சூலை 2022
ஈழத்து இளவரசிகள்
ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை
என்று களத்தில் சாதித்து காட்டிய
எம் வேலுநாச்சியின் வாரிசுகளே…
மணமுடித்து, கழுத்தில் மலர்மாலை
சூட வேண்டிய வயதில் துவக்கின்
தோட்டாக்களை கழுத்தில் மாலையாய்
அணிந்த எம் மான மறத்திகளே…
கணவனுடன் சேர்ந்து இல்லறம் எனும்
நல்லறம் காக்க வேண்டிய வயதில்
நாட்டின் விடுதலைக்காக தன் இன்னுயிரை
ஈகம் செய்த ஈழத்து குயிலிகளே!
மரணம் எதிர்வரிவனும் மரணத்தை கண்டு
சிறிதும் அச்சம் கொள்ளாமல்
மரணத்தைத் தழுவிய
மூவேந்தர்களின் வாரிசுகளே….
புலியை முறத்தால் அடித்து விரட்டினாள்
புறநானூற்றுத் தமிழச்சி என்று
பாடத்தில் படித்த எங்களுக்கு
புறநானூற்றுப் புலிகளாகவே வாழ்ந்து
எம் குலபெண் சிங்கங்களே…
காடும் மலையும், மேடும் பள்ளமும்
குண்டும் குழியும், வெயிலும் மழையும்
பணியும் குளிரும், பாராமல்
அன்னைத் தமிழ் மண்ணை அயலான்
ஆக்கிரமிப்பு செய்யக்கூடாதென்று
களத்தில் வெஞ்சமராடிய பெண்
வேங்கைகளே!
கண் துஞ்சாமல்
களமாடிய எம்கரும்புலி படையின்
வீரத் தங்கங்களே…
தமிழர் வரலாறு உள்ளவரை
எம் ஈழத்து இளவரசிகள்
வரலாறும் பேசப்படும்!
உங்களின்
ஈகம் எதற்கும் ஈடாகாது.
மங்கையராய் பிறந்திடவே
மாதவம் செய்ய வேண்டுமாம்!!
ஈழத்தில் பெண்ணாய் பிறக்க என்ன
தவம் வேண்டுமோ!!
திரு. கு.பாண்டியன்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.