மார்ச் 2024
மகளிர் உயர – வர வேண்டும் நாம் தமிழர்!
செந்தமிழர் பாசறை – வளைகுடா ஒருங்கிணைத்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் விழிப்புணர்வு இணைய வழி தொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் அமர்வு பிப்ரவரி 23, 2024 வெள்ளி அன்று,தாயக நேரம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
பாலின சமத்துவத்துடன் கூடிய தமிழின விடுதலையை இலக்காகக் கொண்டு பயணிக்கும் நமது நாம் தமிழர் கட்சியினுடைய மகளிர் பாசறையில் இருந்து, நேரடிக் களப் போராளிகள் ஐவர், தத்தமது கருத்துக்களை இந்நிகழ்வில் பதிவு செய்தனர்.
நமது இயக்கத்தின் வழக்கப்படி அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி சொன்ன பின், செந்தமிழர் பாசறை – அமீரகத்தின் மகளிர் பாசறை உறவான சகோதரி பிரியா அவர்கள்,
கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்,
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்நாளோ?
– பாவேந்தர் பாரதிதாசன் (எந்நாளோ!)
என்ற சொல்லேர் உழவன் சுப்புரத்தினமாம் புரட்சிக் கவிஞரின் கவிதையோடு நிகழ்வைத் தொடங்கி வைக்க, அடுத்தடுத்து நம் சகோதரிகள் ஐவரும் செறிவான கருத்துரைகளை வழங்கினர்.
“அதிகாரப் பகிர்வு எனும் அரசியல் உரிமை” எனும் துணைத்தலைப்பில் கோவை நர்மதா அவர்கள், இந்திய ஒன்றியத்தில் பெண்களுக்கு உரிமை மறுத்த ஆண்ட கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தையும், நாம் தமிழர் முன்வைக்கும் மாற்று அரசியலில் பெண்கள் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். “கொள்கை வகுப்பில் பாலின சமத்துவம்” எனும் துணைத்தலைப்பில் சுமதி கபிலன் அவர்கள், நடைமுறைச் சிக்கல்களை பல எடுத்துக்காட்டுகளோடு சொல்லியதோடு, “ஆணுக்குப் பெண் சமம்” என்பதன்றி, “ஆணும் பெண்ணும் சமம்” என்ற நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாட்டையும், அது எவ்வாறு நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் திட்டங்களிலும் செயலாக்கம் பெறும் என்றும் விளக்கினார்.
“பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு” என்ற துணைத் தலைப்பில் சுமதி சீனிவாசன் அவர்கள், தன் வலு தானறியாது அடிமையாக இருக்கும் யானை எனப் பெண்களை ஒப்பிட்டு முத்தாய்ப்பான உவமையாகச் சொன்னதோடு, தற்போது நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான சட்டங்களை வரிசைப்படுத்தி, நாம் தமிழர் ஆட்சியில் அவை இன்னும் சிறப்பாக எவ்வாறு செயல்படுத்தப்படும் என்றும் விரிவாக எடுத்துக் கூறினார். “மதுவிலக்கு மிக அவசியம்” என்ற துணைத் தலைப்பில் புதுச்சேரி கௌரி, மது மிகப்பெரிய சிக்கலாகவும், தமிழினத்தின் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, வாழ்வியல் என எல்லா தளங்களிலும் சிதைவை உண்டாக்குவதையும் விவரித்து, குடும்பங்களை உடைத்துச் சூறையாடும் மது அரக்கனை ஒழிக்க உடனடியான உறுதியான நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி எடுக்கும் என உரையாற்றினார்.
இறுதியாக “பாதுகாப்பான எதிர்காலத்துக்கு நாம் தமிழர்” எனும் துணைத்தலைப்பில் திருவாரூர் வினோதினி, தனிமனிதர்களை உள்ளடக்கிய குடும்பங்களை வழிநடத்தும் பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தையுமே வழிநடத்தும் வல்லமை கொண்டவர்கள் என்பதையும், நாடாளுமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களின் குரல், இந்திய ஒன்றியத்தின் அனைத்து தேசிய இனங்களுக்காகவும் ஒலித்திட வேண்டும் என்பதையும் உணர்ந்து உறவுகள் களமாட வேண்டிய அவசியத்தைத் தெளிவாக எடுத்துரைத்தார். அகவணக்கம் தொடங்கி நன்றியுரை ஈறாக முழுநிகழ்வையும் செந்தமிழர் பாசறை அமீரகத்தின் துணைச் செயலாளர் பவ்யா அவர்கள் சீர்மையோடு தொகுத்து வழங்கினார்.
பல்வேறு கருத்துக்களைக் கொண்டதாகவும், நேர்த்தியுடன் கூடிய நிறைவுடன் இருந்த கருத்துரைகளை வழங்கிய நம் மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களுக்கும், குவியம் வழி தாயகத்திலிருந்தும் அயலகத்திலிருந்து இணைந்த தாய்த்தமிழ் உறவுகளுக்கும், திட்டமிட்டபடி நிகழ்வைச் சிறப்பாக நடத்த உதவிய ஒவ்வொருவருக்கும் செந்தமிழர் பாசறை வளைகுடாவின் அன்பும், நன்றியும்!
இணைந்திருப்போம் இனிய தமிழ் இனத்துக்காக…!
போராட்டம் அனைத்தும் அடுத்த தலைமுறைக்காக..!
நாம் தமிழர்!!!