ஆகத்து 2022
பெண்ணெனும் பேராற்றல் தமிழ்த்தேசியத்தால் ஒளிர்கிறது!
நான் கடக்கும் பல இரவுகளில், மிகச் சமீப இரவொன்றில் என்னை பாதித்த ஒரு நிகழ்வை பற்றியே இக்கட்டுரை.
தமிழ்ச்சூழலின் ஆதர்சன எழுத்தாளர்களில் ஒருவர் கூறிய ஒரு விடயம் அந்த இரவில் எனக்கு நியாபகம் வந்தது. நாம் நடந்து செல்லும்போது அல்லது பயணிக்கும் போது, முன்தோன்றும் சில எளிய, எதார்த்த காட்சிகள், படிமங்களாக மனதில் பதிந்து நம்மை தொந்தரவு செய்யக்கூடும். சில நேரங்களில் அந்த அதீத தொந்தரவு ஒரு அழகிய படைப்பாக வெளிப்படக்கூடும் என்று அந்த எழுத்தாளர் தெரிவித்தார்.
எனக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் இரவுப்பொழுதில் நிகழ்ந்தது. ஆனால் அக்காட்சி மிகவும் நேர்மறையாகவும், மிகவும் தன்னம்பிக்கை தருவதாகவும், தமிழ் சமூகம் எவ்வாறு முற்போக்காக நகர்கிறது என்பதையும் உணர்த்தியது.
நாம் தமிழர் கட்சியின் வளைகுடா பிரிவு ஏற்பாடு செய்த இணையவழி நேர்காணல். அதில் திருமதி ஸ்ரீரத்னா என்பவர் கருத்துரை வழங்க அணியமாக இருந்தார். அவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை, மாநிலப் பொறுப்பில் இருப்பவர் என்றும், தமிழகத்தின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்த்து கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் கூறப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்புக்குழு உறவுகளை இணைக்கும்முன் அவரின் காணொளி சரியாக உள்ளதா, குரல் தெளிவாக உள்ளா என்று சோதித்துக் கொண்டிருந்தார்கள், அனைத்தும் சரியாக இருந்தது. அவரும் நிகழ்வு துவங்குவதற்கு முன், நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். அடுத்தநொடி நிகழ்வு துவங்கவுள்ளது, கட்சி உறவுகள், பொது உறவுகள் நிகழ்விற்கு இணைக்கப்பட உள்ளனர். அந்த நொடியில் அவர் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. உடனே அவர் நிகழ்வுக் குழுவிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். அவர் வீட்டில், செயற்கை வெளிச்சம் ஏற்பாடு செய்யும் வசதி இல்லை என்பதை புரிந்துகொண்ட நிகழ்வு ஒருங்கினைப்புக் குழுவினர், உடனே குரல்பதிவு வழியே பேச அழைத்தனர், அவரும் பேச ஆரம்பித்தார்.
இது ஒரு நேர்காணல் நிகழ்வு, தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் பதில் மிகச்சிறப்பாக இருந்தது. பேச்சாளர் பற்றிய முன்னறிந்திராத என்போன்றோருக்கு அது ஆச்சர்யத்தை தந்தது. சிறிது நேரத்தில் அவரின் முகம் திரையில் தோன்றியது. மின்சாரம் வந்தது என்று புரிந்து கொண்டோம். உள்ளபடியே ஒரு நிறைவான நேர்காணலாக முடிந்தது.
அன்று இரவு முழுவதும், அந்த நிகழ்வின் தாக்கத்திலிருந்து விடுபட இயலவில்லை. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டவர். ஒருவேளை, திரு.எடப்பாடி பழனிச்சாமி பிளவுபட்ட அதிமுக அணிகளை ஒருங்கிணைத்து, தேமுதிக புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் அரவணைத்து போட்டியிட்டிருந்தால் முதல்வராகவே வந்திருக்கும் வாய்ப்பிருந்திருக்கும். அத்தகையவரை எதிர்த்துப் போட்டியிட்டவர், தனது கட்சி சார்ந்து, தான் வழங்கும் இணையவழி நேர்காணலுக்கு தேவையான அடிப்படை வசதிகூட தன்வீட்டில் இல்லாத சூழலில் இருக்கிறார். நேரலை சென்றுகொண்டிருக்கும்போதும் ஏற்பட்ட தடங்கலை எளிதாக கையாண்டு ஒரு சிறப்பான உரையை வழங்கிச் சென்றிருக்கிறார். அந்த உரையின் ஊடாக அவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெரும்பாலான நாட்களில், ஒரு சில தம்பிகளுடன் நடந்தே பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார். இவற்றிலிருந்து அவருக்கு தேர்தல் காலத்தில் இருந்த பொருளாதார நிலைமையை ஓரளவு கணிக்க முடிகிறது.
