spot_img

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – வினேஷ் போகத் தகுதியிழப்பு – அரசியல் சூழ்ச்சி

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – வினேஷ் போகத் தகுதியிழப்பு – அரசியல் சூழ்ச்சி

இந்திய ஒன்றியத்தினுடைய தங்கக் கனவு தகர்ந்து போயிருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக்கின் பின்னால் இருக்கக்கூடிய பன்னாட்டு அரசியல் இந்தியர்களின் தங்கக் கனவை பறித்துள்ளது. ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு அரசியல் மேடை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

வினேஷ் போகத் வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 100 கிராம் எடை என்பது அவர் எடையில் வெறும் 0.02 சதவீதம் தான். அதைக் காரணம் காட்டி தகுதி இழப்பு செய்து பதக்கமே இல்லை என நாட்டிற்கு திருப்பி அனுப்பிய கொடூரம் பதைபதைக்கச் செய்கிறது.

உண்மையில் ஒலிம்பிக் என்பது வெறும் விளையாட்டுப் போட்டி கிடையாது. உலகத்திலேயே அதைப் போன்று அரசியல் மேடை வேறு எங்கும் பார்க்க முடியாது.வினேஷ் போகத் வெறும் 100 கிராம் எடையால் தங்கப் பதக்கத்தை இழந்திருக்கலாம் ஆனால் 140 கோடி இந்தியர்களின் இதயத்தை வென்றிருக்கிறார். “வினேஷ் போகத்” என்ற சிங்க பெண்ணின் கதையை தான் வரி வடிவில் வாசிக்க இருக்கிறோம். வாருங்கள்!…

யார் இந்த வினேஷ் போகத் ?

ஆகத்து 25, 1994 ஆம் ஆண்டு அரியானா மாநிலத்தில் பலாலி எனும் சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எளிய மகள். பெண்கள் முக்காடு போட்டுக்கொண்டு முகத்தை காட்ட முடியாமலும், அடுப்பங்கரையை தவிர வேறு உலகை பார்க்க முடியாத சுதந்திரமற்ற சூழலிலும் இருந்த பெண்கள் மத்தியில், பெரும் துணிச்சலோடும், பெருங்கனவோடும் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் மல்யுத்த பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தந்தை ராஜ் பால் சிங் பிரபல மல்யுத்த வீரர் மகாவீர் சிங் என்பவருடைய இளைய சகோதரர் ஆவார். மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகத், பபிதா குமாரியும் வினேஷின் ஒன்றுவிட்ட சகோதரிகள் ஆவர்.

மூவருமே சமூகம் பெண்களுக்கு இழைக்கப்படும் அத்தனை கட்டுப்பாடுகள், அவமானங்கள் அனைத்தையும் மீறி சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் மல்யுத்த விளையாட்டு களத்தில் இறங்கினர். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று இருந்த மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் பெண்களும் சாதிக்க முடியும் என நிரூபித்து காட்டியவர்கள்.

ஆணுக்குப் பெண் சமம் இல்லை என கேலி பேச்சுகள் பேசுபவர்கள் மத்தியில் ஆணுடன் போட்டியிட்டு எந்த விதத்திலும் ஆணுக்கு குறைந்தவர்கள் அல்ல என களத்திலேயே பட்டையை கிளப்பியவர்கள். ஒட்டுமொத்த பலாலி கிராமமும் அரியானா மாநிலம் முழுமைக்கும் இவர்களின் சாதனை பெரும் வியப்பை கொடுத்தது. பின்னாளில் இந்தியாவே பெருமைப்படும் அளவுக்கு உலக அரங்கில் தங்க மகள்களாக வளம் வருவார்கள் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் அதையும் சாதித்துக் காட்டினார்கள் அவர்கள்.

வினேஷ் போகத்தின் சாதனைகளும் பதக்கங்களும் :

டெல்லியில் நடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அதே ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 51 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றார். 2015 ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் 2016 ரியோ கோடைகால ஒலிம்பிக்கில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து வெளியேறினார். இதன் பிறகு 2018 இல் நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.

2019 ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்றார். 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இத்தனை சாதனைகளையும், பதக்கங்களையும் வாசிக்கின்ற நமக்கே தலை சுற்றும் அளவுக்கு வியப்பை தருகிறது. இவை வெறும் பதக்கங்கள் அல்ல. வினேஷ் தாங்கிய வலிகளின் ஒட்டுமொத்த உருவங்கள். ஒவ்வொரு முறையும் தன் கழுத்தில் பதக்கங்களை சுமந்து நிற்கும் போதெல்லாம் சாதிக்கத் துடிக்கும் அனைத்து பெண்களின் பிரதிநிதியாகவே நிற்பதாக சொல்லிக் கொள்வார். அந்த எண்ணம் போலவே சாதித்தும் காட்டினார்.

சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக டெல்லியில் ஜந்தர் மந்திரில் யாரும் அவ்வளவாக கவனிக்கப்படாத அளவில் அந்தப் போராட்டம் தொடங்கியது. ஆசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய ஒன்றிய மல்யுத்த வீராங்கனைகள், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் அரசியல் அதிகாரம் கொண்ட பாலியல் இச்சையில் மூழ்கிப்போன அரக்கன் பிரிட்ஜ் பூஷன் சரண்சிங்  என்பவனுக்கு எதிராக வினேஷ் போகத்தும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளும் தங்களுக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடினர்.

நாட்டின் தங்க மகள்கள் காவல்துறையால் தெருவில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். இந்த தேசம் வாய் பொத்தி , கண் மூடி , கண்டும் காணாமலும் இருந்தது. வினேஷ் போகத்தின் நெஞ்சுரம் சக வீராங்கனைகளுக்கு மிகப்பெரும் தன்னம்பிக்கையை ஊட்டியது. போர்க்களத்தில் வாள் ஏந்தி நிற்கும் வீரனை போல, அதிகார போதை கொண்ட எஜமானர்கள் அகங்காரம் பொசுங்கும் அளவுக்கு, வானில் முழங்கும் பேரிடியைப் போல , கர்ஜிக்கும் பெண் சிங்கமாய் தன் நீதி குரலை மக்களிடையே கொண்டு சேர்த்தார்.

தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முற்பட்டு போராட்டத்தை தேசிய அளவில் கவனம் ஈர்க்கச் செய்தார். இவர் முன்நின்று போராட்ட களத்தை முன்னெடுத்துச் சென்றதாலேயே அரசை ஆளும் ஆண்டைகளின் கண்கள் இவர் மேல் விழுந்தது. அதிகாரம் என்ன செய்யும்? என்று கேட்பவர்களுக்கு, இனி வரும் வரிகள் வாசிப்பவரின் கண்களை நிரம்பச் செய்யும் அளவுக்கு இந்த தேசம் செய்த மோசம் விளங்கும்.

வினேஷைப் புறந்தள்ளிய இந்திய ஒன்றிய மல்யுத்த கூட்டமைப்பு :

ஒரு வருட கடும் போராட்டத்தினால் மனதளவிலும், உடலளவிலும் தனக்கு ஏற்பட்ட வலிகளின் காரணமாக அந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே தனது பயிற்சியை விட்ட இடத்தில் இருந்து தொடங்க ஆரம்பித்தார். இந்த இடைப்பட்ட இடைவெளியின் போது இந்திய ஒன்றிய மல்யுத்த கூட்டமைப்பின் ஆளுமைகள் வினேஷ் க்கு எதிராக தங்கள் முதல் காயை நகர்த்தத் தொடங்கினர்.

