சூலை 2023
மனதை உலுக்கும் மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் படுகொலை
மக்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற அவசியம் பணம்; அதற்குத் தேவை ஒரு வேலை. கடும் விலைவாசி உயர்வு இருக்கும் சூழலில் குறைந்த அளவு ஊதியம் போதாது என்பது உலகம் அறிந்த உண்மை. கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களுக்கு, இன்று சமூக நீதிப் பாடெமெடுக்கும் திமுக அன்று பரிசாக அளித்தது என்ன தெரியுமா? கட்டவிழ்த்து விடப்பட்ட அரசபயங்கரவாதத்தின் மூலம் விளைந்த கொடும் மரணம்!
சம்பவம் : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் கள் படுகொலை அல்லது தாமிரபரணி படுகொலை.
நடந்த இடம் : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தாமிரபரணி ஆற்றங்கரையில்.
ஆட்சி : திராவிட முன்னேற்ற கழகம் (திமுக)
வருடம் : 23.07.1999
பச்சைப்படுகொலைக்கான பின்னணிக் காரணம்:
மாஞ்சோலைத் தோட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக்கு மேலே உள்ள இயற்கை எழில் நிறைந்த ஒரு பகுதியாக உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன், போரில் தனது வெற்றிக்கு உதவியதற்காக மேற்குத் தொடர்ச்சி மலையில், தன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார்.
1930-இல் சிங்கம்பட்டி ஜமீன்தார், தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகை ஒப்பந்தம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தின் நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்திற்குக் கொடுத்தார். அந்தக் காடுகள்தான் மாஞ்சோலை எஸ்டேட்டாக மாறியது.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை குறைவான தினக்கூலி தான். நாள் ஒன்றிற்கு வழங்கப்படும் ரூ.53-ஐ வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. இவர்களின் சிக்கல் 1998 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதே பொதுத்தளத்தில் பேசுபொருளாக வெளிவர ஆரம்பித்தது. எனவே அவர்கள் 1999 ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுக் கூட்டி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். அதில் கலந்துக் கொண்ட தொழிலாளர்களையும், அதற்கு அடுத்த நாள் கைதாகிய தங்களின் உறவினர்களையும் விடுவிக்கக் கோரி போராடிய 600-க்கும் மேற்பட்டவர்களை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் கைதுக்கு பின்னர் 1999-ல் ஜூலை 23-ல் தினக்கூலியை 53-ல் இருந்து 150ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை சற்று தளர்ந்து கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுடன், பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஊர்வலமாய்ச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ் மாநில காங்கிரஸ், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பலரும் பங்கு பெற்றனர். ஆனால் பங்குபெற்ற எந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், உணர்வு மிக்க ஆதரவாளர்கள் மட்டுமே படுகாயம் அடைந்து பாதிப்பிற்கு உள்ளாகினர்.

திட்டமிட்ட சதியும் துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்ட உயிர்களும்:
அன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் மூலம், தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கும் முன்பே கலவரம் மூட்டப்பட்டது. மேலும் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசியும் ஊதிய உயர்வு கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். இதனால் மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் துவங்கினர். அவர்களை நோக்கி மரணம் பாய்ச்சலுடன் நெருங்கியது.
கைகளில் சவுக்குக் கம்புகளைக் கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வருபவர்களைக் கண்மூடித்தனமாக போலீஸ் தாக்கினர். இருபுறமும் போலீஸ் தாக்கியதால் மக்கள் தண்ணீரில் மோதிக் கொண்டதில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது . மேலும், தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் பல பெண்கள், 1 குழந்தை உள்பட மொத்தம் 17 பேர் இறந்தனர். குறைந்தபட்ச ஊதியம் வேண்டிப் போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இறுதியில் பெரும் வலிகளுடன் கூடிய மரணம் மட்டுமே மிஞ்சியது.
அரசியல் சூழ்ச்சியும் நீதிமன்ற செயல்பாடும்:
அப்போதைய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தொழிலாளர்களுக்கு முறையான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்காமல், போராடிய தொழிலாளர்களை வஞ்சித்ததே ஆட்சியாளர்களின் சூழ்ச்சி மற்றும் பேரவலம். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் சார்பில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையிலான விசாரணைக் குழு அறிக்கையில், ” ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் முறையற்ற நடத்தை, அரசு மற்றும் காவலர் மீதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி முழக்கங்கள் எழுப்பியதே இதற்குக் காரணம். இருப்பினும், நடந்த போலீஸ் அத்துமீறலுக்காக தொடர்புடைய அதிகாரிகள், விருப்ப ஓய்வு பெற வேண்டும் ” என்று கூறியிருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமையைப் பெற போராடும் பொழுது எல்லாம் பல உயிர்கள் பலி கொடுக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட இரக்கமற்ற கொடூரமாக தமிழக வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்நிகழ்வை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ம் தேதி நெல்லையில் இறந்தவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை தடியடி நடத்திக் கொன்றது போலவே, 2018ம் ஆண்டு தூய்மையான காற்றைச் சுவாசிக்க வேண்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லிப் போராடிய தூத்துக்குடி மக்களில் 13 பேரை, குறி பார்த்துச் சுட்டுக் கொன்றது அதிமுக அரசு. கொள்கைகளிலும், ஆட்சி நடத்தும் விதத்திலும் எந்த வேறுபாடும் இல்லாத மக்கள் விரோத அரசுகளைத் தான், இவ்விரு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் நடத்தி வந்திருக்கின்றன.
குருதி சுமந்த தாமிரபரணித் தண்ணீரும், ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரும்:
இந்தக் கோர நிகழ்வானது இப்போது வரையிலும் உழைக்கும் வர்க்கத்தினருக்குப் பெரும் வலி நிறைந்ததாகவே உள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பும், இது போன்ற அவலங்கள் இன்றளவிலும் நிகழக் காரணம் திராவிடக் கட்சிகள் போன்ற ஆட்சியாளர்களின் சுயநல அரசியலும், சூழ்ச்சிகளுமே. எனவே நாம் நம்முடைய மண்வளம், மலைவளம், நீர்வளம், நிலவளம், ஆகியவற்றைப் பாதுகாக்கவும், அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுத்து அடிப்படையில் இருந்து அமைப்பு மாற்றம் செய்யவும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு மிக முக்கியமான தேவையாக உள்ளது. அதை நோக்கி நகர்வதே சிறந்த குடிமக்களின் முக்கியமான பணியும், முதன்மையான கடமையும் ஆகும்.
திரு. இரா.மகேந்திரன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்