ஏப்ரல் 2024
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர்!
இந்திய ஒன்றியத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என அங்கீகரிக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்தவண்ணம் இருக்கும் வாக்கு விழுக்காட்டை வைத்திருக்கும் கட்சி, நமது முப்பாட்டன் சிவனைப்போலவே பெண்களுக்குச் சரிபாதி இடங்களை அரசியலில் கொடுக்கும் ஒரே கட்சி, சாதிமத வன்முறைகளுக்கு எதிரான கட்சி, இந்த உலகில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் நலனுக்காகவும் பாடுபடும் கட்சி, இயற்கை வளச்சுரண்டல்களைத் தடுத்து, சூழலை மீட்டுருவாக்கம் செய்து காக்கப் போராடும் கட்சி, படித்தவர்கள், நேர்மையாளர்கள், பண்பாளர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் அதிகம் இருக்கும் கட்சி, பல்வேறு சூழ்ச்சிகளைத் தாண்டி தீரத்துடன் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி தான், “நாம் தமிழர்” கட்சி.

தேர்தலுக்கு முன்பே ஆளும் பாஜக, தேசியப் புலனாய்வு முகமை(NIA) சோதனையை, நாம் தமிழர் தம்பிகள் மீது ஏவிவிட்டது. நாம் தமிழர் சின்னமான “கரும்பு விவசாயி” சின்னத்தை வேறொரு புதிய கட்சிக்குக் கொடுத்தது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியும் நாம் தமிழர் கட்சிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நீதிமன்றத்தால் உரிய நியாயம் வழங்கப்படவில்லை.
கர்நாடகாவில் ஏதோ ஊர் பெயர் தெரியாத சிறிய கட்சிக்கு விவசாயி சின்னம் கொடுத்ததோடு மட்டுமின்றி, அக்கட்சி உள்ளூரிலும் சில கட்சிகளைக் கூட்டணிக்கு சேர்த்து நிற்கும்போது அவற்றுக்கும் விவசாயி சின்னம் வழங்குவதும், அவை போட்டியிட ஆள் இல்லாத தொகுதிகளில், அந்த விவசாயி சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்குக் கொடுப்பதும் என்ன விதமான நிலைப்பாடு?

காவல்துறை கொண்டு தம்பி, தங்கைகளைப் பரப்புரை செய்ய விடாமல் தடுப்பது, நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர்ந்து பொய்க் குற்றங்கள் சுமத்துவது, நாம் தமிழர் வளர்ச்சியைப் பற்றி முக்கிய ஊடகங்கள் பேசுவதைத் தடுப்பது, நாம் பேசாதவற்றைப் பேசியதாகக் காணொளிகளை வெட்டி ஒட்டி வெளியிடுவது, அவற்றுக்காக வழக்குப் பதிவு செய்து அலைகழிப்பது, பணம் தாராளமாகப் புழங்கும் இடங்களையெல்லாம் விட்டுவிட்டு நாம் தமிழர் வாகனங்களைச் சோதனையிடுவது, இவ்வாறு எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து, தமிழர் இனத்தின் உரிமைக்காக, அவர்தம் நலனுக்காக, எதிர்காலத் தலைமுறைக்காகத் தொடர்ந்து இலக்கை நோக்கிப் பயணித்து வெற்றி அடைவோம்.
“நாம் தமிழர்!”
செல்வன். கார்த்திக்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.