நவம்பர் 2023
அமீரகத்தில் தமிழ்நாடு நாள் விழா!
அழகான ஐக்கிய அமீரக நாட்டினிலே!
அடைமழை விடாத ஐப்பசி திங்களிலே!
தமிழ்நாடு நாள் கொண்டாட்ட அரங்கினிலே!
சீராகக் கூடியிருக்கும் செந்தமிழர் பாசறை உறவுகளே!
இரைதேடிய பறவைகளாய் யாவரும் இங்கு வந்தோம்!
கரைசேர்ந்த படகுகளாய் நாம் தமிழராய் ஒன்றிணைந்தோம்!
முன்னவர் மூச்சை இழந்து தமிழ்நாடெனும் பேரும் தந்திடவே!
பின்னவர் நாமும் மறந்து போகாமல் நினைவில் கொண்டோமே!
அச்மான் மாநகரில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்!
அமீரகப் பாசறை உறவுகளின் உள்ளத்திலோ தேரோட்டம்!
தமிழ்த்தாய் வாழ்த்தின் தொடக்கமும் குமரிகளின் நடனமும்
குழந்தைகளின் பாட்டும் பொய்க்கால் குதிரை ஆட்டமும்
குடும்பமாய் ஆடிய ஒயிலாட்டமும் மங்கையின் மயிலாட்டமும்
மனதை அள்ளியதே! மகிழ்ச்சியை முகமும் சொல்லியதே!
வேட்டாகச் சிதறிய வெற்றிவீரச் சிலம்பத்தின் ஆட்டமும்
சல்லிக்கட்டு காளையின் திமிரும் துடிப்பும் துள்ளலும்
வேங்கையின் வேகமான பாய்ச்சலும் குதூகலத்தைத் தந்ததே!
பாங்குடன்தான் விழாவும் நடந்து பெருநிறைவு வந்ததே!
வளைகுடாவில் நடக்கும் தமிழ்நாடு நாள் பெருவிழா!
தமிழருக்கு முக்கியமான கலை பண்பாட்டுத் திருவிழா!
தமிழன்னை வரவேண்டும் தமிழர் நிலத்தில் உலா!
தமிழராய் முன்னெடுத்தோம் தமிழ்நாடு நாள் விழா!
வெல்க தமிழ்!
வாழிய தமிழ்த்தாய்!
வளர்க தமிழ்நாடு!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.