மே 2023
வாடிவாசல்
1947 ஆம் ஆண்டு திரு.சி.சு.செல்லப்பா அவர்கள், திரு.க.நா.சுப்பிரமணியம் அவர்களின் “சந்திரோதயம்” இதழில் தொடராக எழுதிய கதை தான் “வாடிவாசல்”. தனது 35ம் அகவையில் ஆசிரியர் இதை முதன்முதலில் கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டார். பின் 1959 இல் பதிப்பிக்கப்பட்டு, தற்போது அது தொண்ணூறு பக்கக் குறுபுதினமாக புத்தக வடிவில் கிடைக்கிறது. இதைத் தழுவியே இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்கள் வாடிவாசல் படத்தை எடுத்து வருகிறார். தமிழ் எழுத்துலகில் ஏறுதழுவுதலை மையமாக வைத்து வந்த முதல் படைப்பு மற்றும் முக்கியமான படைப்பு என்று இக்குறுநாவல் கூறப்படுகிறது.
“பிச்சி” யின் தந்தை சல்லிக்கட்டில் “காரி” என்ற காளை குத்தி இறந்துவிடுவார். தன் தந்தையைக் கொன்ற காளையை, ஊர் முன் அடக்குவதே “பிச்சியின்” நோக்கம். பெரியபட்டி சமீன் நடத்தும் சல்லிக்கட்டில் கலந்துகொண்டு யாராலும் அணைய இயலாது என்று சொல்லப்படும் “காரியை” (பெரியபட்டி சமீனின் காளை) அவன் எவ்வாறு அணைகிறான் என்பதுதான் கதை. அதிகபட்சமாக 4 மணி நேர கால அளவிற்குள் இக்கதைக்களம் அமைகிறது. அதற்குள் பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
அடிப்படையில் சல்லிக்கட்டு காளைக்கும், மனிதனுக்குமான வீர விளையாட்டு என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் கூட, உண்மையில் அது மனிதனுக்கும், மனிதனுக்குமான சண்டை. சாதீய வேற்றுமைகள், வர்க்க வேறுபாடுகள், தனிமனிதப்பகை எனப் பல்வேறு நுண்ணிய கூறுகளால் இது கட்டப்பட்டிருக்கிறது. தனது காளை பிடிபட்டதும், சமீன்தார் ஊர் முன் காளையை சுட்டுக் கொன்றுவிடுவார். பிடிபட்ட காளையை வளர்த்தவர்கள் வேல்கம்பை வயிற்றில் பாய்ச்சிக் கொன்ற வரலாறுகளும் உண்டு. சல்லிக்கட்டில் காளை பிடிபடுவது இயல்பே என்றாலும் எது வளர்த்த காளையைக் கொல்லத் தூண்டுகிறது?
“பிச்சி” என்பவன் ஒரு எளியவன்; மாடுபிடித்தலில் சிறந்தவன்; சமீன்தாரை அவன் சந்திக்கும்போது பயந்து, கூனிக்குறுகிய நிலையில், பேசச் சொற்களற்றவனாக இருக்கிறான். அதே மனிதன், சல்லிக்கட்டுக் களத்தில் யாரையும் கண்டுகொள்ளாத, காளைகளை அணைவதேயே இலக்காகக் கொண்ட ஒரு மாவீரனாக இருக்கிறான். இத்தகைய உளவியலை அவன் எவ்வாறு பெறுகிறான்? இப்புதினத்தை வாசிக்கும்போது இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளும், அவற்றுக்கான தெளிவான விடைகளும் நமக்குள் தோன்றும்.

பிச்சி, மருதன், அம்புலி, மொக்கையன் என்ற பெயர்களை வைத்தும், அதற்கு எதிர்நிலையில் வைக்கப்படும் “சமீன்” என்ற பெயரை வைத்தும் மக்களையும், அவர்களின் நிலையையும் புரிந்து கொள்ளலாம். கதை முழுக்கச் சொல்லப்படும் “தெக்கத்தி சீமை”, “கிழக்குச் சீமை”, “பெரியபட்டி சமீன்”, “வாடிபுரம் காளை” போன்ற சொல்லாடல்கள், இந்தக் கதை தமிழகத்தின் எந்த நிலத்தில் நடக்கிறது? அம்மக்களின் வாழ்வியல் என்ன? என்ற தேடலைத் தூண்டும்.
உள்ளபடியே தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் வெகுமக்களது வாழ்வியலை, சல்லிக்கட்டினூடாக அவர்களது வட்டார வழக்கிலேயே சொல்லும் விறுவிறுப்பான ஒரு புதினம் தான் “வாடிவாசல்”.
திரு.கோபாலகிருஷ்ணன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.