டிசம்பர் 2023
மொழியியல் வரலாற்று ஆய்வாளர்
தக்கார் ம.சோ. விக்டர்
“எந்தவொரு மொழி தன் சொற்களுக்கான வேர்ச்சொல்லைத் தன்னகத்தே கொண்டுள்ளதோ, அம்மொழி தான் உலகின் முதல் மொழி; அதன் அடிப்படையில் பார்த்தால் தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி” – ஐயா தக்கார் ம.சோ. விக்டர்.
தனது கடந்தகால வரலாற்றை அறியாத எந்தவொரு இனமும் எழுச்சி பெற்று எழ இயலாது என்பது அறிஞர்கள் கருத்து. அதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த காலங்களில் பகைவர்களால் நமது உண்மை வரலாறு நம்மிடமிருந்து திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலப் பழமை கொண்ட ஒரு இனத்தின் பாரம்பரிய வரலாற்றை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைப்பது என்பது சாத்தியமில்லை; அப்படி மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றை உலகறிய உரத்துக் கூறும் இன்றைய நமது சம கால மொழியியல் வரலாற்று ஆய்வாளர் தான் ஐயா தக்கார் ம.சோ. விக்டர் அவர்கள்.
இளமைக்காலம், மணவாழ்க்கை மற்றும் ஆசிரியப்பணி:
ம.சோ. விக்டர் அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி அன்று, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராசன் பேட்டை எனும் ஊரில் பிறந்தார். உள்ளூரில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர், அதன் பின்னர் கடலூர் மாவட்டத்தில் உயர்நிலை வகுப்பை முடித்தார். அதனையடுத்து பட்டப்படிப்பைத் தொடர இயலாத காரணத்தால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, செயங்கொண்டத்தில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் 1968ல் தனது சொந்த ஊரில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த “குழந்தை தெரசா” என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, தனது ஆசிரியர் பணியை அரியலூரில் தொடர்ந்தார்.
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தவர், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து அதே பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரலாற்று ஆய்வுகளுக்காக 1992 ஆம் ஆண்டு தனது பணிக்காலம் முடிவதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றார். ஆசிரியர், வரலாற்று ஆய்வாளர், மொழியியல் ஆய்வர், எழுத்தாளர், பேச்சாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர் ஐயா ம. சோ. விக்டர் அவர்கள். சிறுவனாக இருந்ததில் இருந்து பள்ளியில் வகுப்புகள் எடுக்கும் காலம் தொடர்ந்து, பிறமொழிச் சொற்கள் சிலவற்றில் தமிழ்ச் சாயல் இருப்பதை கவனித்ததால், அப்போது இருந்தே அவர் உள்ளத்தில் மொழியியலில் வேர்ச்சொல் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது எனலாம்; அந்த உந்துதல் தான் இன்று அவரை இவ்வளவு தூரம் கொண்டுவந்துள்ளது எனலாம்.
வேர்ச்சொல்லாய்வில் ஆர்வமும், ஆற்றிய தொண்டுகளும்:
ஆரம்ப காலங்களில் ஆய்வுத் துறையில் இருந்த ஆர்வத்தால் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கியவரின் கவனத்தை, மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களது நூல்கள் மிகவும் ஈர்த்தன. பாவாணரது வேர்ச்சொல் பற்றிய விளக்க நூல்களைக் கற்றுத் தேர்ந்த பின், அவர்க்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவரான ஞானப்பிரகாச அடிகளாரது வேர்ச்சொல் ஆய்வுகளையும் இவர் கற்றுத் தெளிந்துள்ளார். எனது வேர்ச்சொல் விளக்கங்களுக்கான அறிவைத் தந்தவர்கள் ஞானப்பிரகாசர், தேவநேயப் பாவாணர் மற்றும் கார்த்திகேயனார் என விக்டர் ஐயாவே பலமுறை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வேர்ச்சொல் ஆய்வாளர் என்றே அறியப்படும் ம.சோ. விக்டர் அவர்கள், தான் ஒரு வேர்ச்சொல் ஆய்வாளர் மட்டும் இல்லை; தமிழ் மொழி, தமிழ் இனத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதே தனது முதல் பணி என்று கூறுவதோடு “வரலாற்றை மீட்டெடுக்கும் ஆய்வுகளில், மொழிகள் மற்றும் அதன் வேர்ச்சொற்கள் குறித்தும் ஆய்வு செய்வது மிக முக்கியம்” என யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அதற்காகவே வேர்ச்சொல் குறித்த அதிக அளவில் ஆய்வுகள் செய்வதாகக் கூறியுள்ளார்.
தமிழும் உலக மொழிகளும் – பன்மொழி ஒப்பீட்டாய்வுத் தளப் பங்களிப்பு:
ஒரு மொழியை மட்டும் கற்றவனால் அந்த மொழியில் உள்ள சிறப்புகளை மட்டும் எடுத்துக் கூற இயலுமே தவிர, பிற மொழியை விட எந்த விதத்தில் தன் மொழி சிறப்பானது என்று ஒப்பிட்டுக் கூற இயலாது. பல மொழிகளைப் பயின்ற பின்னரே பாரதி கூறினார், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று. அதுபோலத் தான் ம.சோ. விக்டர் ஐயா அவர்களும் சமற்கிருதம், எபிரேயம், பாபிலோனியம், அரபி, கிரேக்கம், இலத்தீன், எகிப்தியம், ஆங்கிலம் மற்றும் அதனோடு சார்ந்த பல மொழிகளையும் ஆய்வு செய்த பின்னரே, தமிழ் தான் உலக மொழிகளுக்கு மூலமாகவும், இந்திய மொழிகளுக்குத் தாயாகவும் உள்ளது என்று குறிப்பிடுகிறார். இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கமளித்துள்ள இவர் அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, மலேசியா, அரபு நாடுகள் என இன்னும் பல உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மொழிகளையும், அம்மொழிச் சொற்களில் உள்ள தமிழ் மொழியின் தாக்கத்தையும், அங்குள்ள பழங்குடியின மக்கள் பேசும் மொழியில் தமிழ் மொழி சார்ந்து உள்ளவைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். இந்தக் கட்டுரை வெளியாகும் நேரம், ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுப் பழங்குடியினர் பற்றிய ஆய்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.