ஆசிய விளையாட்டுக்கான தகுதிச் சுற்றில் தகுதி பெறும் நிலையில் இருந்த போதும் வினேஷுக்கு எதிராக அவரிடத்தில் 53 கிலோ எடைப் பிரிவில் வேறொரு வீராங்கனைக்கு பயிற்சி கொடுத்து அனைத்து தரப்பிலும் அந்த வீராங்கனைக்கு ஆதரவு கரம் நீட்டி போட்டியில் பங்கேற்கச் செய்தனர்.வினேஷ் போகத் எந்த ஒரு போட்டியிலும், பயிற்சிகளிலும் ஈடுபட முடியாத அளவிற்கு சூழ்ச்சியை செய்து வந்தது அவ்வமைப்பு. இந்த சூழ்ச்சியை உணர்ந்த வினேஷ் போகத் தனக்கு வரப்போகும் ஆபத்துகளை ஏப்ரல் மாதம் தனது X தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்கிறார்.

” எனக்கு மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து எந்த ஒரு ஆதரவும், பயிற்சியும் தர மறுக்கின்றனர். இவர்கள் தரும் ஊசி, மருந்து கூட உட்கொள்ள எனக்கு பயமாக இருக்கின்றது. நான் போதைப் பொருள் உட்கொண்டேன் என பொய் கூறி சூழ்ச்சி செய்ய வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. என்னை தகுதி இழப்பு செய்ய எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.” என மிகப் பெரும் இக்கட்டான சூழலில் இந்தப் பதிவை X தளத்தில் பதிவு செய்து இருக்கிறார். இந்த அரசியல் சூழ்ச்சியில் தான் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக 53 கிலோ எடை பிரிவிலிருந்து , 50 கிலோ எடை பிரிவில் களமிறங்க துணிச்சலான ஒரு முடிவை எடுக்கிறார்.

உண்மையில் இது சாத்தியமா என்று கேட்டால் உலகம் முழுக்க சாத்தியம் தான். ஒரு தடகள வீரர் தன் எடையில் 3 அல்லது 4 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்றால் ஓரிரு நாட்களில் குறைக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட சவாலான சூழலில் இத்தனை அதிகார மிரட்டல், துரோகங்களுக்கு மத்தியில் என்ன செய்யப் போகிறார் வினேஷ் போகத் என்பது மிகப் பெரும் வியப்பாக்கவே இருந்தது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் வினேஷ் போகத் :

கடுமையான எதிர்ப்பு, அரசியல் சூழ்ச்சி இவை அனைத்தும் கடந்து 50 கிலோ எடை பிரிவில் பதக்கம் வெல்ல ஒரு வழியாக பாரிஸில் கால் பதித்தார் வினேஷ் போகத். போட்டியில் கலந்து கொள்ள தகுதிச் சோதனையின் போது வினேஷ் 49.9 கிலோ எடையில் தனக்கான அங்கீகாரத்தை தனதாக்கி கொண்டார். ஆகத்து 6 , முதல் நாள் முதல் போட்டியில் வினேஷ் தோற்று ஒன்றும் இல்லாமல் வெளியேற்றப்படுவார் என கழுகு போல் காத்திருந்த அனைவரின் நெற்றி பொட்டில் அடித்தார் போல் சம்பவம் ஒன்றை செய்து காட்டினார். சப்பானிய வீராங்கனை யூயி சுசாகி யாருமே வீழ்த்த முடியாத வீராங்கனை என முத்திரை பதித்தவர். இதுவரை அவர் பங்கேற்ற 82 சர்வதேச போட்டிகளில் வென்று காட்டியவர். அப்படிப்பட்ட மாபெரும் வீராங்கனையை வினேஷ் போகத் தனது முதல் நாள் முதல் போட்டியிலேயே 3-2 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து உலக சாதனையை செய்தார். இந்த செய்தி உலக அரங்கையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்திய ஊடகங்கள் ஏனோ அதை பெரிதாய் கண்டுகொள்ளாமலேயே இருந்தது.

