மார்ச் 2025
பண்டைத் தமிழனின் பொதுமை நோக்கும் சமூக அறமும்
முன்னுரை:
செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழினம், தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள் ஆகிய அனைத்தும் மிகுந்த தொன்மை சார்ந்தவை என்பது தற்போது ஆய்வறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கினார்கள். தன்னலம் நீக்கி, பொதுநலம் நோக்கித் தம் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். எந்த ஊராயினும், அதை நமது ஊராகவேக் கருதி ஒன்றுபட்டு வாழ்வோம்; நமக்கு அயலார் அல்ல; அனைத்து மக்களும் நமது உறவினர்களே என்னும் பரந்த நோக்குடையவர்களாக உயர்ந்து நின்றிருக்கிறார்கள் ! இந்தக் காட்சியை விளக்கும் பாடல் இதோ !
புறநானூறு பாடல் (192):
யாதும் ஊரே ! யாவருங் கேளிர்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்
இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-- கணியன் பூங்குன்றனார்
அருஞ்சொற்பொருள்:
யாதும் – அனைத்தும்; ஊரே – நமது ஊர்; யாவரும் – அனைவரும்; கேளிர் – உறவினர்; தீதும் – தீயவையும்; நன்றும் – நல்லவையும்; பிறர் தர – பிறர் தருவதால்; வாரா – வருவதல்ல; நோதலும் – வருந்துவதும்; தணிதலும் – அது தீர்வதும்; அவற்றோர் – அவற்றை; அன்ன – போல; சாதலும் – சாவது; புதுவது – புதிது; அன்றே – இல்லை; வாழ்தல் – வாழ்தல்; இனிது என – இனியது என; மகிழ்ந்தன்றும் – மகிழ்வதும்; இலமே – இல்லை; முனிவின் – வெறுத்து; இன்னாது – துன்பம் மிக்கது; என்றலும் – என்று சொல்வதும்; இலமே – இல்லை;
மின்னொடு – மின்னலுடன்; வானம் – வானம்; தண் துளி – குளிர்ந்த மழைத் துளி; தலைஇ – பெய்வதால்; ஆனாது – இடை விடாது; கல் பொருது – கல்லுடன் மோதி; இரங்கும் – ஒலிக்கும்; மல்லல் – வலிமை மிக்க; பேர்யாற்று – பெரிய ஆற்றில்; நீர் வழிப்படூஉம் – நீரின் ஓட்டத்தின் வழியே செல்லும்; பயணப்படும், புணை போல – மிதவை போல; (தெப்பம் போல);
ஆர் உயிர் – அரிய உயிர்; முறை வழிப்படூஉம் – முறைப்படி செல்லும்; என்பது – என்பது; திறவோர் – திறம் கொண்டு அறிந்தோர்; காட்சியின் – தந்த அறிவின் மூலம்; தெளிந்தனம் – தெளிவு பெற்றோம்; ஆகலின் – ஆனதால்; மாட்சியின் – பெருமை மிக்க; பெரியோரை – பெரியவர் என்று; வியத்தலும் – வியந்து அடிபணிவதும்; இலமே – இல்லை; சிறியோரை – சிறியோர் என்று; இகழ்தல் – பழித்தல்; அதனினும் – அதனை விட; இலமே – இல்லை.
[பாடியவர் – கணியன் பூங்குன்றனார்]
பொருளுரை:
நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை. துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்த்தலும் அதைப் போன்றவை தான். மனிதன் மடிந்து போதல் என்பது என்றும் நிகழ்வது தான்; புதிது அன்று ! இப்பூவுலகில் வாழ்தல் இனிமையானது என்று நாம் மகிழ்வதும் இல்லை; வெறுப்பால் வாழ்க்கை இனியது இல்லை என்று குறை கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால், அந்த நீர் பெருக்கெடுத்து ஓடி முடிவில்லாது கல்லுடன் மோதி மோதி ஒலியெழுப்பி வலிமை மிக்க பெரிய ஆறாக மாறுகிறது! அந்த ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே அடித்துச் செல்லப்படும் செல்லும் தெப்பத்தைப் போன்று, நம் வாழ்க்கையும் ஊழ் முறைப்படி அமையும் என்பதை அறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் கண்டு நாம் வியப்பதும் இல்லை; மாண்பில்லாத சிறியோர் என்று யாரையும் நாம் இகழ்வதும் இல்லை! எந்த ஊராயினும் அது நமக்கு அயலாரின் ஊர் அன்று; அதுவும் நமது ஊரே ! மக்கள் அனைவரும் நமது உறவினர்களே; அவர்கள் நமக்கு வேண்டாதவர்களும் அல்ல !
திரு. சி. தோ. முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.