டிசம்பர் 2023
பெருங்கவி பாரதி
பாரதியார் திசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மாள். நான்கு வயதில் இவரது தாயார் காலமானார். சிறு வயதில் அவரது தாத்தா மூலம் முதலில் தமிழ் கற்றுக்கொண்டார். 11 வயதில் இவரின் கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். 14 வயதில் இவருக்கு செல்லம்மா எனும் சிறுமியைத் திருமணம் செய்து வைத்தனர். பாரதியின் 16 வயதில் அவரது தந்தை மறைவெய்தியதைத் தொடர்ந்து, வறுமை அவரை வாட்டி எடுத்தது. அவர் அத்தை வசிக்கின்ற காசிக்குச் சென்று அங்கே கல்லூரியில் இந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளைக் கற்றார்.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பாடல்கள் தமிழ் மக்களை வீறுகொள்ளச் செய்தன. 1907 ஆம் ஆண்டு “இந்தியா” என்ற வார இதழைப் பொறுப்பேற்று நடத்தி, அதில் ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இதனால் அவருக்கு கைது உத்தரவு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் புதுவைக்குச் சென்று இந்தியா இதழை மீண்டும் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரதி மீண்டும் தமிழகம் வந்தார். 1918 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு தமிழக எல்லையில் பாரதியை கைது செய்தது. அவர் 34 நாட்கள் சிறையில் வாடினார். இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி ஆகிய புகழ்பெற்ற பாடல்களை எழுதியுள்ளார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் பாரதியார் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
செல்வன். க. கார்த்திக்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.