spot_img

வீழ்த்தப்பட்ட பெருமரம் (தமிழினத்தின் மீதான அரசியல், பொருளாதார, சமூகப்பண்பாட்டுப் படையெடுப்புகள்)

மே 2022

வீழ்த்தப்பட்ட பெருமரம் (தமிழினத்தின் மீதான அரசியல், பொருளாதார, சமூகப்பண்பாட்டுப் படையெடுப்புகள்)

“பல்தேயத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச்சிறப்பின் பட்டினம்” எனப் புகார் நகரின் சிறப்பைக் கூறுகிறது, பட்டினப்பாலை. இதன் பொருள், வணிகத்தின் பொருட்டு, பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களுக்குள் சிக்கல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக வாழும் நகரம், புகார் என்பதே. அக்காலத்தில் புகார் நகரம் மட்டுமன்று; தமிழ்நிலமென்பதே நாகரீகத்தில் முன்னேறி நகரவாழ்க்கையைக் கைக்கொண்ட, துறைமுகங்கள் ஒயாதியங்கிச் செழித்திருந்த, செம்மாந்து வாழ்ந்த வணிகச் சமூகத்தின் இருப்பிடமாக இருந்தது. கொழுத்துப் பயனளித்தப் பழமரமாக இருந்த தமிழினம், இன்று அடியற்ற மரம் போல, அத்தியவசியமானவற்றுக்குக் கூட வெகுண்டெழ முடியாத வண்ணம் வீழ்ந்து கிடக்கிறது. இதற்குக் காரணம் திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நம் மீது நிகழ்த்தப்படும், அரசியல், பொருளாதார சமூகப் பண்பாட்டு படையெடுப்புகள் தாம்.

அன்றிலிருந்து இன்று வரை தொடரும் பண்பாட்டுப் படையெடுப்பு:

சிந்துவெளி நாகரீகக் காலந்தொட்டே, தமிழியத்துக்கும் ஆரியத்துக்குமான பண்பாட்டுச் சமர் தொடங்கிவிட்டது. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்ற சமத்துவத்தோடும், நகரநாகரீகமாக, உழவை முதன்மையாகவும், இன்னபிற தொழில்களிலும் சிறந்த உற்பத்தியோடும், தாய்வழிச் சமூகமாக இருந்தது தான், தமிழர் வரலாறு. ஆனால் கிராம வாழ்வும், மேய்ச்சல் தொழிலும் கொண்ட நாடோடிகளான ஆரியர்கள், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கற்பிக்கும் வருணாசிரமத்தையும், அதைச் சமூகத்தின் பயன்பாட்டு விதியாக நிறுவ, இறுக்கமான சாதீயக் கட்டமைப்புப் படிநிலைகளையும், அதைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்க, தொல்குடிகளின் வழிபாடுகளையெல்லாம் திருடித் தன்வயப்படுத்தி, இல்லாத “இந்து” எனும் மதத்தையும் உருவாக்கினர். இதை வளர்க்கப் பெண்ணடிமைத்தனச் சடங்கு, சம்பிரதாயங்களை, மூடநம்பிக்கைகளைத் திணித்து, புரியாத சமசுகிருதத்தில் தொழுதலை நடத்துகிற பிராமணர்கள் வழி வழிபாட்டினை வணிகமாக்கி, நம்மை உளவியல் அடிமைகளாக ஏய்க்கும் நிலை இன்று வரை தொடர்வது, உள்ளபடியே ஒரு உரிமைச்சிக்கல். இன்று அந்த மதத்தின் அடிப்படையிலான வெறுப்பரசியல், குறைந்தபட்சமாக நாம் உருவாக்கி வைத்திருந்த சமூக ஒப்புரவைத் தின்று செரித்ததோடு, தன் அடங்காப்பசிக்கு ஆட்களை பலிகேட்டு அலைகிறது.

இந்திய ஒன்றிய நிலப்பரப்பில் பெரும்பகுதி நிலத்தை ஒன்றிணைத்து, முதல் பேரரசாகப் பரிணமித்ததாக, கிடைத்திருக்கும் வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகள் சொல்வது, மௌரியப் பேரரசைத் தான். அந்தக் காலந்தொட்டு, மத்திய கால டெல்லி சுல்தானிய கில்ஜி மரபு அரசு வரையிலும், தமிழ்நிலம் தன் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காமல், தமிழரசர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. ஆரியத்தின் பண்பாட்டுச் சுரண்டலையும் பெருமளவு தடுத்து நிறுத்த இந்த ஆட்சியதிகாரமே முக்கிய காரணம். இதற்கு எடுத்துக்காட்டாக, மெய்யியல் மற்றும் வழிபாட்டுப் புலத்தில் சமசுகிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் சனாதனப் பார்ப்பனீயத்தை விட்டொழித்து, பூந்தமிழின் தீஞ்சுவையில் இறைநெறி இலக்கியங்களைத் தேவாரமாகவும், திருவாசகமாகவும், பாசுரங்களாகவும் பாடவும், தொகுக்கவும் அரசர்களே பெருமளவு உதவிகள் செய்துள்ளனர். அதுவே ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கிச் செழித்த பக்தியிலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தில், தமிழரசர்களின் பண்பாட்டுப் புலப் பங்களிப்பு. ஆனால், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னாக இந்த ஆகூழ் போய், போகூழ் வந்ததன் காரணமாகவோ என்னவோ, நிலை தலைகீழாக மாறிப் போனது.

அரசியல் படையெடுப்புகளும், அதிகபட்ச எதிர்மறை விளைவுகளும்:

1300 களின் தொடக்கத்தில், தமிழகத்தையாண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசில் வாரிசுரிமைப் போர் ஏற்பட, அதைத் தீர்க்க டெல்லி சுல்தானிய அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தலையிட்டதன் விளைவு, மதுரைச் சுல்தானியம் உருவானது. இதனை அழிக்க விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் உட்புகுந்திடப் பின்னும் மராத்தியர்கள், ஐரோப்பியர்கள் அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் போன்று தொடர்ச்சியாகத் தமிழரல்லாதவர்கள் தான், தமிழ் நிலத்தை ஆளும் உரிமை பெற்றிருந்தனர். இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்டம் முடிந்தும் கூட, மண்ணின் மைந்தரான காமராசரைத் தவிர்த்து, அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ்நாடு தமிழர்களால் ஆளப்படவும் இல்லை; தமிழர்கள் வாழத் தகுந்ததாகவும் இல்லை என்பதே சுடும் உண்மை. ஆளும் அரசியல் உரிமையை இழந்ததால், நாம் சந்தித்த கொடுமைகளைச் சொல்லி மாளாது; சொற்களில் வடிக்க இயலாது.

மிகவும் குறிப்பாக விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் கொண்டு வந்த பாளையக்காரர் முறையில், தமிழர்களிடமிருந்து பெருமளவு நிலத்தைப் பிடுங்கி, அரசியல் காரணங்களுக்காக வலிந்து குடியேற்றப்பட்ட தமிழரல்லாதவர்களிடம் பல்வேறு பாளையங்களாகப் பிரித்துத் தந்தது. மேலும் வரி அல்லது திரை வாங்கவும், அதைச் சிக்கலின்றி நிகழ்த்தத் தேவையான காவல்படையை வைத்திருக்கவுமான உரிமைகளையும் தமிழரல்லாதவர்க்குக் கைமாற்றியது. திட்டமிட்டு நடந்த இந்தச் சதியால், தமிழர்கள் நிலமற்றக் கூலிகளாக, சொல்வதைச் செய்யும் அடிமைகளாக, அடித்தாலும் அழக்கூடாத அடிமைகளாக, நிலமும், வளமும், உடைமைகளும், உரிமைகளையும் ஏன் இன்று அடையாளத்தையும் கூட இழந்து தவிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.

அதிகார இழப்பும், அடிப்படைக் கட்டமைப்பையே குலைத்த சமூகப் பொருளாதாரப் படையெடுப்புகளும்:

ஏறக்குறைய அடுத்த வேளை உணவுக்கும், உடலை மறைக்கும் உடைக்கும், ஒதுங்கி உறங்கும் இடத்துக்கும், திருமணம் போன்ற விழாக்களுக்கும், அதில் செய்யப்படும் சடங்குமுறைகளுக்கும், வாழ்வின் பிடிமானமான வழிபாட்டுக்கும் என எல்லாவற்றுக்கும் தமிழர்கள், தமிழரல்லாத நிலச்சுவான்தார்களையும், பண்ணையார்களையும் அண்டியிருக்க வேண்டிய இழிநிலை, ஆளும் அதிகாரத்தை இழந்ததால் காலவோட்டத்தில் வந்தது. இதனால் தமிழ்நிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் முன் எப்போதுமில்லாத வகையில், விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்தன. சாதீயப் படிநிலைகள் இறுகி, அவற்றுக்கு உள்ளேயும் வெளியேயும் வேறுபாடுகள் கூர்மைப்படுத்தப்பட்டு, அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த மதம் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. கல்வி குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே என்றாகிப் பிறருக்கு மறுக்கப்பட்டதோடு, மரபுத் தொழில்கள் நசிக்கப்பட்டு, கலைஞர்களும், கைவினைஞர்களும் கசக்கிப் பிழியப்பட்டு, வேறுவிதமான தொழில்களில் வலிந்து ஈடுபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.

கடுமையான வரையறைகள் வாழ்வியலில் திணிக்கப்பட்டு, மீறுவோர்க்கு அதிகபட்சமாக உயிர்க்கொலை போன்ற தண்டனைகள் வரை கொடுக்கப்பட்டன. ஆரியத்தின் அடிவருடிகளாக, அவர்களின் நோக்கங்களைச் செயலாக்கம் செய்யும் கங்காணிகளானத் தமிழரல்லாதவர்கள் ஏற்படுத்திய அடிமுதலான எதிர்மறை விளைவுகள், ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையே குலைத்துப் போட்டதோடு, தமிழர்களை இன்றுவரை அடிமையிலும் அடிமையாக வாடும் ஈனநிலைக்குத் தள்ளியிருக்கிறது. சொந்த நிலத்திலேயே ஏதிலிகளாக மாறி, இரண்டாம் தரக் குடிமக்களாக நாம் ஆக்கப்பட்டதற்குக் காரணம், தொடர்ச்சியான சமூகப் பொருளாதாரப் படையெடுப்பேயன்றிப் பிரிதொன்றில்லை. நம் அரசியல், பொருளாதாரம் மற்றும் வழிபாடு, இவற்றில் ஒன்று நம்மிடமில்லையென்றாலும் கூட, நாம் சொல்லொணா இன்னலுறுவோம். இவை மூன்றுமே தற்போது தமிழரல்லாதவரிடத்தே இருக்கிறதென்றால், என்னவாகும்?

மேற்கூறியதை நான் சொன்னால் நீங்கள் நம்பாமலிருக்கலாம்! ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர், துறையூரில் நடந்த தன் சாதிக்கூட்டத்தில் சொல்வது என்ன தெரியுமா?! நிலமும் தொழிலும் கல்வியும் செல்வமும் இருந்தாலும் கூட நம் சாதி மக்களுக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கிறது; ஐந்து வருடத்துக்கு ஒரு முறை கிடைக்கும் ஆளும் அதிகாரம் மட்டும் போதுமா? அறுபது வருடங்கள் வரை அரசுப்பணியாளனாக இருந்து பெறும் அதிகாரத்தையும் பெற்றேயாக வேண்டும். எனவே அரசாங்க வேலைகளில் ஓட்டுநர் முதல் ஆட்சியர் வரை, என்ன வேலையாக இருந்தாலும், நம்மவர்கள் அதில் ஏறி நம் இனத்தைக் காக்க வேண்டும் என வெளிப்படையாக அறிவிக்கையில், நமக்குப் புரிகிறது, இங்கு தமிழ்நாட்டில் யார், யாருக்காக, எப்படி, எப்போதிலிருந்து ஆள்கிறார்கள் என்று! இதை இன்னும் விளக்கி ஒற்றைக் கவிதையில் சொல்லி விட்டு நாம் அடுத்த பத்திக்கு நகரலாம்.

“அவன் நீ வணங்கும் கடவுளுக்கு இடைத்தரகன்;
நீ உதிரம் வழிய உழும் நிலத்துக்குச் சொந்தக்காரன்;
வேறு வேலை செய்தாலும் உனக்கு எஜமானன்;
படிக்கப்போனால் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் ஆசிரியன்;
உன் பொழுதுபோக்கைத் தீர்மானிக்கும் ஊடகக்காரன்;
தொழில் தொடங்க முயன்றால், கடன் தராத வங்கிக்காரன்; பிரச்சனையென்றால் உன்னிடமே பணம் வாங்கிக் கொண்டு,
உறுதியாக உன்னைத் தோற்கடிக்கும் வழக்கறிஞன்;
அற்பக் காசுக்கு அதிசீக்கிரம் விலைபோகும் நீதியரசன்;
கைகட்டி, வாய்பொத்தி நீ அடிமையாகவே வாழ நினைத்தாலும்,
உன்னைக் கொல்லும் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதி;
அந்தச் சுரண்டும் சட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரி;
அவன் உன்னை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கிறான் – ஆம்
அவன் உன்னை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கிறான்!!!”

வீழ்த்தப்பட்டப் பெருமரமும், தமிழனப் படுகொலையும்:

தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட அரசியல், சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுப் படையெடுப்புகளின் அதியுச்சம் என்பது, ஈழத்தில் நம் மீது திணிக்கப்பட்ட இனப்படுகொலை தான். அகமும் புறமுமாகப் பிரித்த வாழ்வியலில், ஒப்பாரும் மிக்காருமின்றி உலகின் மூதினமாகச் செம்மையுடன் வாழ்ந்த நம்மினம், ஒரு பழுத்த பெருமரமெனில், அதற்கு நீரையுறிஞ்சி நிலைநிறுத்தும் ஆணிவேராக இருந்த, நிலமும் வளமும் தரும் பொருளாதார வலு போனவுடன், நம் அடிமரமே ஆட்டம் கண்டது. அந்த மரத்துக்குத் தேவையான உணவை அருந்தும் பக்க வேர்களான சமூகக் கட்டமைப்பும் குலைந்திட, உணவைத் தேடித்தரும் சல்லிவேர்கள் எனும் பண்பாட்டுத் தளமும் முடங்கிப் போக, நாம் வீழ்ந்து போனதில் வியப்பில்லை தானே? இந்த வீழ்ச்சிக்கான அடிப்படை, நாம் ஆளும் அதிகாரமிழந்தது தான் என்பதை இனியேனும் நாம் உணரத்தலைப்படுதல் அத்தியாவசியம்.

உச்சகட்டப் போர் ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழர்களைத் துணிந்து காக்க, பொருளுதவி செய்து மீட்கத் தமிழ்த்தேசிய முதலாளிகள் இல்லை; உள்ளதை உள்ளபடிச் சொல்லி நம்மை உசுப்பேற்ற கலை, இலக்கிய, ஊடக, அறிவுப் புலத்தில் ஒரு கதையாகவோ, கவிதையாகவோ, கட்டுரையாகவோ வடித்துத்தரவல்ல படைப்பாளிகள் இல்லை; காலம் தாண்டி நிற்கும் காவியங்களாக, நாம் சந்தித்தக் கொடுமைகளைத் திரையிலோ, திரைக்கு வெளியிலோ காட்சிப்படுத்திட முனைந்த கலைஞர்கள் இல்லை. நாம் சாவதை அமைதியாக வேடிக்கை பார்த்த அனைத்துலகின் மனச்சான்றை உலுக்குமாறு கேள்வி கேட்க, உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் போன்ற வலிமைமிகு தமிழ் ஆளுமைகள் இல்லை. இவ்வளவு ஏன்? தாய் போல நின்று தமிழர்களைக் காத்திருக்க வேண்டிய தமிழக அரசின் தலைமையே தமிழரில்லை; அதன் ஆட்சியும் தமிழர்க்கானது இல்லையெனும்போது, இனம் செத்தால் யாருக்கென்ன கவலை!?!?

உலக வல்லாதிக்கங்களும், ஆரியப் பார்ப்பனீய இந்தியமும் நம்மை ஒழிக்க நினைத்த பின்புலத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழ், தமிழர்,தமிழ்நாடு என்று சொல்லிச் சொல்லியே, அன்றிலிருந்து இன்று வரை ஆட்சியைப் பிடித்த தமிழரல்லாதவர்கள், நாம் எந்நாளும் தலையெடுக்கா வண்ணம், ஏவலாளிகளாக மட்டுமே நம்மை அடித்தட்டில் அழுத்தி மிதித்து வைத்திருந்ததால் தான், இந்த இனச்சாவை நம்மால் தடுத்து நிறுத்தவோ, தட்டிக் கேட்கவோ, குறைந்தபட்சம் தாரை தாரையாகக் கண்ணீர் விட்டு, அழவோ கூட முடியாமல் குரல்வளை நெரிக்கப்பட்டிருந்தோம். ஈழசோகம் நடந்து பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கூட, கொல்லப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தலைக் கூட நிம்மதியாக நடத்த முடியாத அளவுக்கு, வெட்கித் தலைகுனிய வேண்டிய கேவலமான நிலையில் தான், இன்றும் நாம் இருக்கிறோம்.

வரலாற்றின் பாதையை, வரும் மீட்சியினை நினைவூட்டும் விழுப்புண்கள்:

பல்வேறு சமர்களில் ஒற்றையாளாக இருந்து, வெற்றிகளை தேடித்தந்த பெரும் போர் வீரன், தன் நினைவை இழந்ததால் பிழைப்புக்குப் பிச்சை எடுப்பது போன்ற அவல நிலையில்தான் தமிழினம் இருக்கிறது. அதைவிடப் பேரவலம் என்பது திட்டமிட்டு இதைச் செய்தவர்களிடமே கையேந்தி நிற்கும் கொடூரம் தான். பிச்சை எடுக்க வைத்தவன், தன்னலத்தின் பொருட்டு நம்மீது அடையாளச் சிக்கலை எப்போதும் திணித்துக் கொண்டே இருக்கத்தான் செய்வான். ஆனால் தமிழினத்துக்குக் கண் இருந்தால், அதைப் பயன்படுத்தும் அறிவு இருந்தால் தன் மீது இருக்கும் விழுப்புண்களைப் பார்த்தேனும் தெரிந்து கொள்ளட்டும், தான் யாரென்று! அவை தன் மூளையில் கிளறும் நினைவுக் கங்குகளின் ஒளியில் கண்டு கொள்ளட்டும் தன் நோக்கம், எதுவென்று! இன்று பிச்சை எடுத்தாலும் தன் மரபணுக்களில் ஊறிக்கிடக்கும் போர்க்குணத்தை மீட்டெடுத்து, தனித்திறன்களை வளர்த்தெடுத்து, ஆட்சியதிகாரம் எனும் கூர்வாளைக் கைக்கொண்டு களமாடட்டும், அயராது.

நாம் யார் என்று நமக்கே காட்டுகிற, விழுந்தாலும் எழுந்து போராடும், விடாமுயற்சி கொண்டவர்கள் நாம் என்பதற்கான அடையாளம் தான், இனப்படுகொலை நினைவுகள் எனும் விழுப்புண்கள். நாம் அதை எந்த நாளும் மறுத்து விடவோ, மறந்து விடவோ, தவிர்த்து விடவோ, தலைகவிழ்ந்து கடந்து விடவோ மட்டும் கூடவே கூடாது. இழப்புகளைப் பெருமளவில் தந்த பேரூழிக்கால இனப்படுகொலை நினைவுகளை நெஞ்சில் ஏற்றி, நமக்குச் செய்யப்பட்ட அநீதிக்கு வஞ்சம் தீர்க்க, வெறிகூட்டி வெஞ்சினம் உரைத்து, இனம் வீழ்த்தப்பட்ட அதே நாளில், இனயெழுச்சி கொண்டு, இலக்குகளை நோக்கிப் பயணப்படுவோம்! பகைமுடித்து பழிதீர்ப்போம்!

நாம் தமிழர்!!!

திருமதி. விமலினி செந்தில்குமார்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles