கதிரவனும் வான்மதியும்
அந்தியும் சாயும் அழகானக்
கார்காலம் இதுவோ!
கடல்தாயின் மாடியில் கதிரவனும்
உறங்கும் வேளையோ!
விண்மீன்கள் கண்சிமிட்டி
மதியழகை வரவேற்குதே!
வானிலே நீலவானிலே
வெண்ணிலாவும் நீந்திச் செல்லுதே!
உலாப்போகும் சந்திரமதியை
மேகங்களும் மெல்லத் தீண்ட!
காத்திருந்த கார்மேகமும் கவிநிலாவைக்
கணப்பொழுதில் மறைத்ததோ!
வானுலோகத்து வெண்மதியும்
கார்முகிலின் கைவசமோ!
வான்மதியின் வடிவழகை
வஞ்சித்தது கார்வண்ணமே!
நிலவொளியைக் காணாது
வையத்துள் காரிருள் சூழ்ந்திட!
நில்லாது இயங்கிய
வெண்மதியை தடுத்தவர் யாரோ!
வான்மதியைப் பாராது
தரணியில் பலர் தவித்திருக்க!
வழிமீது விழிவைத்து
வையத்தார் பூத்திருக்க!
எங்கிருந்தோ வந்தான்
காற்றெனும் பெயர் கொண்டான்!
இடைநின்ற வெண்மதியின்
கட்டவிழ்த்துக் கடந்து சென்றான்!
அகிலத்தில் மதியழகும்
வானிலிருந்து ஒளிரக் கண்டான்!
வையத்து மாந்தரும் வாயர
வாழ்த்தக் கண்டான்!
விண்மீன் கூட்டத்தினூடே மதியழகி
ஊர்வலம் போகக்கண்டேன்!
கடல்தாயின் மடியில்
தங்கத் தாரகையும் தவழக்கண்டேன்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.