spot_img

மாவீரன்  கேணல்  கிட்டு

நவம்பர் 2023

மாவீரன்  கேணல்  கிட்டு

தனித்தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, சிங்கள பவுத்தப் பேரினவாத அரசினையும், இந்திய ஒன்றியம் போன்ற பல்வேறு வல்லாதிக்கங்களையும் ஒருசேர எதிர்த்து விடுதலைப் புலிகள் அமைப்பு வீரியமாகப் போராடியது. வீரம் செறிந்த இந்த ஈழ விடுதலைப் போராட்டதிற்குப் பங்காற்றிய எண்ணற்ற தளபதிகள் மற்றும் போராளிகளுள் குறிப்பிடத்தக்கவர் மாவீரன் கேணல் கிட்டு ஆவார்.

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை:

கேணல் கிட்டு அவர்கள் 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2ஆம் நாள் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இவரது தந்தையார் திரு.சதாசிவம் – தாயார் திருமதி. இராசலட்சுமி. கிட்டுவின் பெற்றோர் இருவருமே தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். குறிப்பாக, அவரது தந்தை காந்தியக் கொள்கையில் அதிக ஈடுபாடும் நம்பிக்கையையும் கொண்டிருந்தார். அதனாலேயே தன் மூத்த மகனுக்கு “காந்திதாசன்” எனப் பெயர் வைத்தார். அவ்விணையரின் இரண்டாவது மகன் தான், “கிட்டு என்ற கிருஷ்ணகுமார்”.

கிட்டுவின் உடன்பிறந்த சகோதரிகள் இருவர், சதாலட்சுமி மற்றும் சந்தானலட்சுமி ஆவர். இயக்கத்தில் அவருக்கு வைக்கப்பட்ட “வெங்கிட்டு” என்ற பெயர், பின்நாளில் மாற்றம் பெற்றிட அவர்  “கிட்டு” எனத் தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். அது மட்டுமில்லாது எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், தான் போராளி என்பதைத் தாண்டி மக்களுடன் நேசத்தோடு நெருங்கிப் பழகியதால் இவரை முதியோர்கள்  “கிட்டர்” என்றும், இளையவர்கள் “கிட்டு அண்ணா” என்றும், சிறுவர்கள் ” கிட்டு மாமா” என்றும் அன்போடு அழைப்பது வழக்கம்.

கிட்டுவின் எப்பணியும் விடுதலைக்கான பணியே எனும் பாங்கு:

1978ன்  ஆரம்ப காலப்பகுதி அது; தனித்தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப்பட்ட காலமும் அது தான். பதினெட்டு வயது நிறைந்த பாடசாலை மாணவனாக இருந்தபோதே, கிட்டு தன்னை விடுதலைப் போராளியாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். இயக்கத்தில் இணைந்த பின்னர், விடுதலைக்காக எந்த வேலையையும் எடுத்துச் செய்ய அவர் தயக்கம் காட்டியதில்லை. எடுத்துக்காட்டாக, விடுதலைப்புலிகளின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சி முகாம் 1979ல் மாங்குளம் பண்ணையில், தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் ஆரம்பமான போது யார் சமையல்? என்ற தலைவரின் கேள்விக்குப் பதிலாக, தானே முன்வந்து அந்த வேலையைச் செய்தார்.

1983ல் கிட்டு அமைப்பின் ஒரு முக்கிய உறுப்பினர்; தலைவருக்கு அடுத்ததாக இயக்கத்தில் ஆளுமை செலுத்திய முக்கியமான ஐந்து பேரில் ஒருவராக இருந்தவர். அப்படி இருந்தும் 1983ல் புதியவர்களான பொட்டு, விக்ரர், லிங்கம் போன்றவர்களுக்கான பயிற்சி முகாமில் யார் சமைப்பது என்ற கேள்விக்கும் தானே முன்வந்து சமையல் பொறுப்பை ஏற்றார். பயிற்சிக்கு வந்த புதிய உறுப்பினர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அங்கு அவர்கள் அந்த பயிற்சியில் கற்ற எல்லாவற்றையும் விட கிட்டு அண்ணாவைப் பார்த்து கற்றுக்கொண்டது ‘விடுதலைக்காக என்ன வேலை என்றாலும் அதை முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதே!

மற்றுமொரு உதாரணமாக ஐயா. பழ.நெடுமாறன் அவர்கள் கிட்டு அவர்களின் பணிவை, எளிமையை பின்வருமாறு விவரிக்கிறார், “ஒரு நாள் இரவு வெளியூர் கூட்டம் ஒன்றுக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் நான் மதுரை திரும்பிக் கொண்டிருந்தேன். மதுரை பேருந்து நிலையத்திற்கு அருகில், எனது மகிழுந்து வந்தபொழுது எங்கள் இயக்கத் தோழர்கள் சிலர், சுவர் ஒன்றில் தமிழீழச் சிக்கல் பற்றிய சுவரொட்டியை ஒட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்தேன். அவர்களிடம் பேசுவதற்காக நான் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கியபோது,  கிட்டு கீழே உட்கார்ந்த வண்ணம் சுவரொட்டிகளுக்குப் பசையைத் தடவிக் கொண்டு இருப்பதைப் பார்த்து எங்கள் தோழர்களைக் கடிந்து கொண்டேன். “அவரை எதற்காக இந்த வேலையெல்லாம் செய்யச் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யக் கூடாதா?”என்று கேட்டேன். “இல்லை அண்ணா! நானும் என்னால் ஆன உதவியைச் செய்கிறேன்” என்று கிட்டு அவர்கள் கூறியதாகப் பதிவு செய்கிறார்.

விலங்குகளுக்கும் பரிவு காட்டிய உயிர்மநேயர் கிட்டு:

1981 ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் சென்னை பாண்டி பசாரில் நடந்த மோதலில், தலைவர் பிரபாகரன் அவர்கள் கைது செய்யப்பட்டார். அப்போது இயக்கத்தின் மற்ற உறுப்பினர்களான கிட்டு, பண்டிதர், புலேந்திரன், ரஞ்சன், பொன்னம்மான், பேபி சுப்பிரமணியன் ஆகியோர் ஐயா. பழ.நெடுமாறன் அவர்களின் ஆதரவில், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் வீடு ஒன்றில் தலைமறைவாகத் தங்கியிருந்தார்கள். அப்போது கிட்டு அவர்கள் வெளியே திரிந்து கொண்டிருந்த குரங்குக்குட்டி ஒன்றை வீட்டிற்குள் எடுத்து வந்து விட்டார். தாய்க்குரங்கு கூச்சல் இட்ட வண்ணம் வீட்டை சுற்றிச் சுற்றி வந்தது. அதனுடைய கூச்சலைக் கேட்டு ஏராளமான குரங்குகள் கூடி அவைகளும் கூச்சல் இட்டன.

கிட்டுவோ குட்டியை விடுவதாக இல்லை. குரங்குகளோ அந்த இடத்தை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. அங்கிருந்த உள்ளூர்க்காரர்கள் சிலர் “குட்டியை உடனே வெளியே விடாவிட்டால், குரங்குகள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் மற்றவர்களையும் கடித்துக் குதறிவிடும்.

ஆகவே குட்டியை வெளியே அனுப்பிவிடுங்கள்” என்று சொன்னார்கள். அதன் பின்பு வேண்டாவெறுப்புடன் கிட்டு குட்டியை விடுவித்தார். பாபநாசத்தில் குரங்குக் குட்டியை வளர்க்க முடியாமல் போய்விட்டதாலோ என்னவோ யாழ் தளபதியாக இருந்தபொழுது ஒரு குரங்குக் குட்டியை அவர் பாசமாக வளர்த்து வந்தார். அது கிட்டுவின் தோளில் ஏறி உட்கார்ந்து அவர் எங்கு சென்றாலும் அவருடனேயே செல்லும்.

சென்னையில் கிட்டு அவர்கள் இருந்த பொழுது, அவர் வீட்டு வாசலில் சொறிநாய் ஒன்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த நாயைப் பிடித்துக் குளிப்பாட்டி மருந்திட்டு வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்து அதைப் பராமரித்தார். விரைவில் சொறியெல்லாம் மறைந்து நலமான நாயாக மாறிய அது, எப்பொழுதும் கிட்டுவின் காலடியில் படுத்துக் கிடக்கும். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கிட்டு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது அந்த நாய், உணவு உட்கொள்ள மறுத்து வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது; கிட்டுவைக் காணாமல் கடைசி வரை பட்டினி கிடந்து இறந்தது. இச்செய்தியை அறிந்த கிட்டு மிகவும் மனவேதனை அடைந்தார்.

யாழ்ப்பாணத்தை மீட்ட வீரத்தளபதி கிட்டு:

இலங்கையின் வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும் எண்பதுகளின் முற்பகுதி,  இராணுவத்துக்குப் பயந்து மூலையில் பதுங்கி நடுங்கி ஒடுங்கி ஈழமக்கள் வாழ்ந்த காலம் என்று. “ஆமி கோட்டையில் இருந்து வெளிக்கிடுறானாம்” என்ற செய்தி காற்றில் வந்தால் போதும்; கிட்டு காற்றினும் வேகமாகச் சென்று வெளிக்கிட்ட இராணுவத்தை மறுபடியும் கோட்டைக்குள் அடித்துத் துரத்துவார்; அப்படி அடித்துத் துரத்தும் மட்டும் ஓயமாட்டார். பலாலி, நாவற்குழி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனையிறவு இப்படி எந்த முகாமில் இருந்து இராணுவம் புறப்பட்டாலும் கிட்டு அங்கு தனது போராளிகளுடன் நிற்பார்; கிட்டு களத்தில் நிற்கிறார் என்றால் மக்களுக்கு இனந்தெரியாத துணிவு எங்கிருந்தோ வந்துவிடும்.

1985இல் கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக நியமிக்கப்பட்டார்; அதே ஆண்டு யாழ்ப்பாணக் காவல் நிலையம் தாக்கி அழிக்கப்பட்டது. சிங்கள இராணுவம் படிப்படியாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டது; புலிகளின் ஆட்சி யாழ்ப்பாணத்தில் உருவாகியது; அதன் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்டது; உள்ளுர் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது; சிறுவர்களது பொழுதுபோக்கிற்கென பூங்காக்கள் நிறுவப்பட்டன; தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைகளின் மூலம் விடுதலை உணர்வு மக்களிடையே ஊட்டி வளர்க்கப்பட்டது; முதன்முறையாக “நிதர்சனம்” தொலைக்காட்சி இயங்க ஆரம்பித்தது; “களத்தில்” என்ற செய்தி இதழ் வெளிவரத் தொடங்கியது. ஆங்கிலேயர் 1948ஆம் ஆண்டு வெளியேறியபோது முழு இலங்கையையும் சிங்களவர் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். இவ்வாறு இழந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை துப்பாக்கி முனையில் மீட்டெடுத்து, தமிழர் இறையாண்மையை நிலைநாட்டிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும்.

போர்க்களத்தில் எதிரிக்கும் உணவளித்த தகைமையாளர் கிட்டு:

கிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதியாக இருந்த காலத்திலேயே, போர்க்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவத்தினரை விடுவிக்க, கொழும்பில் இருந்து வந்த சிங்கள இராணுவத் தளபதிகள் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கிட்டு தான், சிங்கள இராணுவத் தளபதிகளுடன் கைகுலுக்கிக் கொண்ட முதல் புலித் தளபதி. 1986ஆம் ஆண்டு கேப்டன் கொத்தலாவல தலைமையில் இலங்கை இராணுவம் யாழ் கோட்டையில் முகாமிட்டிருந்தபோது யாழ் நகரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. கோட்டையிலிருந்து வெளிப்படும் இராணுவத்தினர், கண்ணில் அகப்படுவோரையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கோட்டையை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்தது. அதற்கெனத் திட்டமும் வகுக்கப்பட்டு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் கிட்டுவின் தலைமையில் முற்றுகை அணியொன்று ஆயத்தமானது. அவர் தலைமையில் நடந்த முதலாவது கோட்டை முற்றுகையானது இலங்கை இராணுவத்தை வெளியேற்றுவதற்கானதல்ல; மாறாக, அவர்களை வெளியில் வரவிடாமல் கோட்டைக்குள்ளேயே முடக்குவதற்கானதே! இந்த நிலையில் முற்றுகைத் தாக்குதல் ஆரம்பமானது.

கிட்டு தலைமையிலான புலிகள், இலங்கை இராணுவத்திற்குத் தேவையான உணவு மற்றும் ஆயுதங்களை விநியோகம் செய்த உலங்கு வானூர்திகளை கோட்டைக்குள் இறங்க விடாமல் தொடர் தாக்குதல் நடத்தினர். இது இராணுவத்துக்குப் பெரிய நெருக்கடிகளைக் கொடுத்தது. கடைசி வரை கோட்டைக்குள் ஒரே ஒரு உலங்கு வானூர்தி கூட இறங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இறுதியில் கேப்டன் கொத்தலாவல புலிகளிடம் பணிந்துபோனார்; தாக்குதல்களை நிறுத்திவிட்டு கேணல் கிட்டுவை சிறுசேணி மூலம் தொடர்பு கொண்டார். அவரின் குரல் கரகரத்தது; தாம் குடிநீர் மற்றும் நல்ல உணவின்றி சமைக்க விறகுமின்றித் தவிப்பதாகவும், ஏராளமான இராணுவத்தினர் மிகுந்த பசியோடு இருப்பதாகவும், தமக்கு உணவு விநியோகிக்கும் உலங்கு வானூர்திகளைத் தரையிறங்க அனுமதிக்கும்படியும் கேட்டார்.

கொத்தலாவலவின் வார்த்தைகளைக் கேட்ட கிட்டு இரக்கம் கொண்டார். “உங்களுக்கு வேண்டிய குடிநீர், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் விறகு ஆகியவற்றை நான் போராளிகளிடம் அனுப்பி வைக்கிறேன். உங்கள் இராணுவத்தைத் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் எனச் சொல்லுங்கள். மற்றபடி உலங்கு வானூர்தியை அங்கே தரையிறங்க அனுமதிக்கமாட்டேன்” என்றார் கிட்டு. இதற்குச் சம்மதித்த கேப்டன் கொத்தலாவல கிட்டுவுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். பின்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டபோது, கேப்டன் கொத்தலாவல யாழ் நகரில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாமுக்கு, தனது ஒரு சில இராணுவ வீரர்களுடன் வந்து தளபதி கிட்டுவைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அப்போது கிட்டு அங்கே இல்லை; தனது காலில் ஏற்பட்ட பெருங்காயத்துக்கான சிகிச்சைக்காகவும், செயற்கைக் கால் பொருத்திக் கொள்ளும் நோக்கத்துடனும் தமிழ்நாட்டில் இருந்தார். அப்போது கேப்டன் கொத்தலாவல முகாமிலிருந்த போராளிகளிடம், ”புலிகள் பயங்கரவாதிகள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தை முறியடித்தவர், தளபதி கிட்டுதான். புலிகள் மனச்சாட்சியும் மனிதநேயமும் மிக்கவர்கள்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்.

இடது காலை இழந்த போதும் மன உறுதியை இழக்காத தன்னம்பிக்கையாளர் கிட்டு:

கேணல் கிட்டு 1987ல் தேசவிரோதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, இடது காலை இழந்தபோது மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை. சிங்கள இராணுவத்தைத் தெருவழியே திரியவிடாது முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்த தளபதி கிட்டு மீது மக்கள் அளவிட முடியாத அன்பு வைத்திருந்தார்கள். இந்தச் சம்பவத்தின் பின், 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் நல்லூரில் நடத்திய மே தின நிகழ்வில், கிட்டண்ணா உரையாற்ற வருகிறார் என அறிவிக்கப்பட்டபோது மக்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அங்கு திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கிட்டண்ணா வந்த வாகனம், கடலில் ஒரு படகுபோல மிதந்து வந்தமையே மக்கள் அவர் மீது வைத்திருந்த பேரன்புக்குச் சான்றாக அமைந்தது.

அயலக பொறுப்பாளராக உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த இராசதந்திரி கிட்டு:

பின்னர் 1989ல் விடுதலைப் புலிகளின் வெளிநாடுப் பிரிவிற்குப் பொறுப்பாளராகப் பதவியேற்று வெளிநாடுகளில் அவர் புரிந்த பணிகள் அளப்பரியவை. அவர் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராகிய பின், இலண்டன் சென்று அங்கு போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளைத் துரிதப்படுத்தினார். மேற்குலக நாட்டுப் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி புலிகளின் முறையீடுகளையும், இலங்கை அரசு தமிழருக்கு இழைத்துவரும் கொடுமைகளையும் விவரித்தார், கிட்டு. இதனையறிந்த இந்திய ஒன்றியம் மற்றும் இலங்கை அரசுகள், கிட்டுவை இலண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பேரில் இறுதியாக கிட்டு, இலண்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடோடி போலத் திரிந்த அவர் எந்த நாட்டில் இருந்தாலும், அந்நாட்டிலிருந்தே தனது அலுவலக வேலைகளைச் செய்தார். மேற்குலக நாடுகளில் பிரபலமான “குவேக்கர்ஸ்” அமைப்பு இலங்கை சென்றது. அங்கு அரசுத்தரப்பு மற்றும் புலிகளுடன் பேசி, சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அது வலியுறுத்தியது. இலங்கையைத் தவிர்த்து வேற்று நாடொன்றில் அந்தப் பேச்சு அமைவது என முடிவெடுக்கப்பட்டது. அப்பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் கிட்டு இருந்ததால், அவர் தலைவர் பிரபாகரனிடம் நேரில் பேசி முடிவெடுக்க தமிழீழம் நோக்கிப் புறப்பட்டார்.

இந்திய ஒன்றியத்தின் வஞ்சகமான சூழ்ச்சிக்குப் பலியான மாவீரன் கிட்டு:

கிட்டுவும் அவரது குழுவும் எம்.வி. அகத் என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவரோடு லெப். கேணல் குட்டிசிறி உள்ளிட்ட ஒன்பது போராளிகளும் உடன் வந்தனர். இந்தக் கப்பலை 1993-ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் நாளன்று இந்தியக் கடற்படை முற்றுகையிட்டு, இந்தியாவை நோக்கித் திருப்பும்படி சொல்லியது. கிட்டு அதற்கு உடன்பட மறுத்தபோது, 16ஆம் நாள் காலை 6 மணி வரை கெடு விதிப்பதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும்;  இல்லையெனில் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறை பிடிக்கும் என்றும் எச்சரித்தனர். 16ஆம் நாள் காலை சரியாக 6 மணிக்கு இரண்டு உலங்கு வானூர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிடுகின்றன.

கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்க தயாரானார். 1993 சனவரி 16 காலை 6.30 மணிக்கு இந்தியக் கப்பற்படை பீரங்கிக் குண்டுகளால் கிட்டுவின் கப்பலைத் தாக்கத் தொடங்கியதும், சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்பிக்கச் சொல்கிறார் கிட்டு. கேணல் கிட்டுவுடன் லெப். கேணல் குட்டிசிறி, லெப். கேணல் மலரவன், கடற்புலிகளான கேப்டன் குணசீலன், கேப்டன் ஜீவா, லெப். தூயவன், லெப். நல்லவன், லெப். அமுதன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

கிட்டுவின் மரணத்தால் கிழிபட்ட இந்திய ஒன்றியத்தின் அகிம்சை முகமூடி:

கிட்டுவின் கப்பல் சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பிரான்ஸிலிருந்து திலகர் அவர்கள், ஐயா பழ.நெடுமாறனுக்குத் தெரிவித்தார். இதனையொட்டி, ஐயா பழ.நெடுமாறன்  பத்திரிகையாளர்களின் கூட்டத்தைக் கூட்டி, தகவல் தெரிவித்த பின்னரே இந்தச் செய்தி, தமிழீழப் பத்திரிகைகளில் வெளியானது. இது குறித்து அவர் கூறுகையில், 1993-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கிட்டுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துப் பேச அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றினைக் கூட்டியிருந்தேன். இதில் பெருஞ்சித்திரனார், சாலை. இளந்திரையன், பண்ருட்டி இராமச்சந்திரன், துரைசாமி, மணியரசன் புலமைப்பித்தன் உள்ளிட்ட 26 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிட்டுவின் மரணத்தைக் கண்டித்து, தென்பிராந்திய ராணுவத் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.செய்தி வெளியான அன்றே என்னையும், உடனிருந்த தோழர்களையும் கைது செய்தனர்.

ஐந்து நாள்களுக்குப் பிறகு பிணையில் விடப்பட்டோம். சனவரி 27-ஆம் நாளன்று மீண்டும் என்னையும், பெருஞ்சித்திரனார், பொழிலன் ஆகியோரையும் தடா சட்டத்தில் கைது செய்தனர். கிட்டுவின் படுகொலையையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு, எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறையில் இருந்தபடியே சென்னை உயர்நீதிமன்றத்தில் கிட்டு பற்றிய ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தேன். எதிர்மனுதாரர்களாக இந்தியப் பாதுகாப்புத் துறை, இந்திய உள்துறை, தமிழகக் காவல்துறைத் தலைவர் ஆகியோரைச் சேர்த்திருந்தேன். இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்திய அரசு முதலில் சாதாரணமாகத்தான் நினைத்தது. ஆனால், அரசின் உயர் வழக்கறிஞர் வந்து வாதாடவேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து நடந்த இந்த வழக்கின் மூலம் கிட்டு இந்தியக் கடல் எல்லையில் ஊடுருவவே இல்லையென்பதும், அவர் வந்த கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்கு அப்பால் 440 கடல் மைலுக்கு அருகே வந்து கொண்டிருந்ததாகவும், கிட்டு கப்பலில் வரும் உளவுத் தகவல் கிடைத்தபிறகு அவரது கப்பலை வழிமறிக்க, இந்தியக் கப்பற்படை சென்றது என்பதும் வெட்டவெளிச்சமானது. மேலும் அவர் கப்பலோடு வலுக்கட்டாயமாக இந்தியக் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும்படி மிரட்டப்பட்டார் என்பதும், அவர் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் அதிரடிப்படை உலங்கு வானூர்தியின் துணையுடன் கப்பலினுள் இறங்கிய நிலையில், அவரும் அவருடன் வந்த போராளிகளும் சயனைட் அருந்தி உயிர் துறந்தனர் என்பதும், அவர்கள் வந்த கப்பலும் வெடித்துத் தகர்ந்து வங்கக்கடலுக்குள் போனது என்பதும் ஊரறியக் கிடைத்தது.

பெருமுயற்சிக்குப் பின்தான் கிட்டு மரணம் குறித்த உண்மைகள் பல வெளியுலகுக்குத் தெரியவந்ததோடு, உளவுறுதியுடன் உண்ணாநோன்பிருந்த தியாகதீபம் லெப். கேணல் திலீபன், அமைதிப்படையால் நம்பவைத்து ஏமாற்றப்பட்ட லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு புலிகள் ஆகியோரோடு புலம்பெயர் தேசங்களில் இராசதந்திரியாகத் திறம்பட இயங்கிய கேணல் கிட்டுவையும் திட்டமிட்டுக் கொலை செய்த இந்திய ஒன்றியத்தின் அகிம்சை முகமூடி, மூன்றாவது முறையாகக் கிழிபட்டது. அதன் தேசிய இன ஒடுக்குமுறை செய்யும் கோரமான வன்முறை முகத்தைப் புலிகள் தோலுரித்து, இந்த துரோகத்தினை நிறுவியதன் வழியாக அனைத்துலகுக்குக் காட்டினர்.

கிட்டுவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கிய தலைவரின் இரங்கல் செய்தி:

மாவீரர் கிட்டுவின் இழப்பு, தலைவர் பிரபாகரனுக்குத் தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியது; அவர் கிட்டுவின் இறப்பைத் தொடர்ந்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “என் ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக என் சுமைதாங்கும் இலட்சியத் தோழனாக இருந்தவர். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாற்பட்டது. ஒரே இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில், நாங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில், ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த மனித நேயம் இது. கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். ஓய்வில்லாது புயல் வீசும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவர் ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையில் எமது தேசமே விழித்துக் கொண்டது. கிட்டு… நீ சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

திரு. குப்புசாமி,

செந்தமிழர் பாசறைசவூதி அரேபியா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles