spot_img

பட்டியலினத்தவர் மீதான கொடும் அடக்குமுறைகளைக் களைய வாக்களிப்பீர் விவசாயிக்கு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

இணையதளப் பரப்புரை – #வெல்வான்_விவசாயி

ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி?

பட்டியலினத்தவர் மீதான கொடும் அடக்குமுறைகளைக் களைய வாக்களிப்பீர் விவசாயிக்கு!

சமூக நீதி சமூக நீதி என்று தொடர்ச்சியாக பேசிப் பேசி தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பிடித்த திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான், அன்று கீழ்வெண்மணியில் தொடங்கி இன்று வேங்கை வயல் வரை ஒடுக்கப்பட்டோர் மீது கொடும் அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டு கொண்டே இருக்கின்றன. அதிலும் திமுக ஆட்சி காலத்தில் எப்போதுமே சாதி தொடர்பான குற்றங்கள் அதிக அளவில் நடப்பதற்கு கடந்த நாலரை ஆண்டு விடியா ஆட்சியே சாட்சி.

நீயும் பட்டியல் இனத்தவர் போல தான் என்று யாரைப் பார்த்தாலும் சாதி என்னவென்று கேட்கும் பெரியார் சொன்னதாக துரைமுருகன் சொன்னது,  மேடையிலேயே நீ பட்டியல் இனத்தவர் தானேமா என்று பொன்முடி கேட்டது,  ஆர் எஸ் பாரதி நீதித்துறையில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் திமுகவின் பிச்சை, எனது ஓட்டுநர் சமையலர் கூட பட்டியலினத்தவர் தான் என்று சொல்வது, நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என தயாநிதி மாறன் கேட்டது, திமுகவின் ஆ ராசாவை பெரம்பலூர் தொகுதியில் இருந்து தனித் தொகுதியான நீலகிரியில் நிற்க வைப்பது என திமுகவினுடைய முக்கியமான தலைவர்களே ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களைச் சொல்லி என்ன பயன்? அவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கின்ற கருணாநிதியே நீங்கள் எல்லாம் பொது தொகுதியில் நிற்க ஆசைப்படலாமா என்று விசிகவினரைப் பார்த்து கேட்டிருக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?

தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி என திமுக நிர்வாகிகள் செய்யும் அட்டூழியத்தையும் தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். கோவிலுக்குள் நுழைந்ததற்காக இளைஞர் ஒருவரை மோசமான வார்த்தைகளால் ஆபாசமாகத் திட்டியது, திமுக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் பட்டியலின பெண் கொடுமைப்படுத்தப்பட்டது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் பட்டியல் இனத்தவராக இருந்தால் என்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது, கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது, கொடியேற்றக் கூடாது, கூட்டத்தில் பேசக்கூடாது, அவ்வளவு ஏன் நாற்காலியில் கூட அமரக்கூடாது, நின்று கொண்டு தான் பேச வேண்டும் என நிர்பந்திக்கும் திமுக நிர்வாகிகள் பற்றிய செய்திகள் எத்தனை எத்தனை?

அதிகாரத்தில் இருப்பவர்கள் இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்ளும் பொழுது, அதை பார்த்து சமூகத்திலும் பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி 2021 – 1377, 2022 – 1761, 2023 – 1921 என பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். விசாரணை கைதிகளில் பலர், காவல்துறையால் செய்யப்படும் மோதல் கொலைகள் அல்லது என்கவுண்டர்கள், காவல் நிலையம் மற்றும் சிறைத்துறை மரணங்களிலும் பெரும்பாலும் உயிரிழப்பவர்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினராக இருக்கின்றனர். மரக்காணம் மற்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தவர்கள். சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை ஆக்கிரமிப்பு என்று இடிக்கப்படும் பல வீடுகள்  ஒடுக்கப்பட்டவர்களுடையதாக இருக்கிறது. தூய்மை பணியாளர்களின் நெடும் போராட்டம் இரக்கமின்றி நசுக்கப்படுகிறது. தீண்டாமை சுவர்களும், இரட்டைக் குவளைகளும், சாதிய பஞ்சாயத்துகளும், அடிமைத்தன கட்டுப்பாடுகளும் இன்றளவும் தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கத்தான் செய்கின்றன. ஒடுக்கப்பட்டவரைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ள அரசு, அவர்கள் வதைபடுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது எவ்வகை நியாயம்?

ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதும், ஆதித்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் புரட்சித் தமிழகம் கட்சியின் ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுவதுமே சாதாரணமாக நடக்கும் பொழுது, திராவிட மாடல் திமுக ஆட்சியில் அன்றாடம் காய்ச்சி அடித்தட்டு ஏழை மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

அண்மையில் பள்ளிகளில் மாணவர்கள் சாதிய பாகுபாடு சார்ந்த குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது. எல்லாரையும் விட நன்றாக படிப்பதற்காக, பெரிய வண்டி ஓட்டியதற்காக, கபடி ஆடியதற்காக சக பள்ளி மாணவர்களால் இன்னொரு மாணவர் வெட்டப்படுவது எல்லாம் என்ன மாதிரி மனநிலை? இது குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு ஆணையத்தின் அறிக்கை என்னவானது?

எதற்கெடுத்தாலும் பாஜக ஆளும் உபியை பார் மபியை பார் என்று சொல்லும் திமுக ஆட்சியில் தான், பட்டியலினத்தோருக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதம் 12.2% (தேசிய சராசரி கூட 31.9%) என்ற அளவில் மிக குறைவாக உள்ளது என நாம் கேட்கவில்லை.  திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் பாராளுமன்ற உறுப்பினர் இரவிக்குமார் கேட்கும் கேள்விக்கு திமுகவின் பதில் என்ன?

 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தமிழ்நாட்டில் அண்மைக்கால சமூக வரலாற்றில் மோசமானதொரு கரும்புள்ளி. இன்று வரை அவ்வழக்கு நடைபெறும் விதம் நிஜத்துக்கும் நீதிக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காட்டுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களின் குடிநீர் தொட்டியில், மலம் கலந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிட, விசாரணைக்கு முன்பே தொட்டி இடித்து தள்ளப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் இனத்தவர் வழிபாடு செய்வது தொடர்பான சிக்கல் வந்த பொழுது, பொது அமைதியைச் சீர்குலைக்காமல் இருக்க கோயிலைப் பூட்டி மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்த அதிசயம், தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுக்காக வைக்கம் வீரர் பட்டம் வென்றதன் நூற்றாண்டு விழா காணும் பெரியார் மண்ணில் நடப்பது எவ்வளவு பொருத்தமானது.

 வெறும் வாயால் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் பேசும் திராவிட கட்சிகளின் ஏமாற்று வித்தைகளுக்கு தமிழ் மக்கள் மயங்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. இத்தனை ஆண்டு காலம் ஒடுக்கப்பட்டவர்களை  சமூக அவலங்களில் இருந்து காக்க முயலாத இந்த திராவிட அரசுகளா, இனி வரும் ஆட்சியில் ஒடுக்கப்பட்டோரை காக்க போகின்றன? வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரிய சனாதன தத்துவத்தை முன்னிறுத்தும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா போன்ற தேசிய கட்சிகள் மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட பிற்போக்கு சக்திகள். அதற்கு காவடி தூக்கும் திமுக அதிமுக கட்சிகளின் திராவிட சனாதனம் ஆரிய சனாதனத்துக்கு சற்றும் குறைவில்லாதது. நமக்குள் பகைமூட்டி நம்மை நமக்கே எதிரியாக்கி, தொடர்ந்து நம்மை ஆளும் அதிகாரத்தை அவர்கள் கையில் தக்க வைக்க திராவிடக் கட்சிகள் பயன்படுத்தும் உத்தி தான் சாதிய மோதல்களும் கலவரங்களும். இதனை உணராத, உணர்ந்தும் எதுவும் செய்யாத தமிழ் சமூகம் ஒரு அங்குலம் அளவுக்கு கூட முன்னேற இயலாது.

ஆதித்தமிழர் விடுதலை இல்லாது மீதித்தமிழர் விடுதலை வெல்லாது என்பதை நாம் தமிழர் கட்சியின் முழக்கம். சாதியை நிறுவனமயப்படுத்தி மக்கள் வாழிடங்களை ஊராகவும் சேரியாகவும் பிரித்தாளும் இந்த திராவிட ஓநாய்களின் சூழ்ச்சிக்கு முடிவுரை எழுதுவோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் தமிழ்மறை கருத்தைத் தூக்கிப் பிடிக்கும் தமிழ்த் தேசியத்தை ஆள வைப்போம்! சாதிய ஏற்றத்தாழ்வை ஒழித்தழிக்கும் உறுதி ஏற்றுள்ள நாம் தமிழர் கட்சியின் ஆட்சியை அமைப்போம்! ஒடுக்கப்பட்டவர்கள் மீதான கொடும் அடக்குமுறைகளைக் களைய வாக்களிப்பீர் விவசாயிக்கு!

திருமதி. விமலினி செந்தில்குமார், கொள்கை பரப்புச் செயலாளர், செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles