spot_img

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் – ஓர் ஒப்புநோக்கு அலசல்!

ஏப்ரல் 2024

2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் – ஓர் ஒப்புநோக்கு அலசல்!

பதினெட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது மக்களவைத் தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வரும் வெள்ளியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 6 கோடிக்கும் அதிகமான  குடிமக்கள் வாக்கு செலுத்தி தங்களுக்கான பிரதிநிதிகளை, ஒன்றிய நிர்வாகத்துக்கான சட்டங்களை இயற்றும் செயல்பாடுகளில் பங்கேற்க தமிழ்நாட்ய் மற்றும் புதுச்சேரி சார்பாக பாராளுமன்றத்துக்கு அனுப்பவுள்ளனர். பொதுவாக ஒரு குடிமகன் அல்லது குடிமகள், தனக்கான அரசியல் பிரதிநிதியை எப்படித் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பது எப்போதுமே பல்வேறு காரணங்களின் மிகவும் சுவையான கலவை. சாதி, மதம், வட்டாரம், கட்சி சார்பு, தலைவர்கள் மீதான ஈர்ப்பு எனப்பல காரணங்கள் இருந்தாலும், மக்களுக்குக் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகள் வெகுசன மக்களிடமும், ஊடக விவாதங்களிலும், அரசியல் நோக்கர்களின் ஆராய்ச்சிகளிலும் பேசுபொருளாக இருப்பவை. பல்வேறு வாக்குறுதிகள் பேச்சுவாக்கில் வேட்பாளர்களால் அள்ளி வழங்கப்பட்டாலும், ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை முழக்கமாக தேர்தல் அறிக்கைகளே இருக்கின்றன.

ஒன்றியத்தை பத்தாண்டுகளாக ஆண்டு வரும் பாஜக, “சங்கல்ப் பத்திரா” என்ற தனது தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 14 அன்று வெளியிட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட, தங்களது இந்துத்துவ தத்துவார்த்தப் பின்புலத்தின் முக்கிய வாக்குறுதிகளான இராமர் கோவில் திறப்பு, சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்றவை நிறைவேற்றப்பட்டுவிட்டதால், பாஜகவால் அடுத்து வழங்கப்படவிருக்கிற வாக்குறுதிகள் என்னவென என உற்றுநோக்கப்பட்ட நிலையில், பொது உரிமையியல் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருப்பது விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

ஒன்றிய அளவில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசு அண்மையில் வெளியிட்ட “நியாயப் பத்திரா” எனும் தேர்தல் அறிக்கை, பத்தாண்டுகளாக நாட்டுக்கு பாஜக விளைவித்த கேட்டினின்று மீள்வதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது எனச் சொல்கிறது. நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அதன்படி பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு 50% என்பது தளர்த்தப்பட்டு மறுவரையறை செய்யப்படும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு ஒரு இலட்சம் அளிக்கும் மகாலட்சுமி திட்டம், நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றை காங்கிரசு முன்னிலைப்படுத்துகிறது.

ஒன்றிய அளவில் கொள்கை வகுப்பை வழிநடத்தும் ஆளுங்கட்சி எதுவென்றும், ஆளும் அரசின் தலைவரான பிரதமர் யாரென்றும் முடிவு செய்யும் தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இருந்தாலும்,  தமிழக வாக்காளர்கள் அரை நுற்றாண்டுகளாக தேசியக் கட்சிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கான மக்களவை உறுப்பினர்களைத் தெரிந்தெடுத்து பெரும்பான்மையாக அனுப்பவில்லை என்பதே வரலாறு.  இரு பெரும் தேசியக் கட்சிகளாக இருக்கும் பாஜக மற்றும் காங்கிரசு ஆகியன, தமிழ்நிலத்தில் இணைக்கட்சி துணைக்கட்சியாக இருப்பதனால், திமுக மற்றும் அதிமுகவிலிருந்தே அதிகப்படியான மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கூட்டணி அமைத்தலின் பொருட்டே இவ்விரு கட்சிகளும் கணிசமான உறுப்பினர்களைக் கடந்த காலத்தில் பெற்றுள்ளன.

பெருமைமிகு தமிழ்மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் போன்ற தமிழர்களுக்கான சில வாக்குறுதிகளைப் பாஜக கொடுத்திருப்பது போல, காங்கிரஸ் குறிப்பாக ஏதும் சொல்லவில்லை என்றாலும், இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை மேம்பாட்டில் தமிழர்களின் சிக்கல்களுக்கான அரசியல் தீர்வுகள் எட்டப்படுவது குறித்து மேம்போக்காக பேசப்பட்டுள்ளது. தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரை, மாநிலக் கட்சிகளின் வாக்குறுதிகள் என்ன என்பதே வெகுசன அரசியல் களத்தில் அதிக கவனம் பெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி ஆகியன விரிவான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதிக்கான “என் கனவு – நமது கோவை” என்ற நூறு வாக்குறுதிகளின் தொகுப்பு பாஜகவால் வெளியிடப்பட்டுள்ளதே தவிர, பிற தொகுதிகளுக்கு ஏதும் வெளியிடப்படவில்லை.

பல ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில், கச்சத்தீவு மீட்பு, இலங்கைத் தமிழருக்குக் குடியுரிமை வழங்குதல், ஆளுநரின் அதிகாரங்களைக் குறைத்தல், நீட் தேர்வு இரத்து ஆகிய 2019 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் இருந்த வாக்குறுதிகள், 2024 தேர்தலுக்கும் சம்பிரதாயத்துக்காகச் சொல்லப்பட்டதா என்ற கேள்வி வருகிறது. இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும்பட்சத்தில்  அனைத்து மாநிலங்களிலும் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, கல்விக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு போன்றவை செயல்படுத்தப்படும் என்பதையெல்லாம் திமுக உறுதியளிப்பது உறுத்தலாக இருப்பதோடு, இவையெல்லாம் எவ்வகையில் சாத்தியம் ஆகும் என்ற வினாவும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 3000 அளிக்க ஒன்றிய அரசைக் கோருவது எந்த அளவுக்கு நிதிச்சுமையை அளிக்கும் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஈழத்தமிழர்கள் மற்றும் இசுலாமியர்களைக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்கக்கோரும் அதிமுகவின் தேர்தல் கால திடீர் கரிசனம் ஐயத்தை உண்டாக்குகிறது என்றால், பரப்புரைகளில் பாஜகவை அதிகம் விமர்சிக்காத அதிமுகவினரால் அந்த ஐயம் உறுதியாகிறது. அளிக்கப்பட்ட 133 வாக்குறுதிகளைச் செயலாக்கம் பெற வைக்கும் இடத்தில் இன்றைய அதிமுக உள்ளதா என்பதை மக்கள் சிந்திக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலுக்கும் தேர்தல் அறிக்கை என்று இல்லாமல், வரைவு ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் நாம் தமிழர், மற்ற கட்சிகளைப் போலவே மாநில உரிமைகள் பற்றி அதிகம் பேசியிருந்தாலும், சில முக்கியமான தனித்துவமிக்க விடயங்களை விரிவாகப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. அக்கட்சியினரின் சின்னம் தொடர்பான சிக்கல் பரப்புரை தொடங்கும் வரை நீடித்த நிலையில் தேர்தல் சீர்திருத்தங்களாக சின்னம் இல்லாத் தேர்தல், வாக்கு இயந்திரத்துக்கான தடை, ஊழல் செய்வோர்க்குத் தேர்தலில் தடை, பரப்புரை முறைச் சீர்திருத்தம், இரு தொகுதிகளில் போட்டியிடத் தடை, வாக்களிப்பதைக் கட்டாயமாக்குதல், அயலகம்வாழ் இந்தியர்களுக்கும், சிறைக்கைதிககுக்கும் வாக்குரிமை அளித்தல்,  இடைத்தேர்தல் முறை ஒழிப்பு போன்றன, சமகால அரசியலில் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த அவசியம் என்றே தோன்றுகிறது.

தேர்தல் நடைமுறைகளில் மட்டுமின்றி, மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப அரசியலமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் அக்கட்சி பட்டியலிடுகிறது. குடியரசுத் தலைவரையும் மக்களே தேர்ந்தெடுப்பது, மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அமைச்சராகத் தடை, கொள்கை வகுப்பில் ஒதுக்கப்படும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான தொகுதி மறுசீரமைப்பு, அனைத்து தேசிய இனங்களுக்குமான அதிகாரப்பகிர்வுறுதி, எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கிய நிகராளுமையுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி முறை போன்றவற்றைக் கேட்பதன் மூலம், அமைப்பு மாற்றத்தைக் கோருகிறது நாம் தமிழர் கட்சி. மேலும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்ட நீதித்துறை சார்ந்த சீர்திருத்தங்கள் குறித்தும் பேசிய ஒரே கட்சியாக நாம் தமிழர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலின சமத்துவம், இயற்கை வளப்பாதுகாப்போடு கூடிய நீடித்த வளர்ச்சித் திட்டங்கள், சாதிமதம் சார்ந்த வெறுப்பரசியலுக்கு எதிர்ப்பு, ஒன்றிய நிர்வாக அமைப்புகளைக் கையகப்படுத்தி எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆளும் அரசின் ஆணவப்போக்கு, சட்டங்களின் மூலமாகவே சனநாயகத்தை விழுங்கிச் செரிக்கும் அநீதி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தவறான பொருளாதாரத் திட்டங்கள் ஆகியவற்றைப் பேசுவதோடு, கல்வி,மருத்துவம், போக்குவரத்து, மின் உற்பத்தி, உழவு, நீர்வளம், மீனவர் நலன் குறித்து பல திட்டங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் இவ்வரைவில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு நாம் தமிழர் கட்சிக்கேயுரிய ஈழத்தமிழர் பாதுகாப்பு குறித்த நிலைப்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளில் இருந்து பெரும்பான்மையாகச் சென்ற மக்களவை உறுப்பினர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல்களுக்காகக் குரல் கொடுத்தனரா? பல்வேறு மாநில உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுத்தனரா? என்ற கேள்விகளுக்கு மக்கள் மன்றத்தில் வாக்குகள் மூலம் இத்தேர்தலில் விடை கிடைக்கக்கூடும். ஒவ்வொரு கட்சிக்கும் அடுத்துவரக்கூடிய ஐந்தாண்டுகளுக்கான செயல்பாடுகளின் திசைகாட்டியாகத் தேர்தல் அறிக்கைகள் விளங்குகின்றன. அவற்றை வரிகளுக்கிடையே வாசித்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக உண்மையாக உழைக்க உறுதியளிப்போருக்குத் தவறாமல் வாக்குச் செலுத்தி வெல்ல வைப்பதே, ஒரு நல்ல குடிமகன் அல்லது குடிமகளின் முதன்மையான சனநாயகக் கடமை.

திருமதி. விமலினி செந்தில்குமார்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை – வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles