மே 2025
பொறுத்தது போதும்! பொங்கியெழு தமிழா!
மானத் தமிழர்கள் ஒன்றாகி ‘நாம் தமிழர் கட்சி’ என்ற ஓர் அரசியல் கட்டமைப்பு உருவான பின்னர், தமிழ் மண்ணைத் தமிழர் ஆள வேண்டும் என்ற எண்ணம் பலரின் கவனத்தை ஈர்த்தது. பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டில் புரட்சிகரமான பல போராட்டங்களைச் செய்து வருகிறது. அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் உன்னதமான ஓரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற பாசறைகளை உருவாக்கி திராவிடத்தையும் ஆரியத்தையும் எதிர்க்கும் ஒரு மாபெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி வலுப்பெற்று வருகிறது.
நம் நாட்டில் இருக்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அனைத்தும் ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கும், கையூட்டு பெறும் கயவர்களுக்கும் துணை போவது உலகம் அறிந்த உண்மை. ஆதலால் நாம் தமிழர் போன்ற நேர்மையான தமிழ்த் தேசிய அரசியல் பேசும் கட்சி மற்றும் அமைப்புகள் வளர்ச்சி பெறுவதை ஆரிய மற்றும் திராவிடச் சார்பு ஊடகங்கள் ஒருபோதும் காட்டாது. மாறாக நமது வளர்ச்சியை முடக்கும் பொய்ச்செய்திகள், அவதூறுகள், குழப்பக்கருத்துக்கள் போன்றவற்றைத் தான் இவை பெரிதாக்கிப் பரப்பும். எனவே அறத்தைப் புறக்கணித்து பக்கச்சார்புடன் பொய்களை விற்கும் ஊடகக் கூலிப்படையினரைப் புறந்தள்ளி நமக்கு நாமே ஊடகமாகி உண்மைகளை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது.
நாம் தமிழர் கட்சி 2010ல் தொடங்கப்பட்டது முதல் இன்று வரையிலும் சமூக வலைத்தளங்கள் தான் தமிழ்த்தேசியல் கருத்தியல் வளர்ச்சி அடையப் பேருதவியாக இருந்து வருகின்றன என்பது நாம் அறிந்ததே. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொண்ட தமிழிளம் தலைமுறையினர், சமூக வலைத்தளப் பெருக்கம், முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்தில் அது சமூகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் ஆகியவற்றைச் சரியாகக் கணித்து தமிழர் அரசியலுக்கு அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதே அதற்குக் காரணம். இன்றும் கூட ஆளும் அதிகாரம், பணம், ஆட்கூட்டம் ஆகியன இருந்தாலும் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப சமூக ஊடகப் பிரிவு அணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தேசிய திராவிடக் கட்சிகள் திணறுவதை நாம் பல நேரங்களின் கண்டிருக்கிறோம். தமிழ்ப்பற்றும், தலைவர் மீதான பெருமதிப்பும், தமிழ்த்தேசியத் தத்துவ வலிமையும், சீமான் அண்ணனின் ஓயா உழைப்பின் மீதான நம்பிக்கையும் தான் நம்மைப் போன்ற எளியவர்களைத் தொடர்செயல்பாட்டில் செலுத்திவருகிறது.
உலகத் தமிழர்களாகிய நாம் இனி வரும் காலங்களிலும், சமூக வலைத்தளங்களில் நமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கண்ணியமான சொற்களில், எழுத்து, சொல், பொருள், தகவல் பிழைகள் இன்றி நாகரீகமான முறையில் வெளிப்படுத்திக் களமாட வேண்டும். சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே தவறான, இழிவான பின்னூட்டக் கருத்துக்களைப் பதிவு செய்து நம்மைத் தூண்டி வெறுப்பேற்றும் பதிவர்களைப் புறந்தள்ளி, இதுவும் ஒருவித உளவியல் தாக்குதலே என்று உணர்ந்து, சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் பலியாகாமல் நம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
தூற்றுபவர்கள் தூற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும் என வெற்று விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் பற்றி கவலைப்படாமல் தமிழ்த்தேசியத் தத்துவம் வெல்லும் வரை, நம் இலட்சிய கனவை நோக்கி வேகமாக முன்னேறுவோம். வீழ்வது வெட்கமில்லை; வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம் என்ற பழமொழிக்கு ஏற்ப சமூக ஊடகங்களை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தி தமிழ்த் தேசிய அரசியல் மறுமலர்ச்சியை உருவாக்கிடுவோம். உலகத் தமிழர்கள் அனைவரையும் இனவிடுதலைக் களத்தில் இணைக்க, நாம் கொள்கைப்பிடிப்பு மற்றும் வரலாற்றுப் புரிதலுடன் கூடிய இணையப் போராளிகளுக்கான சமூக ஊடகப் புழங்குவெளியைக் கட்டமைப்போம்.
உலகத் தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கோ மறைவார் தமிழ் இனப்பகைவர்!
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்! 2026 தேர்தல் களம் அதனை உலகுக்கு உரக்கச் சொல்லும்!
நாம் தமிழர்!
திரு. சி.தோ. முருகன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.