செப்டம்பர் 2025
எங்கள் அண்ணன் திலீபன்!
புரட்சியை உண்டு கொண்டும்
விடுதலையை அருந்திக் கொண்டும்
தன் இனத்திற்காக பதிமூன்று நாள்கள்
சாவையும் வாழ்ந்தான் திலீபன்!
அதிதீவிர புயலுக்கு நடுவே
பூக்கும் பூவைப் போல
கடும் போர்ச் சூழலில்
மிக அமைதியாக ஒரு
மாபெரும் யுத்தத்தைத்
தொடங்கினான் திலீபன்!
கையில் வெடிகுண்டு துவக்குகளோடும்
மனதில் கொடூர ஆதிக்கப் பேராசைகளோடும்
நீங்கள் யுத்தம் கோரினீர்கள்!
அகிம்சை என்னும் பேராயுதம் கொண்டு
அமைதி வேண்டிய ஆசையில்
புன்னகையால் பதிலளித்தான் திலீபன்!
காந்தி தேசத்தின் துணையோடு
புத்த சரணம் பாடிக்கொண்டே
யுத்த வன்முறையில்
உச்சம் தொட்டீர்கள்!
புத்தனோடு காந்திக்கும் சேர்த்தே
அகிம்சையை கற்பித்தான் திலீபன்!
அடிமை இருளின் விடுதலைப்
பேரொளி திலீபன்!
சுதந்திர சுவாசத்தின்
உயிர்வளி திலீபன்!
ஈகையின் எல்லை திலீபன்!
அடிமைக் கைவிலங்கு ஒடித்து
சுதந்திரவானில் பறக்க நினைக்கும்
கூண்டுப் பறவைகளுக்கு வழிகாட்டி
எங்கள் அண்ணன் திலீபன்!
பல நூற்றாண்டுகள்
பழைமையான மரத்தில் பூத்த
மகரந்தத்தில் தீத்தேன் கொண்டு
விடுதலை வாசம் வீசும்
எழுச்சியின் புரட்சிப் பூ
எங்கள் அண்ணன் திலீபன்.
சாவைக் கழுத்தில் சுமந்து கொண்டு
துவக்கேந்திப் போரிடும் வீரத்தோடு
நீருமருந்தாப் போராட்டம் செய்யும்
தியாகமும் கொண்ட – எம்
இனத்தின் மாவீரன்
இனமான பேரன்பன்…
இருளண்டிய தமிழ்ச் சமூகத்திற்குத்
தானே ஈகைச் சுடராகி
எம்மின விடுதலைக்கு
வெளிச்சம் காட்டிய போராளன்
எங்கள் அண்ணன் திலீபன்!
தமிழீழ தேசத்தைக்
கனவாய்க் கொண்டு
அதற்காய் அவன்
நிரந்தரமாய்த் தூங்கிப்போனான்
தாம் கனவில் காண்பதை
மக்கள் நிகழ்வில் வாழ!
திலீபன் இன்னமும்
பசியோடு தான் இருக்கிறான்!
உலகத்தாரே தயவு செய்து
அவன் பசியை ஆற்றுங்கள்…
உணவிட்டு அல்ல…
தமிழீழ விடுதலை என்னும்
உணர்விற்கு மதிப்பளித்து!
செப்டம்பர் 26 – ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் நினைவு நாள் (1987)
திரு. ப. காந்திமோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.