ஏப்ரல் 2024
வெற்றிக்கொடி
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு செந்தமிழர் பாசறை – வளைகுடா ஒருங்கிணைத்த “வெற்றிக்கொடி” எனும் நாம் தமிழர் வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு கடந்த மார்ச் 30, 2024 சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை குவியம் (Zoom) செயலி வழி நடைபெற்றது.
தருமபுரி மக்களைவைத் தொகுதியில் “ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர், மருத்துவர். கா. அபிநயா பொன்னிவளவன். BHMS, MD அவர்கள், தேர்தல் களம் தொடர்பான பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
அடிப்படையில் தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் தமிழ்த்தேசியத்தின் மீது கொண்ட பற்று காரணமாக, மொழிப்பற்று கொண்ட தமிழர்கள் அனைவருக்கும் இயல்பான தேர்வாக இருக்கும் அரசியல் கட்சியான நாம் தமிழரில் இணைந்து பயணிக்கிறேன் என “நாம் தமிழருக்குள் வந்ததெப்படி?” எனக்கேட்டபோது அவர் கூறினார்.
“நாம் தமிழர் கொள்கைகளுள் மிகவும் முக்கியமானது என நீங்கள் நினைப்பது?” என்ற கேள்விக்கு அனைத்து உயிர்களுக்குமான அரசியல் என்ற ஒற்றைப் புள்ளியில் அனைத்தும் அடங்கிவிடும் என்பதால் மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலே மிகவும் முக்கியமான கொள்கை என்று அவர் பதிலளித்தார்.
“தேர்தல் களம் எப்படி இருக்கிறது? மக்கள் என்ன சொல்கிறார்கள்?” என வினவிய போது, “மிகவும் நம்பிக்கை தரும்படியாக இருக்கிறது; மக்கள் குறிப்பாக இளைய தலைமுறைப்பிள்ளைகள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்; உறுதியாக நாம் வெல்வோம்” என்றார்.
“பரப்புரை போகும்போது, நம்பிக்கை அளிக்கும் வண்ணம் நடந்த நிகழ்வுகள் ஏதேனும்?” என்ற கேள்விக்கு மக்கள் நாம் செல்லும்போதெல்லாம் அடுத்து நாம தான் என்று சொல்லி ஊக்கமளிப்பதையும், பலர் உறுதியாக இம்முறை நாம் தமிழருக்கு வாக்களிப்போம் என்று கூறியதையும் அப்போது குறிப்பிட்டார். தொகுதி சார்ந்த முக்கியமான சிக்கல்கள், அதற்கு நாம் முன்வைக்கும் தீர்வுகள் பற்றிக் கேட்டபோது, நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருதல், ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சிப் பகுதியில் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட பலவற்றைப் பட்டியலிட்டார்.
“இறுதியாக நீங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் மொழி, இன வரலாறு போன்றவை மறைக்கப்படுவதைத் தடுக்க, மாநில தன்னாட்சி உரிமையை மீட்டெடுக்க, தமிழ் மண்ணில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த நாம் தமிழர் வெல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.
அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்தை நிகழ்த்திட, நாடாளுமன்றத்தில் தமிழர்க்காக தமிழ்நாட்டுக்காக உரிமைக்குரல் எழுப்ப, தருமபுரியில் நாம் தமிழர் வேட்பாளராகக் களம் காணும் நம் சகோதரி, வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததொரு வெற்றியைப் பெற செந்தமிழர் பாசறை வளைகுடா சார்பாக உளமார்ந்த வாழ்த்துகள்!