அக்டோபர் 2023
கவியரசருக்கு கவிப்பா !
கன்னித்தமிழ் வேந்தே!
கற்பனையின் நாயகரே!
காரைக்குடி கண்ணதாசரே!
காலம்வென்ற கவியரசரே!
உவமைகள் ஊறும்
உமதுள்ளம் நீருற்று!
காரைக்குடியில் பிறந்த
பழந்தமிழ் நாற்று!
அருந்தமிழ்ச் சுடரே
அரசவைப் புலவரே!
கல்லாதவற்குமது பாக்களே
கல்வி பெருங்கவிஞரே!
கரங்களில் தவழும்
கூர்முனைத் தூவலுமே!
விரல்வழி தந்திடுமே
சொற்சாரல் மழையே!
முத்துப் புலவரும்
விழி மலர்ந்தால்
துளித்துளியாய் தூயதமிழ்ப்
பாக்களும் பிறந்திடுமே!
சித்தமது மறந்து
சினத்தோடு எதிர்ப்பவருக்கும்
வணங்காமுடி கண்டு
அக மகிழ்ந்திடுமே!
தாய்க்கொரு தாலாட்டுத்
தமிழ்ப் பாட்டு!
தந்தைக்கொரு குடும்பக்
கடமைப் பாட்டு!
அன்புத் தங்கைக்கும்
பாசமலர்ப் பாட்டு!
அருமைத் தாரத்திற்கோ
அழகான உறவுப்பாட்டு!
இயற்கைக்கு இன்பத்
தமிழ்ப் பாட்டு!
இடிமுழக்கமாய் உறுமும்
இலக்கியப் பாட்டு!
பாமரரைப் பற்றியிழுக்கும்
பைந்தமிழ்ப் பாட்டு!
பாரினில் கவிக்கோன்
கலைத்தமிழ் ஊற்று!
கவியரசருக்கு மனதால்
நினைவு தீபம் ஏற்றுவோம்!
கலைத்தாய் மைந்தன்
புகழைப் போற்றுவோம்!
வாழியவே! கவிக்கோன் புகழ் வாழியவே!!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.