சூலை 2023
பூவுக்குள் இருக்கும் பூநாகம் திராவிடம்
தமிழ் உலகத்திற்குத் தந்த பொதுமறையாம் திருக்குறள் கூறுகின்றது,
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்று. இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அந்தச் செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஆராயாமல் கொடுத்துவிட்டால் விளைவன என்னவாக இருக்கும்?
ஒரு ஊரிலே ஒரு முதியவர் விறகு வெட்டி, அதைக் கரியாக்கி அந்த விறகுக் கரியை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் மன்னர் முதியவர் இருக்கும் ஊரின் வழியாக வேட்டைக்கு வந்தார். அப்போது முதியவரைக் கண்ட மன்னர், “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவரோ, “எனக்கென்று யாரும் இல்லை; அதனால் விறகு வெட்டி அதைச் சுட்டுக் கரியாக்கி விற்பனை செய்து பிழைக்கிறேன்” என்றார்.
முதியவரின் நிலையைக் கண்ட மன்னர், “நீங்கள் இனிமேல் கடினமாக வேலை செய்ய வேண்டாம். உங்களது பெயரில் ஒரு ஏக்கர் சந்தன மரங்களை எழுதி வைக்கிறேன். அதை வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள்!” எனக் கூறி அந்தச் சந்தன மரங்களை அவரிடம் ஒப்படைத்துச் சென்று விட்டார் மன்னர்.
ஆறு மாதங்கள் கழித்து அந்த வழியே மன்னர் வந்தார். அப்பொழுது முதியவர் மீண்டும் மரம் வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அருகிலே சென்ற மன்னர், “இந்த வேலை செய்ய வேண்டாம் என்று தானே உங்களுக்குச் சந்தன மரத் தோப்பை எழுதி வைத்தேன்?!” என்றார்.
“ஆமாம் மன்னா! உங்களது கருணையால் ஐந்து மாதங்கள் எனது பிழைப்பு நன்றாக இருந்தது. அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் மரங்களை வெட்டி நெருப்பிலிட்டு கரியாக்கி விற்று விட்டேன். இப்பொழுது அந்த மரங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. அதனால் தான் வேறு மரங்களை வெட்டுகிறேன் மன்னா!” என்று சொன்னார் முதியவர்.
“சந்தன மரத்தை முறையாகப் பயன்படுத்தி இருந்தால் உங்கள் வாழ்நாளின் இறுதிவரை ஆனந்தமாக வாழ்ந்திருக்கலாமே!” என்று சொல்லி வருத்தத்தோடு கடந்து சென்றார் மன்னர். பாவம் முதியவர்! அவருக்குப் பழைய பழக்கத்தை விட்டு வெளியேறத் தெரியவில்லை. ‘புதியதை, நல்லதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.’
இந்தக் கதை போலத்தான் தங்களை ஆளும் மகத்தான வாய்ப்பை திமுகவுக்கு மன்னராகிய மக்கள் கொடுத்தனர். தமிழ்நாட்டு மக்களையும், வளங்களையும் பாதுகாத்து ஆட்சி நடத்துவதுதான் ஒரு முதல்வரின் வேலை.
ஆனால்..
முதல்வர் மு.க.ஸ்டாலின் & திமுகவுக்கோ பழைய வழக்கத்தை விடும் எண்ணமில்லை. அக்கட்சி கொள்ளையடிப்பதே ஆட்சி அதிகாரத்தின் கொள்கையாக கொண்டுள்ளது. பத்து ஆண்டுகள் கழித்துக் கிடைத்த அரியணையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. சந்தன மரத்தின் மதிப்பு தெரியாத முதியவர் மரத்தைக் கரியாக்கி விற்றதைப் போல, இந்தத் திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களையும் வளங்களையும் அழித்தொழித்து வருகின்றனர்.
இவர்கள் என்றுமே மக்களுக்கானவர்கள் அல்ல; ஆரியப் பார்ப்பன பனியா கும்பலினால் இயக்கப்படும் அடிமைகள். இவர்கள் விடியல் ஆட்சி தருபவர்கள் அல்ல; மாறாகத் தமிழகத்தை விடியாமல் இருட்டிலேயே வைத்திருக்கும் இரவுநேரக் கொள்ளைக்காரர்கள்.
திமுக – திராவிடர்களுக்கான முன்னேற்ற கழகம்; இவர்கள் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யமாட்டார்கள். இவர்கள் “பூவுக்குள் இருக்கும் பூநாகம்” எனப் புரிந்துகொள்ளுங்கள்! வெளியில் பார்க்க வேறு மாதிரி தெரிந்தாலும் உள்ளுக்குள் கொடிய விஷம் கொண்டவர்களாக இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இனியும் இருப்பார்கள்.
அன்பார்ந்த மக்களே… விழித்துக் கொள்ளுங்கள்! அறிவுள்ள தமிழ் மக்களாக இணைந்து நின்று சதியை வெல்லுங்கள்!
திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.