spot_img

பைசன் – காளமாடன் : மாரி செல்வராஜின் மற்றுமொரு காத்திரமான கலைப்படைப்பு!

அக்டோபர் 2025

பைசன் – காளமாடன் : மாரி செல்வராஜின் மற்றுமொரு காத்திரமான கலைப்படைப்பு!

அண்மைக்காலங்களில்  திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பதில் அதிக விருப்பமிருப்பதில்லை. பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்படும் நடைமுறைக்கு வெகு தொலைவில் உள்ள அதீத நாயகப் பிம்பத் தொழுகை, முகத்தில் குருதி தெறிக்கும் வரைமுறையற்ற வன்முறை, சிரிப்புக்கு எனத் திணிக்கப்படும் உருவக்கேலி மற்றும் இரட்டை அர்த்த உரையாடல்கள் இவை மீதான ஒவ்வாமை தான்… போதாக்குறைக்கு நூறு கோடி, ஆயிரம் கோடி வசூல் போட்டி பைத்தியக்காரத்தனம் வேறு. குடும்பம் குழந்தைகளோடு  திரையரங்கு சென்று காண நல்ல படம் வருவதே அருகிவிட்டது. தரமான படம் என்று தெரிந்தால் பொறுமையாக OTT தளங்களில் பார்த்துக் கொள்வதோடு சரி. ஆயினும் அவை குறித்து அதிகம் எழுதத் தோன்றியதில்லை.

பரியேறும் பெருமாள் படம் பார்த்து அதன் அடர்த்தியும், கலைத்தன்மை மற்றும் முதிர்ச்சியுடன் சாதீயச் சிக்கலை அணுகிய விதமும் மாரி செல்வராஜ் மீது மிகுந்த நன்மதிப்பை ஏற்படுத்திற்று. அவரது கர்ணன், மாமன்னன், வாழை ஆகியவை தமிழ்த்திரையுலகில் சமூகப் பொறுப்புமிக்க ஒரு கலைஞனாக, தரமான படைப்புகளை நல்கவல்ல திறமைமிகு இயக்குனராக மாரியை அடையாளம் காட்டின. அவரைப்பற்றித் தேடிய போது, அவர் எழுத்தாளர் என்றும் அறிந்து, மிகவும் புகழப்பட்ட தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் நூலைப் படித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் அதிர்ந்து கிடந்தது மனம். தென் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்த நாட்களுடைய நினைவுகளை, புழுதிக்காட்டின் செம்மண் அப்பிய பக்கங்களை வாசகர்களுக்குத் திறந்து காட்டிய மாரி செல்வராஜின் தன்வரலாற்று நூல் அது.

மறக்கவே நினைக்கிறேன், சம்படி ஆட்டம், உச்சினியென்பது (கவிதைத் தொகுப்பு) ஆகியவற்றைப் படித்துமுடித்த பின் எனக்குத் தோன்றியது, திரையில் மாரி காட்டியது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டுமே! பைசன் படத்தில் பாண்டியராஜா எனும் அமீர், கொலையொன்றைச் செய்துவிட்டு இரத்த சகதியான தன் முகத்தில் ஒட்டியிருந்த சதைத்துணுக்கைக் விரல்களால் சுண்டியெறிவார். அதைக் கண்டு மிரளும் துருவைப் போல, பொதுச்சமூகம் இதுவரை நமக்குக் காட்ட விரும்பாத, காட்டத் துணியாத கவிச்சி மிகுந்த காட்சிகளை நமக்கு எழுத்தில் காட்டிச் சிதறடித்திருப்பார் மாரி. ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் வாழ்ந்து, சாதீயத்தை முகத்துக்கு நேர் சந்திக்க அதிகம் வாய்ப்பற்ற என் போன்றவர்களுக்கு மாரி காட்டியது, நம் உலகுக்குள் அருவமாய் ஒளிந்திருக்கும் பல்வேறு விதமான உலகங்கள்.

