செப்டம்பர் 2025
செந்நீர் தேயத்தின் செம்மணி!
ஈழத்தின் விடுதலை
எங்கள் உரிமை…!
தனித்தமிழீழம் என்பது
எங்கள் பெருமை!
உணர்வுகளின் எழுச்சியுடன்
பிறந்ததோர் கூட்டமடா!
உயிர்கள்பல துறந்ததினால்
வளர்ந்த பெரும் தேசமடா!
உரிமைகேட்டு நின்றபோது
உடமைகளை இழந்தோமே..!
உறவுகளைக் காணாமல்
எரிதழலில் வெந்தோமே..
உற்றாரைத் தேடித்தேடி
நாள்தோறும் அலைந்தோமே!
எம்மவரைக் காணாமல்
கண்ணீர்க்கடல் சொரிந்தோமே!
முள்வேலிக்குள் மடிந்துபோன
தமிழ்க்குலவிளக்குகள் எத்தனையோ!
சிங்களரின் வழிபாடோ
அன்பின்வழி புத்தனையா!
சிங்களக் காடையருக்கு
இரையான பெண்மணிகள்!
செம்மணி புதைகுழிக்குள்
எம்மினத்தின் கண்மணிகள்!
பச்சிளங் குழந்தைகளின்
சடலங்களோ பூமிக்குள்ளே!
எஞ்சாமி எங்கு சென்றாய்
காணலையே நாட்டுக்குள்ளே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.