spot_img

தமிழன் இதயம்!

ஆகத்து 2023

தமிழன் இதயம்

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்
அமிர்தம் திருக்குறள் அடைந்தவனாம்
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

‘பத்தினி சாபம் பலித்துவிடும்’
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதை
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி, மணி மேகலையும்
பத்துப் பாட்டெனும் சேகரமும்
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகலும்
ஓவாப் பெருங்கதை, ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னதெல்லாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும் புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளி பண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை சரித்திரம் அசைபோடும்
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள தண்ணுமைப் பேதமெலாம்
வாழும் கருவிகள் வகை பலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்
எல்லாப் புகழும் இவைநல்கும்
என்றே தமிழன் புவி சொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
‘தருவது மேல்’ எனப் பேசிடுவான்.

சாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் பண்ணினவன்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன் பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்
சாந்தம் தவறா துடனிருந்தான்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்

ஆகத்து – 24 (1972) – பாவலர் வெ.இராமலிங்கனார் நினைவு நாள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles