செப்டம்பர் 2022
நாடோடிக் கவிஞன்
தீக்குள் எமையிட்ட காலத்தில், எமக்குள் தீயிட்டவன் …. அகவை ஐந்தில் அடுக்களை புகுந்தோரை அறிவூட்டி விடுவித்தவன் நீ…. சாதியெனும் சாபக்கேடை சரித்திரத்தில் சருகைப் போல் பொசுக்கியவன் நீ….
ஆயுத புரட்சி ஆர்ப்பரிக்க, அகிம்சையதுவோ வேரூன்ற – அக்காலத்தே அறிவுப் புரட்சி செய்தவன் நீ…. மீசையதை முறுக்கிவிட்டு நேர்நின்ற பார்வையால் மூடர்களை முற்றிலுமாய் முடக்கியவன் நீ…..
உனை கடக்கும் காற்றுக்கே சுதந்திர வேட்கை பற்றிடுமெனில் உன் முழக்கம் பரவிய வீதிகள் மட்டும் விதிவிலக்கோ? முண்டாசு நீயுடுத்தி எழுத்தாணி ஏந்தி நின்றால்
எழுத்துக்கும் தீப்பிடிக்கும் உன் சொல்கேட்கும் மாந்தர்தம் உள்ளமெலாம் கொதி கொதிக்கும் விடுதலை வேட்கையது சுவாசம்போல் மாறிவிடும் மங்கையருக்கோர் மறுமலர்ச்சி மவர்ந்து நல் மாற்றம்பெரும். நாடோடி கவிஞன் நீ நாளிதழ் நடத்தினாயே..!
சுதந்திர தாகத்தை எமது மூச்சுக்குள் புகுத்தினாயே..! மண் காக்க உறுபசி மறந்த கவிஞனை தமிழர் நாம் மறந்து தான் போகலாமோ..?
எண்ணத்தில் எழுதி விதைத்திடுங்கள் – எமது எழுத்தாணியில் புரட்சியை விதைத்த தீ எங்கள் பார(தீ) என்று….. முண்டாசு கவிஞனுக்காக இந்த முழுமைப்பெறா கவிஞனின் வாழ்த்துப்பா!
திரு. சோழன் பாரதி,
செந்தமிழர் பாசறை – பகரைன்.