சூன் 2023
நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் கக்கன்
காத்திருந்து காலம் தமிழர்க்குக் கொடுத்த கொடை, கறைபடியாக் கரங்கள் கொண்டிருந்த நமது ஐயா கக்கன் அவர்கள். இவர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் தும்பைபட்டியில் பூசாரி கக்கனுக்கும்&குப்பி அம்மையாருக்கும் ஜூன் -18, 1908 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். தனது வாழ்நாளை முழுமையாக பொதுவாழ்வுக்கென அர்ப்பணித்த பெருந்தகை ஐயா கக்கன் அவர்கள், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, காந்தியவாதி போன்ற பன்முகங்களைக் கொண்டு, மக்கள் நலனுக்காக மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர்.
பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்த ஐயா கக்கன், தன்னுடைய மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் மக்களவை உறுப்பினராகவும், காமராஜர்- பக்தவச்சலம் அமைச்சரவையில் 10ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்தவர் இவர். பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வுத்துறை, பழங்குடியினர் துறை ஆகியவற்றில் 1957 ஆம் ஆண்டு பதவி வகித்ததோடு, 1962 ஆம் ஆண்டு முதல் 1963 ஆண்டு வரை விவசாயத்துறை அமைச்சராகவும், பின்னர்
1962 ஆம் ஆண்டு முதல் வணிக ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆண்டு வரை மாநில உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஐயா கக்கன் அவர்கள் மக்களுக்கான நல்லாட்சியைத் தர அரசியலில் நேர்மையாகவும் தூய்மையாகவும் இயங்கி ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுத்தவர். சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை எனப்பல மானுட குலத்துக்கு எதிரான சமூக அடக்குமுறைகள் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக நிலவி வந்த போது, அதிகாரத்தைச் சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தி எளிய மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தந்தவர். அக்காலக்கட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கோவிலுக்குள் நுழையத் தடை இருந்தது. இதனை இராஜாஜி அமைச்சரவையில் கோவில் உள்நுழைவு உரிமைச் சட்டம், 1939 கொண்டு வந்து அத்தடையை ஐயா கக்கன் அவர்கள் நீக்கினார்.
அமைச்சராக இருந்த காலத்தில் பல தடுப்பு அணைகள் கட்டவும், வேளாண் பல்கலைக்கழகம் கட்டவும் உறுதுணையாக இருந்த நமது கக்கன் ஐயாவை மலேசிய வேளாண்மை அமைச்சர் ஒருமுறை சந்தித்து, அவரின் எளிமையைப் பார்த்து, “உங்களுக்கு அன்பளிப்பாக ஒரு தங்கப் பேனாவைத் தருகிறேன்!” என்றார். ஐயா கக்கன் அவர்கள் அதை வாங்க மறுத்து, பின்னர் அதைப் பெற்று அரசு அலுவலகத்தில் வைக்கச் சொன்னார். அதை பார்த்த மலேசிய அமைச்சர், “உங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் கொடுக்கப்பட்ட எனது அன்பளிப்பு அது,” என்றார். அதற்கு கக்கன், “நான் தமிழ்நாட்டில் அமைச்சராக இருப்பதால்தானே இதைக் கொடுத்தீர்கள். இல்லையெனில், இதை எனக்குக் கொடுப்பீர்களா?” எனச் சொல்லி அந்தப் பேனாவைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதுவே ஐயா கக்கனின் எளிமையான நேர்மையான அரசியலுக்குச் சான்றாகும்.
தனது அமைச்சரவையை விட்டு அவர் விலகிய பின் அரசு விடுதியை விட்டு வெளியேறி, வாடகை வீட்டிற்காகத் தெருத்தெருவாக அலைந்த கொடுமையும் தமிழ்நாட்டில் நடந்தது. பின்பு முடக்க நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்த எம்.ஜி.ஆர் நேரடியாக ஐயா கக்கனைச் சந்தித்து, “உங்களுக்கு நல்ல சிகிச்சைக்காக ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்றார். அதற்கு ஐயாவோ “நீங்கள் பார்க்க வந்ததே போதும்” என்று சொல்லி இயல்பாகவே மறுத்தார்; சொத்தே இல்லாதவர் நாட்டிற்குச் சொத்தானார்.
தமிழக அரசால் அவருக்கு மதுரையில் முழுஉருவ சிலையும், சொந்த ஊரில் அவர் நினைவாக மணிமண்டபமும் கட்டப்பட்டது. ஐயா கக்கன் இந்நாட்டிற்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி ஒன்றிய அரசு அவரின் உருவம் பொறித்த சிறசேவைக்கும் அரசியலும் 1999-ஆம் ஆண்டு வெளியிட்டு மரியாதை செய்தது.
பெருந்தமிழர் ஐயா கக்கனின் அப்பழுக்கற்ற பொது வாழ்வை இன்றைய இளைய தலைமுறையினர் அறிவது அவசியம் . ஊழலிலும் பெரும் குற்றங்களிலும் உளுத்துப்போன சமகால அரசியல் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஐயா கக்கனின் உண்மைக்கும் நேர்மைக்கும் எளிமைக்கும் சேவைக்கும் இலக்கணம் வகுத்த பொதுவாழ்வும் அரசியலும் எப்படிப்பட்டது என்பதை ஐயாவின் பிறந்த நாளில் தவறாது நினைவுகூறுவோம்.
திரு. ச.பாலமுருகன்
சுபைல் மண்டலப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.