பல உலக நாடுகளில் உள்ள தமிழர்களிடையே இவர் சொற்பொழிவு ஆற்றுவதுடன், அங்குள்ள பெரிய பெரிய பல்கலைக்கழகங்களிலும் சொற்பொழிவாற்றியுள்ளார். இங்கிலாந்து மலேசியா போன்ற நாடுகளில் இவரது நேர்காணல்கள், வானொலிகளில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இதுவரை நூற்றிமுப்பதிற்கும் மேற்பட்ட தமிழ், தமிழர் வரலாறு மற்றும் மொழி குறித்த வேர்ச்சொல் ஆய்வு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் ஐயா ம.சோ. விக்டர் அவர்கள். இவரது அனைத்து படைப்புகளையும் மொத்தமாகத் தொகுத்து “யாத்திசை” மற்றும் “தமிழம்” பதிப்பகங்கள், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஆதரவோடு இரண்டு தொகுதிகளாக வெளியிட்டனர். அதன் முதல் தொகுப்பு அண்ணன் சீமான் மற்றும் ஐயா பெ. மணியரசன் அவர்களால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம் பெறாத பல சாதனைகளும், ஐயாவைக் கொண்டாட வேண்டிய அவசியமும்:
பிரான்சு நாட்டில் செயல்பட்டு வரும் யுனெஸ்கோ நிறுவனம், ஆப்பிரிக்க வரலாற்றைத் தொகுத்தது போல, தமிழின வரலாற்றையும் தொகுக்க வேண்டும் என்று அவர்களது நடைமுறைகளைப் பின்பற்றி கிட்டத்தட்ட எழுபது பக்க விண்ணப்பக் கடிதத்தை எழுதி அவர்களிடம் கொடுத்தார். அதுகுறித்த பரிசீலனை யுனெஸ்கோ நிறுவனத்திடமிருந்து இந்திய ஒன்றிய அரசிற்கு வந்தபோது, எங்கே தமிழரது உண்மை வரலாறு உலகறிய வெளியே வந்து விடப் போகிறதோ என்று அஞ்சிய அன்றைய காங்கிரஸ் அரசு, ஏற்கனவே இந்திய ஒன்றியத் தொல்லியல் துறையால் தமிழின வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த முயற்சியை முறியடித்து விட்டது.
ஐயா ம.சோ. விக்டர் அவர்கள் கிட்டத்தட்ட தனது நாற்பது ஆண்டுகால வாழ்வை தமிழ், தமிழ் இனம் மற்றும் தமிழர் வரலாற்றிற்காகவே அர்ப்பணித்தவர். எண்பது அகவையினைக் கடந்து இன்னமும் அவரது தமிழ்ப்பணி வீரியமுடன் தொடர்கிறது. இத்தகைய செயற்கரிய பெரும் ஆய்வுப் பணியை இந்தியாவின் சமற்கிருதம் அல்லது இந்தி மொழி குறித்தோ அல்லது உலகின் பிற நாடுகளில் உள்ள ஏதோவொரு மொழி குறித்தோ அவர் செய்திருந்தால், இந்நேரம் பெருவாரியாகக் கொண்டாடப்பட்டிருப்பார். இவரது ஆய்வுகள் தமிழ் சார்ந்தும், தமிழர் வரலாறு சார்ந்தும், தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகவும் இருப்பதனால் இவரை இந்தத் தமிழ் தமிழர் விரோத ஆரிய திராவிட அரசுகள் ஒடுக்க நினைக்கின்றன.
எந்தவொரு இலாப நோக்கம் கிஞ்சித்துமற்று தமிழுக்காவும் தமிழர்களுக்காவும் மட்டுமே பாடுபட்டு வரும் இவர், தன் ஆய்வுகளுக்காக விண்ணப்பித்த முனைவர் பட்டத்தைக் கூடத் தர மறுத்து விட்டன, இந்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள். எந்த அரசையும், அவர்கள் தரும் சலுகைகளையும், அதனால் கிட்டும் பெயர் புகழையும் எதிர்பார்த்து இவர் இத்தமிழ்த் தொண்டு செய்யவில்லை; முழுக்க முழுக்க தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடும் இவரை, இதுவரை தமிழர்கள் கூட பெரிய அளவில் அங்கீகாரம் அளித்துப் போற்றாதது வருத்தத்துக்குரியதே! பல ஆளுமைகளை அவர்கள் இருக்கும் போது அடையாளப்படுத்த மறந்து, பின்னாளில் கொண்டாடுவது போல் இல்லாமல் ஐயா காலத்திலேயே அவருக்கு ஆதரவளித்து அவரது தமிழ்ப் பணிக்குத் துணை நிற்போம்! அனைத்து தமிழ் மக்களிடமும் ஐயாவைக் கொண்டாடிக் கொண்டு சேர்ப்பதன் மூலம், தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழர் வரலாற்றையும் மீட்டெடுப்போம்!
திரு. ப. காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.