சூலை 2023
வரலாற்று ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன்
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி என்றார், தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சி பெற இயலாது என்றார் லெனின். வரலாற்றைப் படிக்காதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்பது அண்ணல் அம்பேத்கரின் கூற்று. ஒவ்வொரு தலைவரின் பார்வையிலும் வரலாறு அறிதல் என்பது அத்தியாவசியமாகவே தெரிகிறது. ஒரு இனத்திற்கு வரலாறு என்பது தனது தொன்மையை நிறுவ, வாழ்வியலை நிலைநிறுத்திக் கொள்ள, கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டெழ அவசியம் தேவைப்படுகிறது.
தமிழர்கள் நாம் நமது மெய்யான வரலாற்றைத் தேடாததால் எங்கிருந்தோ யாரோ வந்து நமது வரலாற்றை அவர்களுக்கு ஏற்றாற்போல் திரித்துக் கூற விட்டிருக்கிறோம்; அதையும் உண்மையென நம்பி நாம் படித்தும் கொண்டிருக்கிறோம். இதில் வேதனை என்னவென்றால் கடந்த காலங்களில் தமிழ் வரலாற்றை ஆராய்ந்தவர்களில் அநேகம் பேர் தமிழர்கள் இல்லை என்பது தான். இத்தனை ஏன்? பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற தமிழர்களிடம் பரவலாக அறியப்படும் பல தமிழ் வரலாற்றுப் புதினங்கள் கூட தமிழர்களால் எழுதப்பட்டது இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் நமது உண்மை வரலாற்றை நாம் அறியவில்லை; யாரோ சொல்லும் பொய்களைத் தான் கேட்டுக்கொண்டிருந்தோம் என்பதுவே!
வெள்ளைக்காரன் வந்து சொல்லும் வரை நமது பாட்டன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் யார் கட்டியது என்றே நமக்குத் தெரியவில்லை. கடந்த காலங்களில் நம்மிடையே வரலாற்று ஆர்வம் என்பது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அண்மையில் சில ஆண்டுகளாகத் தமிழ்த்தேசிய எழுச்சி மற்றும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்குப் பின் தமிழர்களிடம் வரலாறு சார்ந்த தேடல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இக்காலத் தமிழ்சார் ஆய்வாளர்கள் ஐயா ஒரிசா பாலு, ஐயா ம.சோ விக்டர் போன்றோர் வரிசையில், தமிழ் மக்களை எப்படியெல்லாம் ஆரியர்களும் திராவிடர்களும் தமிழர் வரலாற்றை மறைத்துத் திரித்து வைத்து ஏமாற்றியுள்ளனர் என்பதையும், தமிழ் மக்கள் அறியாத நம் வரலாற்றையும் தகுந்த ஆதாரங்களோடு பேசி விளக்கி வருபவர்தான் தமிழ் நாணயவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் திரு இரா.மன்னர் மன்னன் அவர்கள்.
பயிற்று படைப்பகம் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பல புத்தகங்களை எழுதியும், வலையொளிக் காணொலிகள் வாயிலாகவும் வரலாற்றைப் பற்றிய பெரும் தாக்கத்தை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியும் வரும் இளைஞர் மன்னர் மன்னன் அவர்கள். தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்ட இவர், ஊடகவியலாளர், பத்திரிகையாளர்,மேடைப் பேச்சாளர், திரைக்கதை எழுத்தாளர், புத்தக எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பன்முக திறன் கொண்டவர். ஆயுத தேசம், பல்லவர் வரலாறு, இராஜராஜ சோழன்,The First Launch, விளம்பர வேட்டை, பணத்தின் பயணம், வரலாற்றில் சில திருத்தங்கள் மற்றும் ஆதித்த கரிகாலன் கொலை என எட்டு வரலாற்று நூல்களை எழுதியுள்ள மன்னர் மன்னன், பல அரிய தகவல்களைக் கொண்ட காணொலிகளையும் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ்த்தேசியம் சார்ந்து இயங்கும் ஒவ்வொருவரையும் முடக்க நினைக்கும் ஆரிய திராவிட அதிகார மையம், சரியான தரவுகளோடு தமிழர் வரலாற்றைப் பேசி வரும் மன்னர் மன்னன் அவர்களது கருத்துக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றி வருகிறது. அதையெல்லாம் முறியடிக்க அவரது புத்தகங்களை வாங்கிப் படித்தும், காணொலிகளைக் கண்டும் நாம் நமது உண்மை வரலாற்றை அறிந்து கொள்வதோடு, பிறருக்கும் பகிர்ந்து தமிழர் வரலாற்றையும், மன்னர் மன்னன் அவர்களையும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். வரலாறே இல்லாத இனத்திலிருந்து, இல்லாத வரலாற்றைத் தேடிப் பல அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வருகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடைய நம் இனத்திலிருந்து வரலாற்றை ஆய்வு செய்ய அதிகம் பேர் வர விரும்பாதது மிகவும் வேதனைக்குரியது மட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட. ஆகவே இன்று சிறப்பாக இயங்கும் மன்னர் மன்னன் போன்றோருக்கு நாம் அங்கீகாரத்தையும், ஆதரவையும் நல்கும்போது, அது அடுத்த இளம் தலைமுறை பிள்ளைகளை இத்துறையை நோக்கி ஈர்ப்பதாகவும் அமையும்.
திரு.காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.