உண்மையில் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததா? அல்லது யாரேனும் ஊடகங்களை இதைப் பற்றி காண்பிக்க விடாமல் தடுத்ததா? . இது அவர்களுக்கே தெரிந்த ரகசியம். அதே நாளில் இரண்டாவது போட்டியில் கால் இறுதிச் சுற்றில் ஒக்ஸானா லிவாச் என்கிற உக்ரைன் வீராங்கனையோடு களத்தில் போட்டியிட்டு 7-5 என்ற புள்ளியில் உக்ரைன் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். ஆயிரம் வலிகளை கடந்து ஒவ்வொரு அடியாய் பார்த்து பார்த்து தன் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறிக் கொண்டிருந்தார் வினேஷ் போகத்.

மூன்றாம் போட்டி தங்கம் வெல்ல வேண்டும் என்றால் இந்தப் போட்டியை கடந்தாக வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். கியூப வீராங்கனையான யுஸ்நேலிஸ் குஸ்மான் பேன் அமெரிக்கன் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை ஆவார். எளிதில் வீழ்த்த முடியாது என்று பலரும் வினேஷைக் குழப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் வினேஷுக்கு அது எளிதாகவே இருந்தது. 12-4 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை அடைந்தார். பதக்கம் உறுதியானதை அவரின் கண்ணீர் வடிந்த கண்ணீரை கண்டதும் புரிந்தது. அதை கண்ட அரங்கமே உணர்ச்சிப் பெருக்கில் ஆர்ப்பரித்தது.

வலி மிகுந்த சூழலில் தனக்கான அடையாளத்தை ஒரு பெண் அடைகிறாள் என்றால் அது சாதாரண காரியம் கிடையாது. விண்ணுயரும் மகிழ்ச்சியில் நாட்டு மக்களும் , வினேஷ் போகத்தும் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், தனக்கு நடக்கப் போகும் அநியாயம் பற்றி அறியாமல் இருந்த வினேஷுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.

வினேஷ் போகத்தின் தங்கக் கனவு தகர்ந்தது :

நாடு எதிர்நோக்கிக் கொண்டிருந்த வினேஷ் போகத் இன் தங்கக் கனவு விடியும் முன்னே கலைந்து போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இறுதிப் போட்டிக்கு முந்திய நாள் இரவு எடை பரிசோதனை செய்தபோது காத்திருந்தது அந்தப் பேரதிர்ச்சி. 49.9 கிலோ எடை இருந்த வினேஷ் தற்போது கூடுதலாக 2.7  கிலோ கூடி 53 கிலோவை நெருங்கி  இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரே நாளில் எப்படி இரண்டு புள்ளி ஏழு கிலோ எடை கூட முடியும்?  இது எப்படி நடந்தது? என்ற பெரும் குழப்பத்தில் இருந்தார் வினேஷ் போகத். இதை கேள்விப்படும் நமக்கே பெரும் சந்தேகங்களை எழுப்புகிறது. உலகின் மிகப்பெரும் நாடுகளில் ஒன்றான நம் இந்தியா எப்படிப்பட்ட கட்டமைப்புகளை கொண்டு செயல்படும் என்று இந்த உலகம் அறியும்.

குறிப்பாக தடகள வீரர்களுக்கு என கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள். ஒரு வீரருக்கு 12 பேர் கொண்ட குழு என்ற கட்டமைப்பில் அந்த வீரருக்கு சிறிதளவும் அசம்பாவிதம் மற்றும் உடல்நலக் கோளாறு போன்றவை நடக்காமல் தடுக்க எப்பொழுதும்  கூடவே இருப்பார்கள். அதில் பிசியோதெரபிஸ்ட், மனநல மருத்துவர், உடல் எடை பராமரிப்பாளர், உணவு ஏற்பாட்டாளர், பணியாளர் என பலரும் 24 மணி நேரமும் அவருடன் செயல்படும் அளவுக்கு ஒரு கட்டமைப்பை தடகள கூட்டமைப்பு உருவாக்கி இருக்கும். அப்படி இத்தனை பேர் கூட இருந்தும் உடல் எடை கூடியது எப்படி? என்ற சந்தேகத்தை தான் நமக்கு எழுப்புகிறது.

மறுநாள் எடை பரிசோதனைக்கு முன் எப்படியாவது பழைய எடைக்கு திரும்ப வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு இதயத்தை கணக்கச் செய்து விட்டது. சாதாரணமாகவே ஒரு தடகள வீரருக்கு உடலில் தேவையற்ற கொழுப்பு எதுவுமே இருக்காது. உடல் முழுவதும் நீராலயே இயங்கும் அளவிற்கு தங்களை தயார் செய்து கொள்வர். ஆனால் வினேஷ் அன்றைய இரவில் நீர் அருந்துவதையே நிறுத்திவிட்டார். உடலில் இருக்கும் வியர்வையை கூட வெளியேற்றலாம் என்று கடினமாக ஓடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். பழு தூக்குதல்,  உடற்பயிற்சி, உடல் எடையை குறைக்கும் அனைத்து பயிற்சிகளையும் அந்த இரவு முழுவதும் உறங்காமல் அத்தனை பயிற்சிகளையும் செய்து முடித்தார். உச்சபட்சமாக தன் தலை முடியையும் வெட்டிக் கொண்டார். இருந்தும் எதிர்பார்த்த அளவுக்கு எடை குறையவில்லை.

யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு துணிச்சலான முயற்சியையும் செய்கிறார். உடலில் உள்ள ரத்தத்தையும் வெளியேற்றி உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார். ஒரு பெண் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்த அந்த நொடிகளை கற்பனை கூட நம்மால் செய்து பார்க்க முடியாது. அத்தனை துன்பத்தை அந்த ஒரே நாள் இரவில் அனுபவித்திருக்கிறார் வினேஷ் போகத். மறுநாள் காலை போட்டி தொடங்கும் 15 நிமிடத்திற்கு முன்னால் உடல் எடை பரிசோதனை செய்ய அழைக்கப்படுகிறார். உடல் எடை பரிசோதனை செய்யும் மேடையில் ஏறி நின்ற போது காத்திருந்தது அந்தப் பேரதிர்ச்சி. சரியாக 50.100 கிராம் எடை என காட்டப்படுகிறது. இதயம் நொறுங்கிப் போய் அழுது விழுந்தார் வினேஷ் போகத். எத்தனையோ முறை முறையிட்டும். ஒலிம்பிக் ஆணையம் நிராகரித்து விட்டது.

வினேஷை தகுதி நீக்கம் செய்து ஒலிம்பிக் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அவருக்குப் பதில் முந்தைய போட்டியில் தோற்றுப் போன வீராங்கனையை தேர்வு செய்தது ஆணையம். தங்கப்பதக்கம் வெல்லும் கனவு அந்த கணமே கனவாய் போனது.

தகுதி நீக்கம் யாருடைய தவறு ?

தொடர்ச்சியாக மூன்று போட்டிகள் யாரும் சாதிக்காத அளவிற்கு புள்ளி பட்டியல் பெற்றிருந்தார். ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன் எடை பரிசோதனையும் நடைபெற்றது. எதிலுமே தவறு நடக்க முடியாத அளவிற்கு மெல்ல மெல்ல மேல ஏறி தங்கத்தை தொடப்போகும் நேரத்தில், ஒரு நாள் இரவில் 100 கிராம் எடை கூடுதலால் ஓட்டு மொத்த வாழ்க்கையும் அதளப் பாதாளத்தில் புதைந்து போகும் அளவிற்கு அநியாயம் நிகழ்ந்தது யாரால்?

வினேஷ் போகத்தை சுற்றி இருந்த 12 பேர் செய்தது என்ன? வழக்கமாக அவருக்கு கொடுக்கப்படுகிற உணவு, நீர், மருந்து என பார்த்து பார்த்து உட்கொண்டும் அனைத்திலும் எடை கூடும் அளவிற்கு செய்தது யார்? இந்தக் கேள்விதான் நமக்கு திரும்பத் திரும்ப எழுகிறது. ஒருவேளை வினேஷ் தான் இதற்குக் காரணம் என நீங்கள் சொன்னாலும் கூட அவரை பார்த்துக் கொள்ள அனுப்பப்பட்ட நபர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் எப்படி வேறு உணவை அவர் எடுத்துக் கொண்டிருப்பார்?

ஒரு வீராங்கனை தன் உயிர் மூச்சாக கொண்ட தங்கக் கனவை அவளே எப்படி நாசம் செய்திருக்க முடியும். தகுதி நீக்கம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நாடே கண்ணீர் சிந்தி கரைந்து கொண்டிருந்த வேளையில், இந்திய தடகள விளையாட்டு சங்கத்தின் தலைவர் அம்மையார் P.T. உஷா அவர்கள் கொடுத்த பேட்டி ஒட்டுமொத்த கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்குமான விடையை வெளிச்சம் போட்டு காட்டியது. அந்தப் பேட்டியில் இருந்து எப்பேர்ப்பட்ட அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்தினார்கள் என்பது புலப்படச் செய்தது. அம்மையார் P.T. உஷா அவர்கள் வினேஷ் க்கு ஆறுதல் கூறுவதாக ஒரு நாடகத்தை நிகழ்த்தி வெளியே வந்ததும் பத்திரிக்கையாளர் முன்னிலையில் வினேஷ் போகத்தின் தகுதி இழப்பிற்கு ஒட்டுமொத்த காரணம் அவர்தான் என கூறியது மட்டும் இல்லாமல், இதற்குப் பின்னால் இந்திய ஒன்றிய தடகள விளையாட்டு சங்கமோ, இந்திய ஒன்றிய மல்யுத்த கூட்டமைப்போ காரணம் கிடையாது என பகிரங்கமான ஒரு அறிக்கையை பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெரிவித்தார். இந்த செய்தி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை கிளப்பியது.

ஒருவர் கனவை அழிப்பது கருவில் உள்ள சிசுவை அழிப்பது போல் ஆகும். ஒரு காலத்தில் அம்மையார் P.T. உஷா அவர்கள் கூட பல வலிகள், தடைகளை தாண்டி சாதித்தவர் தான். அவராலேயே இன்னொரு பெண்ணின் உணர்வை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைக்கும் போது அவர் மீது கொண்ட மதிப்பும் மண்ணாய் போகிறது.

ஒரு வீராங்கனை சக வீராங்கனைக்கு நடந்த பாலியல் அநீதிக்காக வீதியில் இறங்கி போராடியதாலேயே, இப்போது வினேஷ் போகத்தை வஞ்சம் வைத்து பழி வாங்கியுள்ளது. ஒட்டுமொத்த அரசியல் பலமும், அதிகார வலிமையும் கொண்டு ஒரு எளிய மகளை உலக அரங்கின் முன் அசிங்கப்படுத்தி, அவர் கனவை சிதைத்து நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்தது பெரும் கொடுமையாகும்.

அதிகாரத் திமிரில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை நீங்கள் நிரூபிக்க, வலி தாங்கி நின்ற பெண்ணை பலி கொடுப்பது நியாயமா? கங்கையை பெண்ணாக, புனிதத்தின் உச்சமாக கருதும் இந்த நாடு, அதன் மகளையே காரி உமிழ்வது நியாயமா? இது ஜனநாயக அரசியலா? அல்லது உங்கள் வக்கிர புத்தியை காட்ட பயன்படுத்தும் ஆயுதமா? விதை விதைத்தவன் வினையை அறுவடை செய்து தான் ஆக வேண்டும். காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.

திரு. வன.லெனின்,

ஊடகப் பிரிவு பொறுப்பாளர்,

செந்தமிழர் பாசறை – ஐக்கிய அரபு அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles