சனவரி 2023
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
நம்மில் பலரும் மொழிப்பற்றும், இனப்பற்றும் உடையவர்கள் தான். ஆயினும், அம்மொழிக்கு நாம் ஆற்றும் தொண்டு என்ன?
தனித்தமிழுக்கு வித்திட்டார் பரிதிமாற்கலைஞர்;
செடியாக செழிக்கவைத்த செம்மல் மறைமலை அடிகள்;
மரமாக வளர்த்து மாண்புறச் செய்தவர் தேவநேயப்பாவாணர்.
சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஞானமுத்து பரிபூரணம் இணையருக்கு பத்தாம் குழந்தையாய் பிறந்தவர் தேவநேசன். தனித்தமிழ் மீது தான் கொண்ட பற்றினாலும், தமிழ்ப் பண் இயற்றும் ஆற்றல் கொண்டதாலும் தன் இயற்பெயரை தேவநேயப்பாவாணர் என்று மாற்றிக்கொண்டார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து தன் சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து, கல்வி பயின்று சிறந்ததொரு ஆசிரியராக விளங்கினார். கற்றலின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது ஐம்பதாவது வயதில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றார். இளமையிலேயே மறைமலை அடிகள் மீது பேரன்பு கொண்டு அவர் ஏற்படுத்திய தனித்தமிழ் இயக்கத்தின் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே மாணவர்களுக்குள் உள்ள சிறந்த பண்புகளை வெளிப்படுத்தவும், கற்றல் எனும் நெருப்பை பற்ற வைக்கவும் முடியும் என்பதை தன் வாழ்வின் மூலம் உண்மையாக்கியவர். தாய் மொழியின் மீது பற்று கொண்ட மாணாக்கர்களை இனங்கண்டு அவர்களுள் தமிழுணர்வை நெருப்பென பற்றச் செய்து பாவலரேறு போன்ற பேராசான்களை தமிழுக்குத் தந்தவர். அம்மாணாக்கர்கள் “பாவாணர் பரம்பரை” என்ற தனித்த அடையாளங்களைக் கொண்டு திகழ்ந்தனர். தாய்மண்ணிற்கான விடுதலை அடைய மக்களெல்லாம் முயற்சித்த அதே காலகட்டத்தில் மொழிக்கான விடுதலையை நாடியவர் தேவநேயப்பாவாணர். ஆரியர்களின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு கிடந்த தமிழ் மொழியை மீட்பதே மொழி விடுதலை என கருதினார். மொழிகளிலெல்லாம் மூத்த மொழி நம் தமிழ்மொழி என்பதை நிறுவ அரும்பாடுபட்டார். வடமொழிதான் தமிழுக்கு மூலம் என்று பிதற்றித் திரிந்த ஆரியர்களுக்கு சம்மட்டியாக தமிழ் தான் வடமொழிக்கு மூலம் என்பதை தன் ஆய்வின் மூலம் நிறுவினார்.
“கீழையுலக மொழிகட்கு மூலமாகவும் மேலையுலக மொழிகட்கு மூச்சாகவும் தமிழ் உள்ளது. உலகமொழிகட்குத் தாயாக இருக்கின்ற அந்த மூல மொழியே தமிழாக வளர்ந்துள்ளது. எனவே தமிழை முதற்றாய் மொழி எனலாம்.” என்கிறார் பாவாணர்.
உலகத்தின் மூத்த மொழி என்று இன்றளவும் அறியப்படும் கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை உலகத்திற்கு காட்டியவர். உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி என நிறுவுவது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே. அதற்காக, நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தொன்மை, முன்மை, மேன்மை, எண்மை, ஓண்மை, வண்மை, வாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை போன்ற 16 வகைச் சிறப்புகளை உடையது நமது தமிழ்மொழி என்கிறார் பாவாணர்.
“மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம். முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்.” என்றும், உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்றும் கூறி அதனை அறிவியல் மற்றும் மொழியியல் ஆய்வுகளின் மூலம் நிறுவியதே தேவநேயப்பாவாணர் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவ காரணம்.
சமகாலத்தில் இயங்கி வரும் அச்சு, காட்சி ஊடகங்கள் மற்றும் ஆரிய திராவிட சிந்தனையாளர்கள் பிற மொழிச் சொற்களை தமிழில் கலப்பதை விரும்பி ஏற்று செய்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இதன்மூலம் பாவாணரின் கருத்திற்கு ஏற்ப இவர்கள் தமிழுக்குரிய சிறந்த வரிவடிவத்தைச் சிதைத்து இழி வழக்குகளை எழுத்து மொழியில் புகுத்தும் நோக்கமுடைய தமிழ்ப் பகைவர்கள் என்றே கருத முடிகிறது. இதனை பாவாணர் இவ்வாறு கூறுகிறார்:
“தேவையின்றிப் பிற மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதை வேண்டுமென்றே ஆதரிப்பதும் தமிழுக்குரிய சிறந்த வரி வடிவத்தைச் சிதைத்து இழி வழக்குகளை எழுத்து மொழியில் புகுத்துவதும் தமிழ்ப் பகைவர் செயலாகும்.” தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு பற்றிய ஆய்வுத் தொகுப்புகள் கொண்ட 26 நூல்களை எழுதியுள்ளார். அடுத்த தலைமுறைக்கு தமிழை எளிய முறையில் இலக்கணப் பிழையின்றி எழுத வழிகாட்டி நூல் ஒன்றை வெளியிட்டார். சொல்லின் அமைப்பின் மூலம் வேர்ச்சொல்லை அறியும் வித்தையை கற்ற வித்தகர். அவ்வாறே பழந்தமிழ் விளையாட்டுகள், தமிழர் திருமணம், பழந்தமிழ் ஆட்சி போன்ற நூல்களில் தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை விரிவாக எடுத்துரைக்கிறார்.
தேவநேயப்பாவாணர் ஆற்றிய தமிழ்த் தொண்டில் முதன்மையாகக் கருதப்படுவது அகரமுதலி திட்டத்தலைவராக இருந்து அச்சில் வராத புதிய தமிழ்ச் சொற்களை கண்டறிந்து தொகுத்ததே ஆகும். ஒரு இனத்தின் மரபை மீட்டெடுக்க எஞ்சி இருக்கும் ஒரே கருவி மொழிதான் அவ்வாறே அகண்ட தமிழ் நிலத்திற்குள் ஊடுருவிய ஆரியர்கள் களவாடி சிதைத்த தமிழ் மரபை மீட்கும் பேராயுதமாக தமிழ் மொழியை பயன்படுத்தி மீட்டுருவாக்கம் செய்தவர் தேவநேயப்பாவாணர். தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படும் ‘மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் 1981 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
“தமிழை மேன்மையடைய செய்ய தமிழில் பேசுங்கள்” எனும் அறைக்கூவல் விடுத்து, நம் மொழிக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையை உணர்த்தியுள்ளார்.
திருமதி. பவ்யா இம்மானுவேல்
செந்தமிழர் பாசறை – அமீரகம்.