நவம்பர் 2022
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
ஒரு மொழியின் பாதுகாவலர் அந்த இனத்தின் பாதுகாவலராகவே அறியப்படுகிறார். முத்தமிழ்க் காவலர் என எல்லோராலும் அறியப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 1893 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி திருச்சியில் பெரியண்ணன் சுப்புலட்சுமி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். தமிழ் தந்த பெரும்பான்மையான மேன்மக்களைப் போன்றே விசுவநாதம் அவர்களும் முறையான பள்ளிப்படிப்பை கற்றவர் இல்லை. மணலிலே முதன் முதலில் தமிழ் எழுத்துக்களைக் கற்று உலகத் தமிழர் செம்மல் என போற்றப்பட்டவர்.
நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள். திரு.வி.க. நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கண இலக்கியங்களை தாமாகவே கற்றுத் தேர்ந்தார். தன் தந்தையையே பேராசானாய்க் கொண்டு தொழில் முறையையும், கணக்கையும் கற்றார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த முன்னோர் வழிவந்த விசுவநாதம் அவர்கள் பல்கலைக்கழகம் அமைத்து தமிழ் மொழி வளர்க்க வேண்டும் எனும் பேராவல் கொண்டு உழைத்தவர். தொன்மொழிகள் பலவும் வழக்கொழிந்து போனதை உணர்ந்த அவர் 60 ஆண்டுகள் பாடுபட்டு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவிக்க காரணமானார். அவ்வாறே தமிழுக்கென்று 49 பேர் கொண்ட புலவர் குழுவினையும் தோற்றுவித்தார். ஆரியர்களின் சூழ்ச்சியால் சமஸ்கிருதம் தெரிந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும் என்ற நிலை இருந்தபோது அதனை எதிர்த்து களமாடி எளிய தமிழ் பிள்ளைகளும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழ் அறிஞர்களோடு சேர்ந்து களமாடிய முதன்மையான போராளி விசுவநாதம் அவர்கள். தன் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத தகைமையாளர். பெரியாரோடு இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும் பெரியாரின் திராவிட நாடு கொள்கையில் உடன்பாடில்லாதவர்.
ஆரியர்களும் திராவிடர்களும் தமிழ் இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை தங்கள் கைகளில் எடுத்து அதனை திரித்து நம்மீது திணிக்கப்பட்டதை உணர்ந்த விசுவநாதம் அவர்கள் தமிழிசை மீட்சிக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தார். தமிழிசை இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாடெங்கிலும் சுற்றித்திரிந்தார் முத்தமிழ்க் காவலர்.
உலகப் பொது மறையாம் திருக்குறளை தன் பேச்சாலும் எழுத்தாலும் உலகின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் கொண்டு போய் சேர்த்த தமிழ்மறைக் காவலர். தமிழர்களின் பாரம்பரியமான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தின் மீது அதீத நாட்டம் கொண்டதன் விளைவாக அதன் வளர்ச்சிக்கு தன் பேச்சின் மூலமும், எழுத்தின் மூலமும், கருத்தரங்குகள் மூலமும், மாநாட்டின் மூலமும் தொண்டாற்றினார் என்றால் மிகையாகாது. “சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்” என்றும் போற்றப்படுபவர். எளிய மக்களுக்கும் புரியும்படியான கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள் போன்றவற்றை தமிழுக்கு கொடுத்த போதிலும் தமிழறிஞர்களைத் தவிர்த்து அவை பொதுமக்களைச் சென்றடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
வள்ளுவர், வானொலியிலே, ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும், அறிவுக்கு உணவு, தமிழ் மருந்துகள், வள்ளுவரும் குறளும், எண்ணக் குவியல், தமிழ்ச்செல்வம், திருக்குறள் புதைபொருள் பாகம் 1. திருக்குறள் கட்டுரைகள், நான்மணிகள், ஆறு செல்வங்கள், தமிழின் சிறப்பு, நல்வாழ்வுக்கு வழி, திருக்குறள் புதைபொருள் பாகம் 2, நபிகள் நாயகம், மணமக்களுக்கு, வள்ளலாகும் அருட்பாவும், எனது நண்பர்கள், அறிவுக்கதைகள், திருக்குறளில் செயல்திறன், மாணவர்களுக்கு, எது வியாபாரம்? எவர் வியாபாரி? போன்றவை இவர் எழுதிய நூல்கள் ஆகும்.
இவர் எழுதிய 36 நூல்களில் 23 நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 20072008 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டு முதல், “கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” ஆண்டுதோறும் தமிழக அரசால் தமிழ் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை தமிழுக்காகவே வாழ்ந்த மாமனிதர், கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையோடு மட்டும் நில்லாமல் அவர் வழி வாழ்ந்தோம் என்று வாழ்வதே சிறப்பானது.
திருமதி. பவ்யா இம்மானுவேல்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.