளார். இதன் மூலம் செயராமன் அவர்கள் 37,000 விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி நாட்டு நெல் உற்பத்தியை அதிகரித்தார்.
2011ஆம் ஆண்டில் இயற்கை வேளாண்மையில் தனது பங்களிப்பிற்காக, சிறந்த இயற்கை விவசாயிக்கான மாநில அரசின் விருதையும், 2015இல் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான ஒன்றிய அரசின் சம்மான் விருதையும் பெற்றார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தன் இன்னுயிரை இயற்கை அன்னையிடம் அவர் ஒப்படைத்தார்.
விதை எனும் பேராயுதம் கொண்டு மரபை மீட்டுருவாக்கம் செய்த மாமனிதன் நெல். செயராமன் விதைத்த விதைகள் இன்று தமிழகமெங்கும் பரவிக்கிடக்கின்றன. விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் என்றும் உறங்குவதில்லை; அவை முளைக்க வேண்டி மண்ணை முட்டிமோதிக் கொண்டே இருக்கின்றன.
திருமதி. பவ்யா,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.