சனவரி 2023
தமிழரின் தைத்திருநாள்
தரணி போற்றும் தமிழ்க்குடியின் திருநாளாம்!
தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு பெருநாளாம்!
ஏர்பிடித்த உழவருக்கு
ஏற்றத்தைத் தரும் நாளாம்!
எண்ணியதைத் தந்தருளும்
தை மகளும் வரும் நாளாம்!
கழனிவாழ் உழவரும்
பொழுதும் புலருமுன்னே!
வெற்றுக்காலுடன் வயற்காட்டைத் தானுழுது!
சந்தனச் சேற்றில் நாள்தோறும் குளித்தெழுந்து!
வியர்வையை உரமாக்கி
விதை நெல்லைப் பயிராக்கி!
விளைந்த நெல்மணியை வீடுவந்து சேர்த்திடுவார்!
உரலில் இட்ட நெல்லை
ஊர்க்கதைப் பேசிக்கொண்டு!
பதரும் பச்சரிசியென
மங்கையரும் பகுத்திடுவார்!
மார்கழியும் செல்ல தைமகளை
நங்கையரும் நன்றே வரவேற்றிடுவார்!
வாசலிலே மாக்கோலமாம்”
தெருவெங்கும் மாவிலைத் தோரணமாம்!
வான் மேகமும் மறையும்”
கதிரவனின் வருகையும் வரவாகும்!
புத்தாடைத் தானுடுத்தி
புதுப்பானை எடுத்து வைத்து!
செங்கரும்பும் நட்டு வைத்து!
சேர்ந்தே கொத்து மஞ்சள் கட்டி வைத்து!
மண்பானையில் அரிசியிட அழகாய் பொங்கிவர!
மங்கையரும் குலவையிட
மனமும் இன்பமாய் பொங்கலோ
பொங்கலெனெ முழங்கிடுமே!
அமுதமெனச் சமைத்த பொங்கலும் பகலவனுக்கும் படைத்திடுவார்!
சுற்றத்துடன் பாசப் பொங்கலையும் பகிர்ந்திடுவார்!
கட்டழகு காளையரும் ஏறும் தழுவிடுவார்!
அங்கே அவர்தம் வீரத்தையும் விதைத்திடுவார்!
நதியோடும் கரையோரம் நாகரிகம்
கண்டநாள்!ஏட்டிலே எழுதி
வைத்த அறுவடை நாள்!
பாரினில் தமிழர் பண்பாட்டை
விதைத்த நாள்!
அந்நாள்”இந்நாள்”
தமிழருக்குப் பொன்னாள்!
நாம் தமிழருக்கு திருநாள்!
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு!
அதைப் போற்றிப் புகழ்வது தமிழுக்காற்றும்
பெருந்தொண்டு!
தைத்திருநாளில் தமிழரின் வாழ்வும் சிறக்கட்டும்!
தமிழர் உள்ளங்கள் கரும்பென இனிக்கட்டும்!
தமிழர் இல்லங்களில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்!
வையத்தில் சமத்துவம் நாள்தோறும் நிலைக்கட்டும்!
நன்றி!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.