ஆகத்து 2022
உயிர் மொழி தமிழ்!
அகரத்தின் துவக்கமே அன்னையே தமிழே !
மொழியே தமிழே மொழிகளின் முதற்பிறப்பே!
கடலாடும் குமரிக்கண்டம் உந்தன் பிறப்பிடமோ!
கவிபாடும் மாமதுரை தான் வளர்ப்பிடமோ!
உயிருக்கும் மெய்புக்கும் வடிவமென இருப்பவளே!
இசையாய் இவ்வுலகில் நித்தமும் வாழ்பவளே!
நாலடியாரில் நாற்புறமும் புகழ் படைத்தாய்!
வள்ளுவரின் ஈரடியில் வாழ்வியலை எடுத்துரைத்தாய்!
ஓரடியில் ஔவையின் பாட்டினிலே கோலோச்சினாய்!
இன்று கீழடியிலும் புகழ் நாட்டுகின்றாய்!
கம்பரின் கவியினில் கற்பனை ஊற்றாகி!
செந்தமிழர் நாட்டுப் புலவர்களின் பாட்டாகி!
அள்ளிப்பருகிடத் திகட்டாத அன்னைத் தமிழே!
அரசவைப் புலவருக்கு பொற்கிழி நீயே!
தரணி போற்றும் தன்னிகரற்றத் தாயே!
அழகே தமிழே உயிரே வாழியவே!
கண்டங்கள் கடந்தும் அரசாட்சி செய்பவளே!
வாழியவே தமிழே தாய்மொழியே வாழியவே!
திரு. வேல் கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.