மார்ச் 2023
அவள் அங்கயற்கண்ணி!
உயரஉயர எழுந்த அலைகளினூடே
உயரிய கொள்கையை ஏந்தி
நீந்தியவளின் கதை!
உயிராய் நேசித்த இனத்திற்காகத்
தன் உயிரையும் துச்சமெனத்
துறந்தவளின் கதை!
கடற்கரையி லமர்ந்து காதல்புரியும்
பருவ வயதில் – சாவை
நேசித்தவளின் வீரக்கதை!!
நடுக்கடலில் நிலைகொண்ட எதிரியின்
க்ஷஇராட்சதக் கப்பலை நீந்திச் சென்று
தாக்குவது இலக்கு!!
அறுபதுகிலோ எடையுள் ளவளுக்கு
அவள் சுமந்து சென்ற
ஐம்பதுகிலோவைக் காட்டிலும்
தன் இனத்தை நினைத்து
மனத்தின் பாரமே அதிகமாயிருந்தது!
அலையாடும் கடலில்
அலைக்கும்மேல் அலைபாயும் மனதும்
அன்று நிலையாக இருந்தது!
அசாத்தியத்தைச் சாத்தியப்படுத்த
தண்ணீரிலும் அவள் எண்ணம்
துளியும் மாறாமல்
இலக்கு ஒன்றே குறிக்கோளாய்த்
துவக்கிலிருந்து வெளிப்பட்ட தோட்டாவாய்
இரையை நோக்கிப் பாய்ந்தது
அப்பெண்புலி!!
உப்புத் தண்ணீரில்
அவள் நீந்திய தூரம்
பதினேழு மைல்கள்
கிட்டத்தட்ட எட்டுமணி நேரம்!
அத்துனை நேரமும்
அவள் கைகால்கள் ஓயவில்லை,
எத்துனை பலம்அப் பூங்கைகளில்..!
சாவை நோக்கி மெல்ல
விடுதலையா(க்)கிக் கொண்டிருந்தாள்!!
கரப்பான்பூச்சிக்கும் பல்லிக்கும் பயந்தவள்
சுறாக்களையும் எளிதாகக் கடந்துசென்றாள்!!
கனவிலும் நினைக்கவில்லை எதிரிகள்
இப்படியும் தாக்க முடியுமென!
இதோ இலக்கு கண்ணெதிரே
அப்படி ஒரு ஆனந்தம்
அவள் நெஞ்சில்,
தன் சாவை நோக்கி!!
குடும்பத்தை நினைத்தாள்
தோழிகளை நினைத்தாள்
முதன்மையாகத் தலைவனை நினைத்தாள்
கண்களில் சுதந்திரத் தமிழ்
ஈழம் சுடர் விட
அடுத்த நொடி வெடித்துச்
சிதறியது கப்பல்!
கடலோடு கடலாக கலந்தவள்
இன்னமும் துடித்துக்கொண்டிருக்கிறாள்
விடுதலை வேண்டி
அலையோடு அலையாக!!
திரு.காந்திமோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.