மே 2023
பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
தமிழின வரலாற்று நாயகர்களான கரிகாற் சோழன், அருண்மொழிச் சோழன், அரசேந்திர சோழன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், சேரன் செங்குட்டுவன் போன்றோருக்குச் சற்றும் வீரத்திலும் தீரத்திலும் ஆளுமையிலும் ஆற்றலிலும் குறைவில்லாதவர், காவிரிக் கரையின் நாயகன் நம் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். வில்லினில் இல்லை வீரம்; அம்பினில் இல்லை வீரம்; மாசற்ற மனங்கொண்டு, தனக்கென்று வாழாது தன் மக்களுக்காகத் தன்னுயிரையே ஈகம் செய்வதே வீரம். அத்தகு பெருவீரத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர் தான், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி.600 லிருந்து கி.பி 900 வரை ஆட்சி செய்தவர்கள் முத்தரையர் மன்னர்கள். போருக்குப் போகும் போது வஞ்சிப் பூவையும், வெற்றி பெற்றால் வாகைப் பூவும் சூடி வருவது அக்கால வழக்கம். ஆனால் பெரும்பிடுகோ போருக்குப் போகும்போதே வெற்றிக்கான வாகைப்பூவைச் சூடிச் செல்வார். போரில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் போரிட்டு வெற்றியும் பெறுவார். பிற்காலச் சோழர்கள் எழுச்சி பெறுவதற்கு முன்பாக, தஞ்சைப் பெருநிலத்தைக் கட்டி ஆண்டவர்கள் முத்தரையர்களே!
பெரும்பிடுகு முத்தரையர் என்கின்ற குவவன் மாறன் கி.பி-655 -கி.பி-680 வரையிலும் , இளங்கோவதிரையர் என்கின்ற மாறன் பரமேஸ்வரன் கி.பி.680 -கி.பி-705 வரையிலும், இரண்டாம் பெரும்பிடுகு என்கின்ற சுவரன் மாறன் கி.பி.705 -கி.பி-745 வரையிலும், விடேல்விடுகு என்கின்ற சாத்தன் மாறன் கி.பி-745-கி.பி-770 வரையிலும், மார்பிடுகு என்கின்ற பேரடியரையன் கி.பி-770-கி.பி-791 வரையிலும், விடேல்விடுகு முத்தரையர் என்கின்ற குவவன் சாத்தன் கி.பி-791-கி.பி-826 வரையிலும், சுமார் 300 ஆண்டுகள் காவிரிப் படுகை மண்டலத்தை ஆட்சி செய்தனர். தான் போரிட்ட பன்னிரெண்டு போர்களில் தோல்வியே சந்திக்காது வெற்றி வாகை சூடிய சுவரன் மாறனது வெண்கலச் சிலையை, திருச்சி மாநகரில் காணலாம்.
சேர சோழ பாண்டியர்களைப் போரில் வீழ்த்தியதால் முத்து அரையர் என்றும், முத்துக் குளிக்கும் கடற்கரைப் பகுதியை ஆட்சி செய்ததால் முத்து அரையர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். பாரி என்றால் முல்லைக்குத் தேர் கொடுத்தவர் என்றும், பேகன் என்றால் மயிலுக்குப் போர்வை போர்த்தியவர் என்றும், அருண்மொழிச்சோழன் என்றால் சைவ வழிபாட்டில் சிறந்து விளங்கிப் பல கற்கோவில்களைக் கட்டியவர் என்றும் அறியப்படுவர். அது போன்று பெரும்பிடுகு முத்தரையர் என்றால் வண்மையிலும் திண்மையிலும் சிறந்தவர் எனலாம். இப்பேரரசர் தமிழ் மீதும் தமிழர் மீதும் பெரும் பற்று கொண்டிருந்ததால் தமிழை வளர்க்கும் புலவர்களுக்கு, யானையைப் பரிசாகக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்.
செந்தலை கல்வெட்டு முத்தரையரின் கொடிச் சின்னம் “கயலும் வேலும் சேர்ந்தது” எனப் பொருள்படும்படி, “வெங்கட் பொரு கயல்சேர் வேல் கொடியோன் வான் மாறன் – செங்கட் கரும்பகடு சென்றுழக்க – வான் குலத்தோர் – தேரெழுந்து மாவழுந்தச் செங்குருதி மண் பரந்த – ஊரழுந்தி யூ ரென்று மூர்” என்று அழுந்தியூர் போரைப் பற்றிச் சொல்கிறது. இன்னும் பல போர்களைப் பற்றிய வெற்றிப் பெருமிதத்தைச் சுட்டும் பாடல்கள் செந்தலை கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளன. இடைக்காலத் தொகைநூல் இலக்கியங்களிலும் இம்மன்னர்கள் குறித்த சில பாடல்கள் உள்ளன.
செந்தமிழர் நாட்டில் நாயக்கர் ஆட்சி வரலாற்றில் ஆவணப்படுத்தி வைக்கப்பட்ட அளவுக்குக் கூட 300 ஆண்டுகள் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் தொண்டாற்றிய முத்தரைய மன்னர்கள் வரலாறு ஆவணப்படுத்தப்படவில்லை. இம்மன்னர்கள் குறித்த பல கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இருந்தும் கூட, மேலதிக ஆய்வுகள் செய்யப்படாமல் திட்டமிட்டே பல தமிழ் மன்னர்களைப் போலவே நமது வீர வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. வரலாற்றைப் படிக்காத ஒரு இனம் வரலாற்றைப் படைக்க முடியாது. தமிழ் மொழியும் தமிழ் இனமும் சிறக்க உண்மையான வரலாற்றைத் தொடர்ந்து தேடிப் படிப்போம்! அதனை அடுத்தடுத்த தலைமுறைகட்குக் கடத்தும் கடமையையும் பொறுப்பையும் ஏற்போம்!
பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் போற்றி!!! போற்றி!!!
திரு. ச.பாலமுருகன்
சுபைல் மண்டலப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.