மாரியின் படைப்புலகில், மிகுந்த புத்துணர்ச்சி தரும் ஒரு கூறாக நான் பார்ப்பது, வலிமையான பெண் பாத்திரங்கள். குறிப்பாக அக்காக்கள்… ஒரு நேர்காணலின் போது கூட எனது உலகத்தில் உலவும் பெண்களின் கருணையால், ஊக்கத்தால் தான் நான் இங்கிருக்கிறேன் என்றும், ஒரு மனிதனின் முதலும் கடைசியுமான நம்பிக்கை ஒரு பெண்ணாகத்தான் இருக்கிறாள் என்றும் சொன்ன மாரியின் கூற்றுக்குப் பின்புலமாக ஆதூரத்துடன் வடிக்கப்பட்ட பெண் கதைமாந்தர்களின் காட்சியமைப்புகள், அடுத்த தலைமுறையினராவது பெண்களைச் சரியாக நடத்திட உதவும்வண்ணம் நம்பிக்கை தூவும் விதைகள்.

அடுத்து, தான் சொல்ல விரும்பும் பல கருத்துக்களுக்கு உருவகமாக நிலம், தாவரம், விலங்கு ஆகியவற்றைப் பயன்படுத்தும் வித்தை மாரிக்கேயுரிய தனித்துவம். பரியனின் கருப்பி நாய், கர்ணனின் குதிரை, வாழையில் ஒரு பசு, மாமன்னனில் பன்றி, இன்று பைசனில் ஒரு ஆடு. வாழையில் பச்சைப்பசேலென்று இருக்கும் வாழைத்தோட்டங்களுக்கு மத்தியில், பாலை நிலமாய் வெடித்துப் போயிருக்கும் தார் சுமக்கும் மக்களின் வாழ்க்கை… எப்படிப்பட்ட முரண்காட்சி. பைசனிலும் வாழைமட்டை ஒன்றைத் தோளுக்குக் குறுக்காகக் கொண்டு நீரில் நடக்கும் ஒரு காட்சி; செந்நிறத் தேரிக்காட்டினூடே செல்லும் சாலையில் ஒரு ஓட்டம் என கேமரா கவிதைகள் அழகோ அழகு. ஆகாயத்திலிருந்து பறவைப்பார்வையாய் பார்க்கும் பல காட்சிகள் மாரியின் படைப்புலகில் திரும்பத் திரும்ப வருபவை. அதற்கு கடவுள் மேலிருந்து காண்பதுபோல அவல நகைச்சுவை தொனிக்கும் ஒப்பீட்டுப் பார்வை ஒன்றை மாரி சொல்லியிருந்தார்.

மெய்யியல் தளத்தில் நாட்டார் வழிபாட்டை ஒட்டிய கர்ணனின் கன்னி தெய்வம், பைசனின் காளமாடன் ஆகியவை அமைப்பு, அரசியல், தத்துவங்கள், தலைவர்கள் ஏன் சக மனிதர்கள் என அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைக்க இருக்கும் ஒரே இறுதிப் பற்றுதலாக, எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாகக் காட்டப்பட்டிருப்பது, தென்னாடு உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டின் அடிப்படைக் கூறு.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வன்முறைக்கு இன்னொரு வன்முறையே ஒரே தீர்வு என்றோ, தர்க்கத்துக்காகத் தான் சார்ந்த சாதியின் பெருமைபேசும் அபத்தமோ இன்றி, ஒரு முன்முடிவற்ற வெளிப்படையான உரையாடலுக்கு அழைக்கிற, எதிர்தரப்பினரையும் அவ்வுரையாடல் மூலம் மட்டுமே வெல்ல நினைக்கிற மாரியின் கருத்துலகு நியாயமானது என்பதைத் தாண்டி, தமிழ்த்தேசிய எழுச்சிப் பின்புலத்தில் தமிழ்க்குடிகளின் ஒற்றுமைக்கு மிக மிக முக்கியமானது. 

மாரியின் அரசியல் மீது, அவரது தனிப்பட்ட நண்பர்கள் மீது, செய்துகொள்ளப்பட்ட சமரசங்கள் எனப் பட்டியலிடப்படும் குற்றச்சாட்டுகள் மீது எனக்கும் பல கருத்துக்களும், முரண்களும் உண்டு என்றாலும், மாரி போன்ற கலையால் தன் அரசியலைப் பேசுகிற, அதைப் மக்கட்பார்வைக்கு வைத்து விவாதத்தை உருவாக்க விரும்புகிற அறிவாளுமைகள் காக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு சில நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழர்களின் உண்மையான வரலாறு, தமிழ்க் கலை இலக்கியம் மற்றும் கற்றல் புலத்தில் உள்ளது உள்ளபடி காட்டப்படவில்லை; அல்லது காட்டப்பட விடப்பட்டதில்லை. அதற்கு அரசியல் காரணங்கள் அதிகமுண்டு. உலகின் பிற எல்லாச் சமூகங்களிலும் கலைகள், பெரும்பாலும் அம்மக்களின் நிலம், மக்கள், வாழ்வியல் குறித்தே திரும்பத்திரும்பப் பேசுகின்றன. ஒரு வகையில் கலைகள் உருவாக்கப்பட காரணமே, அது தான். தமிழ் நிலத்தில் மட்டும் அது நிகழவில்லை என்பது ஒரு சாபக்கேடு மற்றும் கொடுந்துயரம். எந்த அளவு என்றால், தமிழ் இனப்படுகொலை குறித்துக் கூட அழுத்தமாகத் தமிழ்க்கலையுலகம் பேசாத அளவுக்கு… களத்துக்கும் கலைக்கும் இடையே வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இத்தூரம் குறைய பைசன் போல பல படைப்புகள் வரவேண்டியுள்ளது.

மாரி செல்வராஜின் படைப்புலகில் காட்டப்படும் (எழுத்து, பேச்சு மற்றும் திரைக்கலை) நிலம், மக்கள், தாவரங்கள், விலங்குகள், நம்பிக்கைகள், தெய்வங்கள் ஆகியன உண்மைக்கு மிக நெருக்கமானவை. நாம் எண்ணவோ, பேசவோ, களையவோ விரும்பாத, கசப்பான உண்மைகளைச் சொல்பவை. எனவே அவை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்; எரிச்சலூட்டலாம்; ஆனால் அவை இனிமேல் பேசப்படாமல் தவிர்க்கப்பட முடியாது. அவ்வகையில் மாரி செல்வராஜ் எனும் படைப்பாளி, இன்றைய தமிழ்த்திரையுலகில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆரோக்கியமானது. இதற்கு அடித்தளமிட்ட அவரது ஆசான் இயக்குநர் இராம், அவரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரான இயக்குநர் இரஞ்சித், அவரது படக்குழுவினர் என உதவிய அனைவருக்கும் தமிழ்ச்சமூகம் கடமைப்பட்டுள்ளது.

சமூக விலங்கான மனிதனின் மரபணுக்களில் பரிணாமத்தால் இன்றளவும் இருக்கும் விலங்குணர்ச்சிகளை மட்டுப்படுத்த, கூட்டாக ஒத்திசைவுடன் இயங்கும் திறன்களை வளர்த்தெடுக்கக் கலைகள் உண்டாக்கப்பட்டு, மனிதனை மேம்பட்டவனாக்கி ஆற்றுப்படுத்துகின்றன. எந்தவொரு நாகரீக சமூகமும் கலைக் கண்ணாடி வழி தன்னைத் தானே பரிசோதித்துத் திருத்திக் கொள்ளும். தன் அழுக்குகளைத் தானே துடைத்து அலசிக் கொள்ளும். அவ்வகையில் மாரி செல்வராஜின் பைசன் – காளமாடன், சமூகத்தின் கூறுகளை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடிகளை அடுக்கி, உடைந்துபோன அல்லது உடைக்கப்பட்ட மனிதர்களை உள்ளிட்டு, புதுப்புது வண்ணங்களை வடிவங்களைக் காட்டியதோர் கலைடாஸ்கோப் காட்சி.

திருமதி. விமலினி செந்தில்குமார்,
கொள்கை பரப்புச் செயலாளர்,
செந்தமிழர் பாசறை வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles