மார்ச் 2024
புரட்சி வேங்கை செ. முத்துப்பாண்டி
பள்ளங்களும் மேடுகளும் மாறிமாறி வரும் இப்பூமியைப் பசுமையாக்க ஓடும் ஆறு, தனக்கான பாதையை உருவாக்கி, தான் பயணிக்கும் வழியெங்கும் உயிர்கள் பயன்பெறும் வகையில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோல தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு, அப்பயணத்தில் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும்; தமிழ்த் தேசியம் வெல்ல வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு களத்திலே முழங்குபவர் தான் மருது மக்கள் இயக்க நிறுவனர், புரட்சி வேங்கை செ.முத்துப்பாண்டி அவர்கள்.
துவக்க காலத்தில் ஒரு தொழில்முறை வணிகராக மதுரை, சென்னை, மும்பை என ஒன்றியத்தின் பெருநகரங்களை நோக்கித் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வியாபாரம் செய்துவந்தவர், ஒரு கட்டத்தில் மருது மக்கள் இயக்கத்தை நிறுவி தமிழ், தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துச் சிறை சென்று களத்தில் நிற்பதைக் கண்டு “தமிழ் மொழி காத்த போராளி” என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. திரைத்துறையில் ஆர்வம் கொண்டு அவ்வப்போது பயணிப்பதோடு, மதுரையில் இருந்து வெளி வருகிற “வைகைமலர்” மாத இதழுக்குத் துணை ஆசிரியராகவும் இவர் இருக்கிறார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சிவரக்கோட்டை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட வே.செண்பகம் – இராஜாத்தி இணையருக்கு மூன்றாவது குழந்தையாக 1979 சனவரி திங்கள் 15ஆம் நாள் முத்துப்பாண்டி அவர்கள் பிறந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் தான். முதன்முதலாக தனது அரசியல் வாழ்க்கையை முக்குலத்தோர் அரசியல் களத்தில் ஆரம்பித்து 2008 வரை அதில் இருந்தார். 2009 ஈழ இன அழிப்பு நடைபெற்ற போது மதுரையில் அதனைக் கண்டித்து நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் தனது பங்கையாற்றினார்.
ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பழ.நெடுமாறன் ஐயா தலைமையில் இயங்கிய போது, அதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்த பள்ளப்பட்டி ரவி தன் உடம்பில் நெருப்பை ஏற்றி இறந்த போது மதுரையில் பெரும் போராட்டத்தைச் செய்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தவர் இவர்.
2009 முதல் 2012 வரை முக்குலத்தோர் அரசியலில் அகமுடையர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைப் பரப்புரையாக மேற்கொண்ட நிலையில், எந்த அரசியல் கட்சியிலும் பயணிக்க விருப்பம் இல்லாமல் 2012ல் தன்னுடைய இரண்டாவது சகோதரிக்கும் திருமணத்தை முடித்துவிட்டு, துறவு வாழ்க்கை மேற்கொண்டு காசி, இராமேஸ்வரம் என சிவத்தலங்களுக்குப் பயணம் செய்து தனது வாழ்க்கையை மூன்று ஆண்டுகள் நடத்தினர்.
2016 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய காலகட்டத்தில் 25 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் அகமுடையர்களுக்கு ஒரு இடத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக வெற்றி வாய்ப்பு உள்ள திமுக, அண்ணா திமுக இரண்டு கட்சிகளும் இச்சமூகத்தைப் புறக்கணிக்கிறார்கள். 2016 இல் அகமுடையர்களுக்கு மதுரையில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. எனவே மதுரை மேற்கு தொகுதியில் திமுக, அண்ணா திமுகவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு, தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மருது மக்கள் இயக்கம் என்கின்ற அமைப்பை 2016 நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார், மு.பா. 2016 இல் “மருது மக்கள் இயக்கம்” தொடங்கப்பட்ட போது அகமுடையர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது. ஆனால் 2017 இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ்த்தேசிய இயக்கங்களோடும், சனநாயக சக்திகளோடும் இயங்குவதற்கான ஒரு வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தமிழ்த்தேசியர்களோடும் மற்ற புரட்சிகர அமைப்புகளோடும், மாணவர்களோடும், இளைஞர்களோடும் பழகிய தருணங்கள், இவரது அரசியல் பார்வையே மாற்றின.
