சூலை 2023
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்
ஈழத்தில் பிறந்து இனிய தமிழுக்குத் தொண்டாற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர், சுவாமி விபுலானந்தர். இவர் ஆற்றிய தமிழ்ப் பணிகளும் சமூக சேவைகளும் இவரைத் தமிழினம் எஞ்ஞான்றும் போற்றுமளவு உயர் நிலையில் வைத்திருக்கின்றன.
பிறப்பும் கல்வியும்:
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காரைத்தீவு எனும் ஊரில் 1892 ஆம் ஆண்டு மார்ச்சு ஆம் மாதம் 27 ஆம் நாள் இவர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி; தாயின் பெயர் கண்ணம்மா. இவரது இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும்.
ஆரம்பக் கல்வியை கல்முனை மெதடிஸ் கல்லூரியில் கற்ற பின், மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1912 இல் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விஞ்ஞானம் பயின்று, 1916 இல் அறிவியலில் பட்டம் பெற்றார்.
கல்விப் பணி:
இவர் ஒரு தமிழ் ஆசிரியராக மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரியில் தனது கல்விப்பணியைத் துவங்கினார். பின்பு கொழும்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று பண்டிதர் பட்டம் பெற்றார். இலங்கையில் இருந்து இந்தப் பட்டத்தை பெற்றுக்கொண்ட முதல் நபர் இவராவார்.
துறவு வாழ்க்கை:
யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளினுடைய பழக்கம் துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்தர் ஆக்கியது. இவர் துறவு பூண்டாலும் மக்களை விட்டு விலகவில்லை; அன்னைத் தமிழ் மீதான பற்றும் குறையவில்லை.
நற்குணங்களும் புகழும்:
ஏதோ இந்த பூமியில் பிறந்து வளர்ந்து மடிந்தோம் என்று இல்லாமல், மனிதன் வாழ்கிறான் என்பதற்கு அடையாளமே, அவனது நற்குணங்களாலும் நற்செயல்களாலும் புகழ்பெறுதல் தான். புகழ் என்பது நாம் செய்யும் செயல்களின் விளைவாகத் தாமே நமக்கு வந்து சேருவது;
புகழுக்குரிய பண்புநலன்கள் வெளிப்படாமலோ அல்லது செயல்கள் ஆற்றாமலோ பெயர் பெறமுடியாது.
புகழ் பெறுவது மட்டுமல்லாமல் இகழ்ச்சி நேராமலும் காத்துக் கொள்ள வேண்டும். ஒருவனைச் சுற்றி வாழும் மக்கள் அவனுடைய நற்பண்புகளை அறிந்து போற்றுவது, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் புகழ் (நிலவரை நீள் புகழ்) எனப் பல புகழ்நிலைகள் பேசப்படுகின்றன. அப்படிப்பட்ட பல்நிலை புகழுக்குச் சொந்தக்காரர் தான், சுவாமி விபுலானந்தர். அவரது கல்விப்புலத் தமிழ்ப்பணி அத்தகைய புகழை அவருக்கு ஈட்டித் தந்திருக்கிறது.
தமிழ்ப் பணி:
அறிவியல் கல்வியானது தமிழில் போதிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இவரிடம் இருந்ததால், அறிவியல் கலைச் சொல்லாக்கத்துக்காக உழைத்திருக்கின்றார். “யாழ்நூல்” என்ற மிகச்சிறந்த நூலை இவர் படைத்திருக்கிறார். இது பழந்தமிழரின் இசைக்கருவியான யாழ் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலாக இன்றுவரை போற்றப்படுகின்றது. 14 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக இந்த நூல் உருவாக்கப்பட்டது.
இலக்கியப் படைப்புகள்:
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தெளிவாகக் கற்று, அவற்றின் பெருமைகளை அனைத்து மக்களுக்கும் புரியும் படியாக தனது நூல்களிலும் கட்டுரைகளிலும் இவர் எழுதி இருந்தார். மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றினால், அவரை முதன்மைப்படுத்தி தனது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டினார்.
தாழ்த்தப்பட்ட மக்களும் மேன்மையடைய வேண்டுமென்று விரும்பினார். நவீன மனிதனுக்கு தேவையான பழங்காலச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் வாய்ந்தவையாக உள்ளன. முத்தமிழை முதன்மைப்படுத்தி இவர் எழுதிய நூல்களும் ஆய்வுகளும், சிறந்த கருத்துக்களை உடையனவாகக் காணப்படுகின்றன.
என்றும் நினைவுகூரத்தக்க தகைமையாளர்:
இலங்கை தீவில் பிறந்து, இன்னருந்தமிழைப் பெருமைப்படுத்திய விபுலானந்தர் அவர்கள், 1947 ஆம் ஆண்டு சூலை மாதம் 19 ஆம் நாள் உடல்நலக் குறைவினால் உயிர் இழந்தார். இறக்கும் முன்னரே தான் கனவு கண்டதனைப் போலவே, தன்னாலியன்ற பங்களிப்பைத் தமிழுக்குத் தந்து சென்றிருக்கின்றார். ஈழத்தில் பிறந்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கும் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன என்றால் அது மிகையன்று.
சூலை 19 முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் நினைவு நாள்
திரு. சி.தோ.முருகன்,
துணைச் செயலாளர்,
இணையதளப் பாசறை,
செந்தமிழர் பாசறை – குவைத்.