ஆகத்து 2025
இயற்கையெனும் பேரழகு
மலைகளின் ஊடே நதியாடிடும் அழகோ தனியழகு!
மரங்களின் நிழலிலே மனமும் கொள்ளை போனதே!
வான்மேகம் மலையழகைக் கண்டு மயங்குதே!
நீலவானம் தன்னிலை மறந்து நிற்குதே!
தென்றலின் தூதிற்குத் தேக்குமரம் தலைசாய்க்குதே!
தேடிவந்த குளிர் காற்றிற்குத் தேகமும் சிலிர்க்குதே!
பாய்ந்தோடும் ஆற்றினில் பச்சைப் பட்டாடைச் சூழ்ந்திருக்க!
சாய்ந்தோடும் நதியழகில் புல்லினங்கள் தாகந்தீரக் காத்திருக்க!
புதிதாய் உதித்த கதிரவனும் காட்டினைச் சூழ்ந்ததே!
செடிகொடி மரங்களும் புத்துயிர் பெற்று நின்றதே!
கதிரொளி சூழ்ந்த வேளையோ! தெளிந்த நல் நீரோடையோ!
முகம் பார்க்கும் கண்ணாடியோ! தாகம் தீர்த்த தாரகையோ!
தாய்மை கொண்ட பேரழகியோ! வெள்ளமும் வெல்லமாய்த் தித்திக்குதே!
இயற்கையின் பேரழகில் மதி மயங்கினேன்! எழுதிடச் சற்றுத் தயங்கினேன்!
உளமாற கவிதை ஒன்றைப் படைத்திடத் துடித்தேன்!
அதனையே பாடலாக வெகுநேரம் வடித்தேன்!
இயற்கை எனும் பேரழகை எண்ணிப் பார்க்கிறேன்!
அப்பப்பா! என்ன விந்தையென நானும் வியக்கிறேன்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.