spot_img

மாவீரர் பூலித்தேவன்

செப்டம்பர் 2023

ஆங்கிலேயப்படையுடன் போர் செய்து வெற்றி பெற்ற  முதல் தமிழர் மாவீரர் பூலித்தேவனின் வீரவரலாறு

இளமைக்காலம்:

மதுரையில் 1529 ஆம் ஆண்டு முதல் 1736 ஆம் ஆண்டு வரை நாயக்க மன்னர்களின் ஆட்சி  நடைபெற்றது. இவர்களில் 1529 ஆம் ஆண்டு முதல் 1564 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் பாண்டிய நாடு 6 மண்டலங்களாகவும், 72 பாளையங்களாகவும்  பிரிக்கப்பட்டது. மதுரை, திருவில்லிபுத்தூர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் சுமார் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவருக்கு அப்பாளையத்தின் மீதான முழு அதிகாரமும் வழங்கப்பட்டது.

பூலித்தேவரின் மூதாதையர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் பகுதியிலிருந்து வந்து, சங்கரன்கோயிலின் “ஆவுடையாபுரம்” என்ற பகுதியில் கோட்டையொன்றைக் கட்டி ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களுக்குரிய மரியாதை அவர்களுக்கு இருந்தது. அந்தப் பரம்பரையின் பத்தாவது வாரிசான பூலித்தேவர் சித்திரபுத்திர தேவர் – சிவஞான நாச்சியார் இணையருக்கு நன்மகனாய்ப் பிறந்தார். ஆறடி உயரமும், ஒளி பொருந்திய முகமும், திண்ணிய தோள்களும், பவளம் போன்ற உதடுகளும், அகன்ற மார்பும் உடைய மாவீரர் பூலித்தேவர். காத்தப்ப பூலித்தேவன் எனும் இயற்பெயரைக் கொண்ட பூலித்தேவர் சிறுவயதிலேயே வீரமும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவருக்கு, 1726 ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது. தனது ஆட்சித் தலைமையகத்தை ஆவுடையாபுரத்திலிருந்து நெற்கட்டான் செவ்வலுக்கு மாற்றி, அங்கு பெரிய கோட்டை ஒன்றையும் அவர் கட்டுவித்திருந்தார்.

ஆறாம் வயது முதல் அவருக்கு முறையான கல்வி அளிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளை பூலித்தேவன் பயின்று வந்தார். ஏனைய தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தானே கவிதை எழுதும் அளவுக்குத் திறம் பெற்று விளங்கினார். பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான போது போர்ப்பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்ப வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்து வகையான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டத்தில் பூலித்தேவனின் பங்கு:

கப்பம் கேட்டு வந்தவர்களிடம், “கப்பம் என்ற பேரில் சல்லிக்காசு கூடத் தர முடியாது” என்றும், கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது” என வீர முழக்கமிட்டார், பூலித்தேவர். இதன் காரணமாக நெற்கட்டான் செவ்வல் கோட்டை ஆங்கிலேயப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளானது. பூலித்தேவரின் விவேகம் மிகுந்த வீரத்தின் முன், ஆங்கிலேய தளபதியின் வீரம் எடுபடவில்லை. அந்தப் போரில் பூலித்தேவரின் தரப்பு வெற்றி பெற்றது. இதன் காரணமாக, கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலேயப்படையுடன் போர் செய்து வெற்றி பெற்ற முதல் தமிழர் என்ற பெருமை பூலித்தேவர் வசமானது. இந்திய விடுதலைப் போரின் முதல் வெற்றியும் இதுவே!

1750 இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னைப் பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவன் வெற்றி பெற்றார் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது. 1765  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கி கேப்டன் பெரிட்டன் பூலித்தேவனிடம் தோற்றார். பின்னர் 1766 ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போது அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். நெருக்கடியான சூழ்நிலையில் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கிற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவன் மறுத்துவிட்டார்.

பூலித்தேவர் ஆட்சி செய்த காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள், ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளை தமிழகம் சந்தித்துக் கொண்டிருந்த காலமது. இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்து பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தீவிரமாக விவாதித்து, பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். பூலித்தேவன் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர்.

நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராட்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது. ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றொரு முகம்மதிய அரசருக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவினரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் அப்பகுதி மன்னர்களுடன் நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் 1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்சாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தும் போது, வெள்ளையனை விரட்டி அடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டில், நெற்கட்டும் செவ்வல் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின்  கைக்கூலியான மாபூசுகானை தோற்கடித்தார். இதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

 1756 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் மாபூசுகானுடன் பூலித்தேவர் நடத்திய போரில் பூலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த பூலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபூசுகான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினார்.

மாபூஸ்கான், கர்னல் கீரோனுக்கு செய்தி அனுப்பி உடனே புறப்பட்டு வரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவன் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர்வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாகக் கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையக்காரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை.

பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக்காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள். இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவரிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து சுதேசிப் படைகளின் தலைவர் ஆன பின் அந்நியர் ஆட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தார்.

இறுதிக்காலமும் மறைவும்:

1755 ஆம் ஆண்டு தொடங்கி 1767 ஆம் ஆண்டு வரை பல போர்களை பூலித்தேவன் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவன் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.

1761 ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அதற்குப்பின் ஆங்கிலேயப்படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்த நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவன் கடலாடிக்கு தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டுச் சென்றாலும் இரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவன் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.

பூலித்தேவன் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாக தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணி கோட்டையின் தலைவர் அனந்த நாராயணன் என்பவர் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு அவர் கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலில் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவன் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் தோன்ற கை விலங்குகள் அறுந்து விழ அவர் அச்சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலி சிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

திரு. விஜயகுமார்,

தலைவர், தோகா மண்டலம்,

செந்தமிழர் பாசறை  – கத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles