அக்டோபர் 2023
திருவருட்பா
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!
மருவு பெண்ணாசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும், நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்!
தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!!
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண்டுவனே.
– திருவருட்பிரகாச வள்ளலார்
அக்டோபர் 5 – வடலூர் இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார் பிறந்த நாள்
(1823) 200வது ஆண்டு