spot_img

வீரத்தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை

சூலை 2023

வீரத்தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள தில்லையாடி என்ற ஊரில் முனுசாமி-மங்களத்தம்மாள் என்ற தம்பதியினர் நெசவுத் தொழில் செய்து வந்தனர். அவர்கள் வணிக காரணங்களுக்காகப் பின்னாட்களில் தென் ஆப்பிரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.  தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பார்க் நகரில் 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி பிறந்தார் தில்லையாடி வள்ளியம்மை. அங்கிருந்த காலனியப் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்ற அவர், தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கினார். இந்தியாவை ஒருமுறை கூட பார்த்திராத நிலையில், வள்ளியம்மை இந்தியா மீது கொண்டிருந்த நாட்டுப்பற்று போற்றத்தக்கது.

அப்போது தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக்கு எதிராக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  போராடிவந்தார். அங்கு ஆங்கிலேய ஆட்சியில் கொடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தன. நிற வேற்றுமை, கடும் வரிச்சுமை, தேவாலயங்களில் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் போன்றவை மக்களைப் போராடத்தூண்டின. காந்தியினது போராட்டம் மீதான  ஈர்ப்பால் தானும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டும் என முடிவு செய்தார் வள்ளியம்மை. அப்போது தென்னாப்பிரிக்க “கேப்” உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்நாட்டில் இனி “கிறித்தவ மதச் சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது” என்பதே அத்தீர்ப்பு. இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்குச் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும் ஆயிற்று. இத்தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர்.

காந்தி இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டத்தை வளர்த்தார். அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள். காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன; விடுதலைக் கனலை விரைந்து மூட்டின. புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது, வள்ளியம்மையின் தன்மான உணர்வைத் தாக்கியது. வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை. அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்தி, இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். 

ஏனெனில் இந்தத் திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே அங்கீகாரமில்லாத ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும் வன்கொடுமைச் சட்டம் இது என்றார் காந்தி. 1913 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப்படை கூடியது. அது ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறிக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் கஸ்தூரிபா, வள்ளியம்மை மற்றும் வள்ளியம்மையின் தாயார். “வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!” என்று வள்ளியம்மை முன் வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச் செய்தது! ” எங்கள் தேசத்தில் சூரியன் மறைவதில்லை” என்று பிரித்தானிய அரசு பேசி வந்த ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க,  காலனி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது. 

ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன் முன்னேறியது. நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாகிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள். போராட்டக் களத்தில் அரசு அதிகாரி ஒருவர் “மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துவேன்!” என்று கூறியபோது முன்னே வந்து நின்று, “என்னை முதலில் சுடு!” என்றார் வள்ளியம்மை. மறுமுறை போராட்ட களத்தில், “உங்களுக்கென்று ஒரு கொடி கூட இல்லை! நீங்களெல்லாம் கூலிகள்! உங்களுக்கு இத்தனை வெறியா?” எனக் கேட்க, ஒரு கணம் கூட சிந்திக்காமல் தான் உடுத்தியிருந்த சேலையை கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்து, “இதோ! இதுவே எங்கள் கொடி!!!” என்றார் வள்ளியம்மை.

நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. அவர்கள் உடனடியாக வேலை நிறுத்தம் செய்தனர். தமது தமிழ் மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும் உற்சாகமானாள் வள்ளியம்மை. போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, எல்லோரும் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக் கேடான சூழ்நிலை வேறு. சிறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி அதற்கொரு மூடி, அதிலேதான் மலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும். தகுந்த மருத்துவ வசதியும் இல்லை. மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள்; உடல்நலம் பாதிக்கப்பட்டாள். 

“உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்!” என்றான் வெள்ளைக்கார சிறை அதிகாரி. “அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்!” என்று மறுத்துவிட்டாள்.  இவரின் போராட்டக் குணம் கண்டு மூன்று மாதச் சிறைக்கு பின் அரசே, இவரை விடுதலை செய்ய முன் வந்தபோது, தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வெளியே வரமாட்டேன் என்று கூறினார். 13 வது வயதில் போராட்டக் களம் கண்டு 16வது வயதில் சிறை சென்ற வள்ளியம்மை, தனது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியதன்பின் தான் விடுதலையாகி வெளியே வந்தார்.

பத்தே நாளில் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து தன் பிறந்தநாளான 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 22 நாள் (அகவை 16) மரணம் அடைந்தார் வள்ளியம்மை. இவரின் இறப்புச்  செய்தியறிந்த காந்தி, மிகவும் வருத்தப்பட்டு,  ‘வள்ளியம்மை இந்தியாவின் புனித  மகள்’ என்றார். பிறகு இந்தியா வந்தபோது தில்லையாடி ஊர் சென்று அந்த மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார் காந்தி. தில்லையாடி வள்ளியம்மையின் போராட்டக் குணம் மற்றும் தியாகத்தைப் போற்றும் விதமாக, 1971ம் ஆண்டு இவரது நினைவாக தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் பொது நூலகத்துடன் கூடிய தில்லையாடி வள்ளியம்மை நினைவு அரங்கு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

திரு. .நாகராஜ்

தொழிற்பேட்டை தலைவர்,

செந்தமிழர் பாசறை – கத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles