பிப்ரவரி 2024
தைத்திருநாள்!!!
இயற்கையெனும் எழில் சோலையில்
சேவலும் விழித்தெழும் வேளையில்!
காகங்கள் கரைந்து போக
மேகங்கள் ஊர்ந்து போனதே!
பட்டென வானத்தின் தாழ்திறந்து
கதிரவனும் மேலே எழுந்துவர!
விடியலை நோக்கி விரைந்து
பொழுதும் அழகாய்ப் புலர்ந்ததே!
நற்காலை நேரத்தில் நாற்புறமும்
பனித்துளிகள் சிதறிக் கிடக்க!
தைத்திருநாளில் நங்கையரும் வாசலில்
அரிசிமாக்கோலம் இட்டு முடிக்க!
பகலவனின் பார்வை பட்டே
பூசணிப்பூ பூத்து மலர்ந்திட!
அழகு மங்கையரின் உள்ளமும்
அளவில்லா மகிழ்ச்சியில் கூத்தாடிட!
வடிவான வஞ்சியர் வரைந்த
வண்ணக் கோலம் கண்டு!
எறும்புகளும் சாரிசாரியாய்க்
கூடி ஊர்ந்திடுமே அன்று!
வெய்யோனின் வருகையை எதிர்நோக்கி
வாசலிலே மண்ணடுப்பு அமைத்து!
விழிபூத்த மரபுமாறா மக்களும்
வேட்கையோடு வீதியில் நிறைந்தனர்!
புதுப்பானையில் பொங்கல் வைத்து!
புத்தாண்டெனப் பட்டாடை தானுடுத்தி!
வாசல்வரும் வளர்நங்கையாம் தைமகளை
வரவேற்று வழிபிறக்க வேண்டினர்!
மங்கையரும் குலவையிட – பால்
பொங்கியது போல் அன்பர்
உள்ளமும் தான் பொங்கிடுமே!
உலகத்தார் வாழ்வும் இனிக்கட்டுமே!
பழந்தமிழரின் தனித்துவமிகு பண்டிகையிது!
இயற்கைக்கு நன்றிநவிலும் நல்லநாளிது!
ஏறுதழுவி இனவீரமுரைக்கும் பொழுதிது!
தைத்திருநாளிற்கு தரணியில் நிகரேது!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.