நவம்பர் 2023
மாவீரர்கள் நாள்
தனது மண் காக்க தன்னையே தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூர்ந்திட மாவீரர் நாளை நாம் கடைபிடிக்கிறோம். நவம்பர் 27 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மாவீரர் நாளாக 1989இல் அறிவிக்கப்பட்டு, அதுவே முதலாவது தமிழீழ மாவீரர் நாளாக அனுசரிக்கப்பட்டது. இனவிடுதலைப் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக இயங்க அவர்கள் நினைவிடங்களின் முன்னே உறுதி ஏற்றுக் கொள்கின்ற உன்னத நாள் தான், மாவீரர் நாள். இறப்பை வென்று மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் நாம் மனம் விட்டு பேசும் உயிர்ப்பு நாள் இது.
நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, தமிழீழப் போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதலாவது மாவீரரான போராளி லெப்.சங்கர் வீரமரணம் அடைந்தார். அவரைப்போலவே தனது இன்னுயிரை இனத்தின் மீட்சிக்காக இழந்த அனைவருக்கும் மாவீரர் நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, நன்றி நவிலப்படுகிறது.
மாவீரர் நாளில் பெருவாரியான தமிழ்மக்கள் மாவீரர் துயிலுமிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச் சுடரேற்றுதல், மலர் தூவி வணங்குதல் என்பன மாவீரர் நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம் பெறுகின்றன. மாவீரர் நாள் கடைபிடிக்கப்படும் மாதத்தில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ, தமிழீழத் தேசியக்கொடியின் வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு தமிழர்களின் தேசியப் பூவாகத் திகழ்கிறது.
“ஒரு இலட்சியத்திற்காகவே வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகவே போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே தமது வாழ்வை ஈகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்” என்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்; அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்து இருக்கிறோம்; இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். ஈழத்தமிழ்மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் ஈழப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது, மதித்துப் போற்றுவது நமது அடிப்படை கடமை எனக் கருதுகிறார்கள்.
மாவீரர்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளார்கள்.
திருமதி. இராஜலட்சுமி கருணாகரன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.