spot_img

தமிழினத்தின் வலி(மை)

சூன் 2025

தமிழினத்தின் வலி(மை)

காலம் காலமாக வாழ்ந்த நிலம்
கனவுகள் பல கொண்டு கட்டிய இல்லம்!

ஊண் உறக்கம் தொலைத்து
உழைத்துச் சேர்த்த சொத்து!

கண் முன்னே கலையுதே
கற்சுவரும் சரியுதே!

செந்நீர் சிந்தி கட்டிய வீடு
கண்ணீர் விடக் கரையுதே!

கண்ணயரக் காணியில்லை!
ஒதுங்க இடம் ஏதுமில்லை!

உட்கார ஒரு நிழல் இல்லை!
ஒடுங்கிட ஓரடியில்லை!

பாளம் பாளமாக பிளக்கப்பட்டது சுவர் மட்டுமா?
எமது நிலம் எமது கனவு எமது ஆசைகள்
எமது குடும்பம் எமது உழைப்பு எமது வாழ்க்கை!

எமது கல்வி எமது நிம்மதி எமது எதிர்காலம்
எமது வளம் எமது நலம் எமது செழுமை ஈற்றாக
எங்கள் இதயமும் பிளக்கப்பட்டதே!

பெயர்த்து வீசப்பட்ட இடம் அறுபது மைலுக்கப்பால்!
உயிர் பிழைக்க உழைக்க வரவேணும் பல தடைகளுக்கப்பால்!!

ஆலமரம் பெயர்த்துத் தொலைவில் பதியமிட்டதைப்
போல் நாங்களும் நடைபிணமாக்கப் பட்டோமே!

எம் நிலையும் வாழ்க்கையும் அந்த மரம் போன்றது தானா?
துளிர்க்குமா? வளருமா? காயுமா?
சாயுமா? மண்ணோடு மடியுமா???? யாரறிவர்?

ஒரு வீடு நம் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் கனவில்லையா?
எங்களின் வலி உங்களின் வலி இல்லையா? வலிக்கவில்லையா?

எலி வளையே ஆனாலும் தனிவளை என்றார்களே!
எங்களுக்கு மட்டும் இது நேர்ந்தது ஏன்?

உங்களுக்கும் நாளை என்ற அறிவிப்பு தான் இது!
குருவிக் கூட்டைக் கூடக் கலைக்கக் கூடாது
என வழிவழியாய்க் காத்து ஓம்பிவரும் தமிழினமே!!

எமது வீட்டையே இடித்துவிட்டார்களே!
என்ன செய்யப் போகிறீர்கள்?
ஆற்றைச் சுரண்டினார்கள்!
அலட்டிக் கொள்ளாமல் இருந்தோம்!

காட்டை அழித்தார்கள்! கண்டும் காணாதவரானோம்!
விளைநிலத்தை பிடுங்கினார்கள்!
விவசாயி தானே நமக்கென்ன என்றிருந்தோம்!

மலைகளைத் தகர்த்து கடத்துகிறார்கள்!
மரம் போல் மலைத்து நிற்கிறோம்!
வீட்டை இடித்து நிலத்தைப் பறித்து விரட்டுகிறார்கள்!

ஏதிலிகளானோம் எம் தாய் நிலத்திலே! எங்கு செல்வோம்!
திருட்டுத் திராவிட விடியலில் மடியும் விட்டில் பூச்சிகளானோமே!

உன் கண்முன்னே உன் நிலம் வளம் பிடுங்கப்படும்! உன்னால் ஏதும் செய்ய முடியாது! பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர!

அண்ணன் அன்றே சென்னார்!
கேட்பதற்குத் தான் ஆளில்லை!

அண்ணன் முகம் கண்முன்னே வருகிறதே!
அண்ணன் மட்டும் தான் இன்று
ஆறுதலாய் எம் முன் வந்து நிற்கின்றான்!

பள்ளம் கண்ட இடமெங்கும் பாய்ந்தோடும் நீரைப் போல்!
பாதிக்கும் இடங்களெங்கும் பாய்ந்தோடி வருகிறான்!

இன்னல் படும் இடமெங்கும் இடையறாது நிற்கின்றான்!
அண்ணன் துடிக்கிறான்! தவிக்கிறான்! நம்மைக் காக்க!

அனைத்து துன்பப் பூட்டுகளுக்கும் திறவுகோல் அதிகாரமே!
அண்ணனிடம் அதிகாரம் இருந்தால் அரை நொடி போதுமே!

வலியைத் தந்தவனுக்கே அந்த வலியை திருப்பித் தருவோம்!
வலி துடைத்து நிற்பவருக்கு வலிமையைப் பெருக்கித் தருவோம்!

இழந்ததை மீட்போம்!
இருப்பதைக் காப்போம்!
பெருங்கூட்டமாய் இணைவோம்!
வரும் துயர்களைக் களைவோம்!

விவசாயி வெல்லட்டும்!
தமிழினம் தலை நிமிரட்டும்!
ஆழமாகச் சிந்திப்போம்!
ஈழத்தில் சந்திப்போம்!

திரு. ம.இராமகிருசுணன்
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles