சூன் 2025
எந்தமிழே! அன்னை செந்தமிழே…
எந்தமிழே! அன்னை செந்தமிழே…உந்தன் இளமையை மலைத்து விட்டேன்!
எந்த நிறம் அது வசந்த நிறம்… உந்தன் நிறத்தையும் அறிந்து விட்டேன்!
உந்தன் காப்பியத்தில் அது உறைந்ததென்று உந்தன் நூலடி தேடி வந்தேன்!
தாய்த்தமிழே கலங்கரை விளக்கம் என்று கட்டியம் கூறிவிட்டேன்!
எந்தன் எழுத்துமுறை உந்தன் மாப்புகழை பறைசாற்றிட அமைத்து நின்றேன்!
(எந்தமிழே….)
ஆழ்கடலில் எழும் அலையெனவே உந்தன் கரைகளில் இதழ் பதிப்பேன்!
வான்மழை போல் விழும் வார்த்தைவரம் தரவேண்டியே தவமிருப்பேன்!
பாட்டிருந்தால்… அருங் கூத்திருந்தால்… ஒரு தருணமும் வருணமடி!
பண்களெல்லாம் உனை ஆர்ப்பதுபோல் ஒரு கிறக்கமுந் தோன்றுதடி!
இது யோகமா?… யாகமா? சொல்லடி உள்ளபடி!
நான் மீள்வதும்…நிலையின்றி மாள்வதும் உன் வாழ்க்கையில் உள்ளதடி!
(எந்தமிழே!…)
கோமொழியே திருக்குறள் கிடைத்தால் அதைக் கும்பிட்டுப் பண்படிப்பேன்!
காமலரே… உன்னை வாய்த்துக் கொண்டு உந்தன் பூந்தளிர் தேன்குடிப்பேன்!
தென்னவளே உன்னை ஓங்கவைக்க உந்தன் நிரல்களை முடுக்கி வைப்பேன்!
பொருதவரும் தீங்காட்சியெல்லாம் துஞ்சும்படிவெட்டி அழித்தொழிப்பேன்!
என் பாமொழி மாலையை உன் பாதத்தில் சூடிவைப்பேன்!
உன் நூலதில் எழுதிய பாக்களை மதுக்குவியல்கள் என்றுரைப்பேன்!
( எந்தமிழே…)
“எந்தமிழே!” பாடல்! ( ‘காதலன்’ திரைப்படத்தில் வரும் ‘என்னவளே.. அடி என்னவளே’ பாடலின் மெட்டில்!)
திரு. பட்டுக்கோட்டை சத்யன் (எ) சங்கத்தமிழ் வேள்,
செந்தமிழர் பாசறை – குவைத்.