மார்ச் 2023
விலைவாசி உயர்வும் மக்களின் திண்டாட்டமும்!!
இன்றைய காலத்தில் மட்டுமன்று
எந்தக் காலத்திலும் கொடியது வறுமை;
அதிலும் இளமையில் வறுமை மிகவும் கொடியது.
பாமர மக்களும், பட்டதாரி இளைஞர்களும் போராடுவது ஒருவேளை உணவுக்காகவும் ஒரு சாண் வயிற்றுக்காவும் தான். முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் தாக்கத்தால், மேலை நாட்டினரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றும் எண்ணத்தை நம் இளைஞர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் பாமர மக்களுக்கோ அன்றாடம் தங்களது வாழ்க்கையை எப்படி நகர்த்துவது என்ற கேள்வி உட்படப் பல வினாக்கள் எந்நாளும் துரத்துகின்றன.
நம் நாட்டில் பெரும்பாலான இளைஞர்களுக்குப் படிப்பிற்குத் தகுந்த வேலைகள் கிடைப்பதில்லை. படிக்கும் போதும் எந்தத் துறை சார்ந்து படிப்பது என்ற வழிகாட்டலின்றி, ஆசையில் ஆர்வக் கோளாறில் படித்து விட்டுப் பிறகு, அதற்குரிய வேலை தாயகத்தில் கிடைக்காததால் வெளிநாட்டில் கிடைக்கும் வேலையைச் செய்து வாழ்க்கையை கழிக்கின்றார்கள். இது ஒருபுறம் என்றால் மறுபுறம் உழைப்புக்கேற்ற ஊதியம் தராது அப்பாவிகளின் உழைப்பைச் சுரண்டி வாழும் அவலமும் இன்றளவும் தொடர்கின்றது. தொடர்ந்து பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் வளச்சுரண்டல்களும் இங்கு தொடர் கதையாகியுள்ளது. இதனால் பொருளாதார வீழ்ச்சியும், வேலையில்லாத் திண்டாட்டமும் தொடர்ந்து கொண்டே உள்ளது. விலைவாசி ஏற்றம், வரி உயர்வு, இன்னும் பல சுமைகள் மக்களின் தலைமேல் கூரிய கத்திகளாகத் தொங்கிக் கொண்டு இருப்பது மிகவும் வேதனை.
ஒரு தாய் தனது பிள்ளைக்குப் பசியறிந்து பாலைக் கொடுப்பது போல, தனது நாட்டின் மக்களுக்கு என்ன தேவையென அந்த அரசும் அறிந்து, சட்டங்களை இயற்ற வேண்டும். நிறைவான வேலைவாய்ப்புகளை, உறுதியான வாழ்வாதாரங்களை அரசுகளும் உருவாக்க வேண்டும். இலவசங்களைத் தவிர்த்து, மக்களின் சுய தேவைகளை உணர்ந்து அவர்களுக்குத் தரமான சேவைகளைச் செய்திட வேண்டும். படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் சமமாக வேலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அனைவருக்கும் சமமான தரமான இலவசக் கல்வி, மருத்துவம் கிடைத்து விட்டால், பொருளாதாரத் தேவையில் ஒரு குறிப்பிட்ட பங்கு சேமிப்பாகி மற்ற தேவைகளுக்கு அந்த வருவாயைப் பயன்படுத்திட முடியும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை நன்கு உயர்த்திய பின்பு வரிகளை கூட்டும் முயற்சிகளை அரசு எடுக்கலாம். இதற்கும் மேலாகத் தற்சார்பு பொருளாதாரத்தை அரசும், மக்களும், ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து முன்னெடுக்கும்போது, நமது பல சிக்கல்களுக்கு எளிய நிரந்தரமான தீர்வுகளை எட்ட முடியும்.
மக்களும் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையிலும் இருந்து முற்றிலும் வெளியேறாது, தேவையான மாற்றங்களோடு முடிந்தளவு பின்பற்றி வாழ்ந்திடல் வேண்டும். ஆகக்கூடிய மட்டும் நடை பயணம், மிதி வண்டியைப் பயன்படுத்துதல் போன்ற சின்னச் சின்ன செயல்களால் பொருளாதாரம் மீதம் ஆவதைப் போல, உடலும் வலுப்பெறும். எந்த சூழலிலும் இயற்கையோடு இயைந்து, யாவருக்கும் நலம் பயக்கும் வாழ்வை வாழ முயற்சித்தால், அதுவே நன்மை பயக்கும் நல்வாழ்வு.
திரு.பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.