சூன் 2025
குமுறும் குமரி மலை
கனிமவளம் கொள்ளை போகுது குமரியிலே!
கண்டபடி வாகனம் செல்லுது சாலையிலே!
மலைநொறுக்கிப் பணம் பார்க்கும் பேராசைக் கூட்டமே!
பாவப்பட்ட உயிர்கள் நாளும் பலியாவது நியாயமா!
குமரிச்சாலை எங்கும் குருதியின் ஈரமின்னும் காயவில்லை!
மலையாளத் தேயத்திற்கு பாரவூர்திகள் செல்வதும் ஓயவில்லை!
முக்கடல் நிலமது மூச்சை இழந்து தவிக்குதே!
மூலிகைத் தேகமும் மூளியானது என்ன கோலமோ?
மலையாள நாட்டை வளமாக்கக் குமரித்தாயை சிதைப்பதேனோ?
குமரித் தந்தை மீட்டெடுத்த தமிழ் மண்ணை அழிப்பதேனோ?
வெடித்து சிதறும் மலையாவும் வலியுடன் கதறுதே!
எதிர்காலத் தலைமுறையும் நச்சுக்காற்றுடன் நகருதே!
வெடித்த மலைகளில் சிதறுண்டது பாறைக் கற்கள்!
பிளந்த கற்களில் இருந்து வானில் பரவுது தூசுமேகங்கள்!
கணக்கின்றி கண்முன்னே பாரவண்டி ஊர்ந்து செல்லுதே!
கடக்கின்ற மக்களை இடித்துக் காவுவாங்கிக் கொல்லுதே!
பால்சுரந்த மாமலையும் கண்ணீர் வடிக்குதே!
நீர்சுரந்த நீலமலையும் நீதி கேட்குதே!
கயவர் கூட்டம் கல்லா கட்டிக் காசு பார்க்குதே!
ஓட்டுப் போட்ட மக்களின் எண்ணம் நாளும் தோற்குதே!
திரு. பா.வேல்கண்ணன்.
செந்தமிழர் பாசறை – அமீரகம்.