பிப்ரவரி 2023
கார்முகில்
வான்மீது மையல் கொண்ட மேகமே!
உமக்கு மண்மீது இத்தனை மோகமா!
கருநிற மேகமாய் காற்றினில் தென்றலாய்!
வெயில் கீறிய விளைநிலங்களின் மருந்தாய்!
காரிருளாய்ச் சூழ்வாய்
காண்பவரும் கலங்கிடுவார்!
வான்மழையாய்த் தரணியில்
வந்திறங்கிடவே மகிழ்ந்திடுவார்!
துளியாய் மழைத்துளியாய்
விழுந்தாய் மண்ணிலே!
கழனிவாழ் உழவரும் கவலைகள்
மறப்பார் உன்னாலே!
விளையும் பயிருக்கு உணவாய் உயிரானாய்!
உழுதிடும் உழவருக்கு
உற்றத் தோழனானாய்!
கரைபுரண்டு ஓடும் வளமான ஆறானாய்!
விடியலுக்கு ஏங்கிடும்
உழவருக்கு வரமானாய்!
உலகம் உய்ய
மழையினைப் பாலாய்ச் சுரந்தாய்!
உயர்வு தாழ்வின்றி நாற்புறமும் நகர்ந்தாய்!
உந்தன் நிறமோ கருப்பு! அதுதான் அழகின் சிறப்பு!
உன்னை பாடாத புலவரும்
மண்ணில் உண்டெனில் வியப்பு!
கதிரவனின் கண்களையும்
கட்டிப்போடும் காலன் நீ!
கண்சிமிட்டும் வேளையில்
கனமழையாகும் மாயோன் நீ!
மெல்லமாய்த் தூறி மெய்மறக்கச்
செய்வதில் சாரலானவன்!
ஏற்றத் தாழ்வின்றி வீதிகளில்
பயணிப்பதில் சமத்துவமானவன்!
மலைமீது தஞ்சம் கொள்ளத் தவழ்ந்தாயே!
மரங்களும் தீண்டியதால் வான்மாரி
பொழிந்தாயே! திசைமாறிப் போனாலும்
திக்கெட்டும் செழிப்பாகிடும்!
கூட்டமாய் நகர்ந்தாலும்
வையமும் குளிராகிடும்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.