தமிழ்நாடே வாழியவே!
தென்னவர் நாட்டின் இன்பத் தமிழே வாழியவே!
தேமதுரை நாட்டில் வளர்ந்த அமிழ்தே வாழியவே!
வாளோடும் வேலோடும் பிறந்திட்ட தமிழர் நாடே!
பொங்கு தமிழும் புரட்சியும் கொண்ட பொன்னாடே!
இன்பத்தமிழும் பருகிட இறைவன் தேடிவந்த தமிழர் நாடு!
வான்புகழ் கொண்ட வள்ளுவரைப் போற்றிப் புகழ்ந்த தென்னாடு!
முழுமதியாய் முகவரியாய் முன்னவர் தந்த தமிழ்நாடு!
வரலாறும் வானவியலும் பற்பல படைத்த தமிழ்நாடு!
பைந்தமிழர் பெருமைகள் மிகுந்த தமிழ்நாடு!
பரமனும் பாட்டிற்கு ஏங்கிய பழந்தமிழ்நாடு!
வளங்கள் நிறைந்த சேர சோழப் பாண்டியத் திருநாடு!
முன்னவர் மூவேந்தரும் போற்றிப் புகழ்ந்த பெருநாடு!
காவிரி வைகை பாய்ந்தோடும் தாமிரபரணி அழகைப்பாரு!
இதை அள்ளிப்பருகித் தமிழ்க்கோவை அருளிய புலவர்கள் பலநூறு!
படைகட்டி ஆண்ட தமிழரின் வீரம் வெண்பாக்களும் பாடுதே!
பகைத்து நின்றவர் மண்ணோடு பாய்ந்ததை வீரவரலாற்றைக் கூறுதே!
தாய்மொழி தமிழுக்கு உயிர்நீத்த ஈகியர் நாடு!
ஈசியரைப் போற்றி வணங்கிடும் செந்தமிழர் நாடு!
இறைவன் அருளிய சங்கத்தமிழின் புகழ் ஓங்குக!
அன்னைத் தமிழை அருந்தமிழைப் போற்றிப் பாடுக!
தமிழர் தெருக்கள் எங்கும் தமிழ் ஒலிக்கட்டும்!
தரணியில் இனியேனும் தமிழ்க்குடிகள் சிறக்கட்டும்!
முத்தமிழே மூத்தத்தமிழே மூப்பில்லாத் தமிழே முதுமொழியே வாழியவே!
தமிழ்நாடே பொன்னாடே எந்நாடே தென்னாடே வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத் தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.