இதே போன்று சமரசமற்று களத்தில் நிற்கும் பெண்கள் தமிழகத்தில் இன்னும் எவ்வளவு இருப்பார்கள்!! என்ற எண்ணம்தான் அந்த இரவில் சிந்தையில் தோன்றியது. முழுக்க, முழுக்க தான் சுற்ற கல்வியையும், தான் கொண்ட திறமையையும், ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தையும் நம்பி களத்தில் நின்றுள்ளனர். இன்றும் நிற்கின்றனர். அவர்களுக்கு எதிரே நிற்கும் அதிகார பிம்பம், எத்தகைய அச்சுறுத்தலையும், தயக்கத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. அவற்றை சமாளிக்கும் ஆற்றலை, இந்த எளிய, கற்றறிந்த, தத்துவ நிலைப்பாடு கொண்ட பெண்கள் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பயணிக்கும் “நாம் தமிழர் கட்சி” சரிபாதி ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற கொன்கையின் அடிப்படையில், இவரை போன்ற 117 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருக்கும். நாம் தமிழர் கட்சியின் பொருளாதார நிலை நாடறிந்தது. அவர்கள் தத்துவங்களை மட்டுமே சொல்லி வாக்குக் கேட்கிறார்கள் என்பதும் வெகுமக்கள் அறிந்தது.
அப்படி என்றால் போட்டியிட்ட 117 பெண் வேட்பாளர்களும் ஏறத்தாழ திருமதி ஸ்ரீரத்னா போன்ற வாழ்க்கைச் சூழலை பெற்றிருப்பார்கள். ஆனாலும் அனைவரும் திருமதி ஸ்ரீரத்னா போன்றே களத்தில் சமரசமற்று கொள்கையைச் சொல்லி நின்றிருப்பார்கள் என்று எண்ணியபோது, என்னுள் தோன்றிக்கொண்டே இருந்தே அந்த நேர்காணல் நிகழ்வின் பாதிப்பு ஒரு அமைதி நிலையை அடைந்தது. அப்பொழுது அறிஞர்களும், துறவிகளும் சொல்லிய மந்திர வாசகம் நினைவிற்கு வந்தது. 100 இளைஞர்களைக் கொண்டே இந்த உலகை தலைகீழாக மாற்றலாம் என்றால், ஆற்றல் மிக்க இதுபோன்ற பெண்கள் நிறைந்த நமது உலகம் விரைவாக அழகாய் மாறும் என்று எண்ணினேன். பண முதலைகள், அதிகார வர்க்கங்கள் மக்கள் விரோதச் செயல்கள் செய்து, மக்கள் வளங்களை கொள்ளையடித்தாலும், தொகுதி முழுக்க நிறைந்திருக்கும் இதுபோன்ற பெண்கள், நம் சூழலை, மக்களை போராடி காப்பாற்றிவிடுவார்கள் என்ற தோன்றியது.
இத்தகைய பேராற்றல்களை ஒருங்கிணைக்கும் ஒற்றைப் புள்ளி என்பது, தமிழ்த்தேசிய அரசியலும், அதன் சமகால வடிவமாக இருக்கும் நாம் தமிழர் கட்சியும் என்றுணர்ந்தேன். நாம் தமிழர் கட்சியின் தொடரோட்டமும், வளர்ச்சியும், இப்பேராற்றல்களை ஒளிரும் நட்சத்திரமாக, வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாற்றும் என்று தோன்றியது.
அவ்வாறே அவ்விரவு எனக்கு முன்பகுதியில் பாதிப்பையும். பிறகு அமைதியையும் தந்து உறங்கவைத்தது.
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை, வளைகுடா.