அக்டோபர் 2023
வருங்கால சந்ததி வாழப்போவது எங்கே?
எனது ஊர் சுப்பராயபுரம், மணக்கால் அஞ்சல், அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், 621713. அங்கு இருக்கும் சூழலியல் சிக்கல்கள் என்னைக் கவலையுறச் செய்கின்றன. எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள்… எங்கே எப்போது கிடைக்கும் அவற்றுக்கான தீர்வுகள்?!
நிலத்தடி நீர் 400 அடிக்குக்கும் கீழே சென்றது ஏன்?
பணத்தாசையினால் இவர்கள் ஒருபுறம் மண்ணை வெட்டிக் கொண்டே தோண்டிச் செல்கிறார்கள்; அதன் காரணமாக அங்கங்கே குறைந்த பட்சம் 600 அடிகள் தோண்டப்பட்டுவிட்டன. வல்லுனர்கள் சொல்வது இன்னும் 25 ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று; எப்படிப் பார்த்தாலும் அழிவு உறுதியாகிவிட்ட நிலத்தில், நமக்கு ஏது எதிர்காலம்?
மலைகளை வெட்டியது ஏன்?
நான் சிறுவயதில் ஏரியில் குளித்துவிட்டு மாலை நேரத்தில் கரையில் நின்றபடி பார்த்தால், மலையில் சூரியன் மறைவது தெரியும். ஆனால் இன்று மலையைக் காணவில்லை. சாலையில் போகும்போதெல்லாம் கணக்கின்றி பாளம் பாளமாய் வெட்டிக் கூறு போடப்பட்டக் கொண்டிருக்கும் பாறைகளைக் காண்கையில் நெஞ்சம் பதறுகிறது. இயற்கையின் கொடையை இவ்வாறு வேட்டையாடுவது எவ்வகையில் நியாயம்?
காற்றில் விசத்தைப் பரப்பியது யார்?
என்னை சுற்றி உள்ள பல சிமெண்ட் ஆலைகளில் இருந்து வரும் புகை, தூசு காரணமாக மூச்சு முட்டுகிறது. மருத்துவ கழிவுகள் மற்றும் நெகிழிப் பைகள் எரிக்கப்படுவதால் வெளிவரும் நச்சு, காற்றில் கலந்து விசமாக மாறி என் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியாகளாக மாற்றிவிட்டது. குறைந்தபட்சம் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத நிலையில் தான் அடுத்த தலைமுறை வாழ வேண்டுமா?
ஏன் வெப்பம் தகிக்கிறது என் நிலத்தில்?
காலநிலைக்கேற்றார் போல், நாம் வாழும் நிலத்தின் வெப்பநிலை மாறும். ஆனால் ஆலைகள் வெளிவிடும் இந்த நச்சுப்புகையின் காரணமாக மழை பொழிவது குறைந்து எங்கள் நிலம் வறண்டு போனது; உழவும் பொய்த்துப் போனது; வாழ்வாதாரம் கேள்விக்குறியானது; வறுமை தொடர்கதையானது.
நிச்சயமில்லா எதிர்காலம் குறித்த அச்சம் எப்படி வந்தது?
தரையில் நீரில்லை; காற்றில் விசத்தன்மை அதிகம்; ஈரப்பதம் குறைவு. இன்று என் ஊரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகச் செயலிழப்பு, கண் எரிச்சல், ஆஸ்துமா, மாதவிடாய்க் கோளாறுகள் என்று பல நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இப்பொழுது சொல்லுங்கள்! இதற்கு யார் பொறுப்பேற்பது? யாரேனும் சொல்லுங்கள்! வருங்கால சங்கதி வாழப்போவது எங்கே?
திரு. அ.இராசவேல்,
துபாய் மண்டலப் பொருளாளர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.