மே 2023
சிறு புல்லா நீ ? சீறும் புலி!!!
தத்துவம் தெரிந்து கொள்!
தருக்கங்கள் பேசமாட்டாய்!
வித்தகம் அறிந்து கொள்!
விளக்கங்கள் கேட்கமாட்டாய்!
புத்தகம் மெத்த வாசி!
புத்தியில் சத்து சேரும்!
சத்தியம் புரிந்து போவாய்!
சாதிக்கும் இளைஞன் ஆவாய்!
மறதியைப் பெருக்கும் நிதம்
மயக்கத்தில் ஆழ்த்தும் உடல்
உறுதியை உருக்குலைக்கும்
உள்ளத்தை குழப்பும் உன்னை
வருத்தும் வாட்டும் இந்த
வலைத்தளம் தேவைதானா ? பார்
இறுதியில் இணையப்பழம்
இனிக்கவே இல்லை என்பாய்!
வழங்கப்பட்ட ஆயுள் எதற்கு?
வரலாறு படைக்கத் தானே!
முழங்கிடும் வெற்றி முரசாய்
முன்னேறி வா! என் தோழா!
பழங்களைப் போல நீயும்
பயன்படு இனி சமூகத்திற்கு!
இழந்ததை மீட்டெடுக்க
எழுந்து வா இளைய தோழா!
வயலோடு வாழ்வும் அழிந்து
வளச்சுரண்டல் அதிகமாச்சு!
கெயில் எண்ணைய் மீத்தேனென்ற
கேடுகள் நாட்டை மீளாத்
துயிலுக்குள் தள்ளியதே!
தொல்லைகட்கு எல்லை இல்லை
புயலென முன்னே வாடா!
புரட்சியை நடத்திக் காட்டு!
கருதுகோள்களில் வாதம் வரலாம்
கருத்து மோதல்கள் வேண்டாம்
திருத்தங்கள் செய்ய நல்ல
தேதியா பார்க்க வேண்டும்?
பெருவளத்தைக் கொண்ட நாடு
பெருமைகள் இழந்து இன்று
தெருவுக்கு வந்ததென்ன?
தீமைகள் சூழ்ந்ததென்ன?
நல்லோர்கள் வாழ்ந்த நாடு
நரிகளின் குகைகளாச்சு!
சில்லென்ற சாரல் காடு
சிதை எரிக்கும் சுடுகாடாச்சு!
சொல்லித்தான் பார்த்து விட்டோம்
சொற்படி கேட்பாரில்லை!
புல்லிடம் என்ன பேச்சு?
பிடுங்கித்தான் எறிய வேண்டும்!
திரு. அ.அப்துல் வதூத்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.