தமிழ்நாட்டின் அரசியலில் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும், தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகின்ற திராவிட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை அடிமையாக்கி தமிழகத்தில் இருக்கின்ற வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதையும், தமிழ் மக்கள் உரிய பிரதிநிதித்துவத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதைத் திராவிடக் கட்சிகள் விரும்பவில்லை என்பதையும் அவர் நன்கு உணர்ந்து கொண்டார். எனவே மருது மக்கள் இயக்கம் ஒரு சாதி அமைப்பாக இயங்குவதை விடுத்து, தமிழ்த்தேசிய அமைப்பாக இயங்கலாம் என அப்போது அவர் முடிவெடுத்தார்.
அகமுடையர்களின் பிரதிநிதித்துவம் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழர்களும் தமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் என்கின்ற எண்ணத்தில், தற்போது தமிழ்த்தேசிய அமைப்பாக மாறி களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது மருது மக்கள் இயக்கம். அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து, தமிழர்களுக்கான அங்கீகாரம் பெற வேண்டி, தமிழர்களுக்கான ஆட்சி தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக நாம் உழைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது என்கின்ற பொறுப்புணர்வோடு, இன்று வரை மருது மக்கள் இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மருது மக்கள் இயக்கத்தில் அகமுடையர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் சேர்ந்து இயங்குங்கள் என்ற அழைப்பின் பேரில், பலர் தொடர்பு கொண்டு தங்களை மருது மக்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.
2017 இல் இருந்து மருது மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, திராவிடக் கட்சிகளை எப்படி திராவிட இயக்கங்கள் ஆதரிக்கிறதோ, அதுபோல தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரு தமிழ்த் தேசிய அரசியல் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 2017 இருந்து நாம் தமிழர் கட்சியை ஆதரித்து களத்தில் நின்று பரப்புரை செய்வது, நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்பது, நாம் தமிழர் கட்சியினுடைய வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை செய்வது, தத்தமது இயக்கத்தினரை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த வைப்பது, அவர்களோடு இணைந்து பணி செய்வது என்று ஒரு சட்டமன்றத் தேர்தல், இரண்டு உள்ளாட்சி தேர்தல், ஒரு பாராளுமன்றத் தேர்தல் என்று முழு ஆதரவை வழங்கியிருக்கிறது.
மருது மக்கள் இயக்கம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பல்வேறு போராட்டங்களில் இவ்வமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மதுரையில் நடைபெற்ற CAA போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தி இருக்கிறது; உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதற்காக ஒன்பது நாட்கள் உணவு அருந்தாமல் உண்ணாநோன்புப் போராட்டத்தில் மருது மக்கள் இயக்கத்தினுடைய நிறுவனத் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் பங்கேற்று உள்ளார்; மதுரையில் போராட்டமாக இருந்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, மருது மக்கள் இயக்கம் இல்லாத நிகழ்ச்சியை இல்லை என்கின்ற அளவிற்கு களத்தில் மக்களுக்காக இவ்வியக்கம் பணியாற்றி வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி மதுரையில் உள்ள ஐஓசி அலுவலகத்தை முற்றுகையிட்டு இழுத்துப் பூட்டியதற்காக ஏழு நாட்கள் சிறைப்பட்டு அந்த ஏழு நாட்கள் சிறையிலும் உண்ணாநோன்புப் போராட்டத்தை மு. பா நடத்தியுள்ளார். மதுரை, சிவகங்கை என தென் மாவட்டங்களில் மக்கள் பணியை தொடர்ந்து செய்து மக்களுக்காகப் போராடி, இதுவரை நூற்றுக்கணக்கான வழக்குகளை மருது மக்கள் இயக்கம் சந்தித்துள்ளது. இவ்வியக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறவர்கள் தலைவர் பிரபாகரனையும் தமிழீழ ஆதரவு கொள்கையையும் ஏற்று, சாதிமதங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு இயங்குகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
நிகழ்கால தமிழ்த்தேசிய அரசியல் களத்தில், மக்களுக்கான மண்ணுக்கான போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி, தமிழர் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியினுடைய வெற்றிக்காகச் சமரசம் இன்றி, களத்திலே நமக்குத் தோளோடு தோள் கொடுத்து நிற்கும் புரட்சி வேங்கை செ.முத்துப்பாண்டி போன்ற தமிழ்த்தேசியப் போராளிகளை ஒவ்வொரு தமிழரிடமும் கொண்டாடிக் கொண்டு சேர்ப்போம். தமிழர் அதிகாரத்தை வென்றெடுப்போம்!
திரு. க. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை ஓமன்.